Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 126)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

பர்த்ருபோகத்தை வயிறு வளர்க்கைக்கு உறுப்பாக்குமாபோலே இவருக்குமவத்யம்.

இன்னமு முபாயாந்தரத்துக்கொரு தூஷணம் சொல்லுகிறார் (பர்த்ரு போக) இத்யாதியாலே.

பக்தியை உபாயம் என்று கொள்வதற்கு மேலும் ஒரு தோஷம் உண்டு என்கிறார்.

அதாவது பார்யையானவள் ஸ்வயம் ப்ரயோஜநமான பர்த்ருபோகத்தை ஸ்வோதர போஷணத்துக்கு ஸாதநமாக்கிக் கொள்ளுமளவில், தன்னை பார்யையாக விரும்பின பர்த்தாவுக்கும் தத்பார்யையென்று பேரிட்டிருக்குற தனக்குமவத்யமாமாப் போலே, பகவத் வைலக்ஷண்யாநுபவத்தாலே விளைந்த போக ரூபையான பக்தியை மோக்ஷ ஸாதநமாக்குமளவில் தன்னை சேஷபூதனாக விரும்பித் தன்னோடே கலந்து பரிமாறினவீச்வரனுக்கும் தச்சேஷபூதனென்று பேரிட்டிருக்கிற தனக்குமவத்யமாய்த் தலைக்கட்டுமென்கை. “ராத்ரி பர்த்தாவோடே ஸம்ச்லேஷித்து விடிவோறே கைக்கூலி தரவேணும் என்று வளைக்குமாப்போலே, பக்தியையுபாயமாகக்கொள்ளுகை” என்றிறே பிள்ளானுமருளிச்செய்தது.

மனைவி ஒருவள் வேறு எதனையும் இன்பம் அளிப்பதற்குச் சாதனம் என்று ஆக்காமல், தானே தனது கணவனின் இன்பத்திற்கு ப்ரயோஜனமாக உள்ளாள். அப்போது தனது வயிறு வளர்ப்பதற்காக மட்டுமே (அதாவது தான் பிழைப்பதற்காக) அந்த இன்பத்தை எண்ணியபடி இருந்தாள் என்றால் - தன்னை மனைவி என்பதால் விருப்பத்துடன் உள்ள கணவன், அவனுக்கு மனைவி என்ற இரண்டு பேருக்குமே தாழ்வாகிவிடும். அது போன்று ஸர்வேச்வரனின் மேன்மை, குணங்கள் போன்றவற்றின் ஈடுபாடு காரணமாக ஏற்பட்ட பக்தி என்பது மோக்ஷத்திற்கான உபாயம் என்று எண்ணப்பட்டால் - தன்னை அடிமை என்று எண்ணித் தன்னுடன் அன்பாகப் பழகியபடி உள்ள ஸர்வேச்வரன், அவனுடைய அடிமை என்றுள்ள சேதனன் ஆகிய இருவருக்குமே தாழ்வாகிவிடும். ”இரவில் கணவனுடன் கூடியிருந்துவிட்டு, காலை நேரம் வந்தவுடன் மனைவியானவள் அவ்வாறு இரவு இருந்ததற்குக் கூலி கேட்பதை ஒத்ததே பக்தியை உபாயமாகக் கொள்வதாகும்”, என்று திருக்குருகைப்பிரான்பிள்ளான் அருளிச்செய்தது காண்க.