Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 127)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

வேதாந்தங்கள் உபாயமாக விதிக்கிறபடியென் என்னில்;

இப்படி ஸ்வரூப விரோதாதி தோஷ துஷ்டமான வித்தை, ஹிதாதநுசாஸநம் பண்ணுகிற வேதாந்தங்கள் ”ஓமித் யாத்மாநம் த்யாயத”, ”ஆத்மாநமேவ லோக முபாஸீத”, ”ஆத்மாவா அரே த்ரஷ்டவ்யச் ச்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸிதவ்ய:” என்று இச்சேதநனுக்கு மோஷோபாயமாக விதிக்கிறதுக்கு நிதாநமருளிச் செய்வதாக, தஜ்ஜிஜ்ஞாஸு ப்ரச்நத்தை யநுவதிக்கிறார் (வேதாந்தங்கள்) என்று தொடங்கி.

– இப்படியாகப் பக்தி என்பதை உபாயமாகக் கொண்டால் அது ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு விரோதமாக உள்ளது. ஆனால் இத்தகைய பக்தி என்பதையே நமது நன்மையை உபதேசிக்கும் வேதாந்தங்கள் பின்வருமாறு கூறுகின்றன: முண்டக உபநிஷத் (2-2-6) – ஓமித் யாத்மாநம் த்யாயத - பரமாத்மாவை ஓம் என்று உபாஸிக்கவேண்டும். ப்ருஹத் உபநிஷத் (1-4-15) - ஆத்மாநமேவ லோக முபாஸீத – இந்த உலகைத் தனது சரீரமாகக் கொண்டவன் பரமாத்மா என்று உபாஸிப்பானாக ப்ருஹத் உபநிஷத் ( 4-4-5) – ஆத்மாவா அரே த்ரஷ்டவ்யச் ச்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸிதவ்ய: - அவனே பார்ப்பதற்கு ஏற்றவன், கேட்பதற்கு ஏற்றவன், மனனம் செய்வதற்கு ஏற்றவன், த்யானிப்பதற்கு ஏற்றவன். அதாவது இவை ஏன் பக்தி என்பதை மோக்ஷ உபாயமாக விதிக்கின்றன என்ற காரணத்தை அருளிச்செய்யும்விதமாக, அதனை அறிந்து கொள்ள ஆவல் கொண்ட ஒருவன் எழுப்பும் கேள்வியை உரைக்கிறார் - வேதாந்தங்கள் ஏன் பக்தியைக் கூறின? – என்று.