Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 128)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
ஔஷதஸேவை பண்ணாதவர்களுக்கு அபிமத வஸ்துக்களிலே அத்தைக் கலசியிடுவாரைப்போலே ஈச்வரனைக் கலந்து விதிக்கிறவித்தனை.
தந்நிதாநந்தன்னை யருளிச்செய்கிறார் (ஔஷதஸேவை) இத்யாதியாலே.
அதற்கான காரணத்தை அருளிச்செய்கிறார்.
அதாவது அத்யந்தருக்ணராய்த் திரியா நிற்கச்செய்தே அத்தை அவிளம்பேந போக்குமாப்தமான மஹௌஷதத்தை ஸேவிக்கச்சொன்னா லதுக்கிசையாத பால புத்ராதிகளுக்கு அவர்களாசைப்பட்டு விநியோகங்கொள்ளும் வஸ்துக்களிலே அந்த ஔஷதத்தைக் கலசியிடும் வத்ஸலரான மாத்ராதிகளைப்போலே, சீக்ரமாக ஸம்ஸார வ்யாதியைத் தீர்க்கும் ஸித்தோபாயமாகிற நச்சுமாமருந்தை ஸ்வப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பூர்வகமாக ஸேவிக்கச் சொல்லி முதலிலேயுபதேசித்தால், அநாதியாய் வருகிற வாஸநையாலே அதுக்கிசையாத சேதநரையும் விடமாட்டாமையாலே அவர்களுக் கபிமதமான ஸ்வயத்ந ரூபமாயிருக்கிற உபாஸநத்திலே ததங்கத்வேந ஸித்தோபாயமான வீச்வரனைக் கலந்து தாத்ருசமான உபாஸநத்தையவர்களுக்கு மோக்ஷோபாயமாக விதிக்கிறவித்தனையென்கை. த்ருஷ்டாந்தத்தில் அபிமதவஸ்து வ்யாதிஹரமன்றியே தந்மிச்ரமாக ப்ரயோகித்த ஔஷதமே வ்யாதி ஹரமாகிறாப்போலே, தார்ஷ்டாந்திகத்திலும், உபாஸநமன்றிக்கே தந் மிச்ரனான வீச்வரனே யுபாயமென்னுமிடம் ஸம்ப்ரதிபந்நம். அவ்யவதாநேந ஸேவிக்குமளவில் அவிளம்பேந வ்யாதியைப் போக்கும் ஔஷதம் அபிமத வஸ்து மிச்ரமானபோது விளம்பேந கார்யகரமாகிறாப்போலேயாய்ந்து, உபாஸந மிச்ரனானபோது ஈச்வரன் விளம்ப்ய பலப்ரதனாகிறதும்.
– ஒரு சிறுவன் நோயால் மிகவும் தீவிரமாகத் தாக்கப்பட்டுள்ளான் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அந்த நோயை மிகவும் விரைவாகப் போக்கவல்லதான சிறப்பான மருந்து ஒன்றைப் பருகும்படி உரைத்தால் அதனை அந்தச் சிறுவன் கேட்கமாட்டான். ஆகவே அவன் மிகவும் விருப்பத்துடன் உண்கின்ற உணவில் அந்த மருந்தைக் கலந்து அவனது தாய் அளிப்பாள். இது போன்று ஸம்ஸாரம் என்ற நோயை மிகவும் விரைவாகத் தீர்க்கவல்லதான, திருவாய்மொழி (3-4-5) – நச்சுமாமருந்தை - கூறுவதான, ஸர்வேச்வரன் பற்றி தொடக்கத்திலேயே உபதேசம் செய்தால் யாரும் கேட்கமாட்டனர். ஏன் என்றால் எல்லையற்ற காலமாகத் “தங்களது முயற்சி” என்ற வாஸனையால் பீடிக்கப்பட்டதால் ஆகும். ஆகவே அவர்களது விருப்பத்திற்கு ஏற்றதான “தங்கள் முயற்சி” என்ற வடிவத்தில் உள்ளதான பக்தியில், அத்தகைய பக்திக்கு அங்கமாக ஸித்தோபாயமாக உள்ள ஸர்வேச்வரனைக் கலந்து, அந்த பக்தி அவர்களுக்கு மோக்ஷஸாதனம் என்று விதிக்கப்படுகிறது. உபமானத்தில் நோயைக் குணப்படுத்தும் மருந்தாக உள்ளது அதில் கலக்கப்படும் வெல்லம் அல்ல; அதனில் காணப்படும் மருந்தே ஆகும். இதே போன்று மோக்ஷத்திற்கு உபாயமாகப் பக்தி இருப்பதில்லை, அந்த பக்தியில் கலக்கப்பட்டு உரைக்கப்படும் ஸர்வேச்வரனே ஆகிறான். இதுவே எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இன்றி ஒப்புக்கொள்ளப்படும் கருத்தாகும். மேலும் எந்த ஒரு பொருளும் கலக்கப்படாமல் நேரடியாக மருந்தாக மட்டுமே உட்கொள்ளப்படும் மருந்து என்பதே விரைவாக நோய் தீர்த்தல் என்ற பலனை அளிக்கிறது; அத்தகைய மருந்து விரும்பப்படும் மற்ற பொருள்களுடன் கலக்கப்படும்போது பலன் தர பலநாள் ஆகிறது. இது போன்று பக்தியால் கலக்கப்பட்ட ஸர்வேச்வரன், மோக்ஷம் அளிக்கப் பல நாட்கள் ஆகலாம்.