Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 125)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

அவன் தந்தத்தைக் கொடுக்குமிடத்தில், அடைவிலே கொடுக்கில் அநுபாயமாம்; அடைவு கெடக் கொடுக்கில் களவு வெளிப்படும்.

கோதாநத்தில் பிதாவுக்கு புத்ரன் தக்ஷிணை கொடுக்குமாப்போலே, அவன் தந்ததுதன்னை அவனுக்குக் கொடுத்தாலோவென்ன வருளிச்செய்கிறார் (அவன்) என்று தொடங்கி.

– உபநயனத்தில் ப்ரம்மோபதேசத்தின்போது, தன்னுடைய தந்தையிடம் வாங்கிய பணத்தையே தந்தைக்குப் பிள்ளை தக்ஷிணை அளிப்பதுண்டு. அது போன்று இங்கும் ஸர்வேச்வரன் அளித்ததை அவனிடம் திரும்ப அளிப்பதில் தவறில்லையே என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

(அவன் தந்தத்தைக் கொடுக்கையாவது) “விசித்ரா தேஹ ஸம்பத்தி ஈச்வராய நிவேதிதும், பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மந் ஹஸ்த பாதாதி ஸம்யுதா” என்றும், “அந்நாள் நீ தந்த வாக்கை” என்றும் சொல்லுகிறபடியே - அடியிலே அவன் தந்த கரணகளேபரங்களை “மந்மநாபவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு” என்றும், ”ஸததம் கீர்த்தயந்தோ மாம் யதந்தச்ச த்ருடவ்ரதா” என்றும் சொல்லுகிறபடியே த்யாநார்ச்சந ப்ரணாமாதிகளாலே தச்சேஷமாம்படி பண்ணுகை. (அடைவிலே கொடுக்கையாவது) – ததீயமென்னும் புத்தியாலே ஸமர்ப்பிக்கை. இப்படி கொடுக்கில் (அநுபாயமாம்) என்றது – அவனத்தை யவனுக்கே கொடுத்தவித்தனை யொழியத் தானொன்று கொடுத்ததா காமையாலே, அது பேற்றுக்கு ஸாதநமாகாதென்றபடி. (அடைவுகெடக் கொடுக்கையாவது) மதீயமென்னும் புத்தியாலே ஸமர்ப்பிக்கை. இப்படி செய்யில் (களவு வெளிப்படும்) என்றது – பகவத் த்ரவ்யாபஹாரம் ப்ரகாசிக்குமென்றபடி. ராஜமஹேந்த்ரன்படியை ரஹஸ்யத்திலே களவு கண்டு ஓலக்கத்திலே கொடுக்குமாப் போலேயிறே இவன் கொடை.

“அவன் தந்தத்தைக் கொடுக்கையாவது” என்றால் கீழே உள்ள பல வரிகளில் கூறப்பட்டபடி த்யானம், அர்ச்சனை, வணங்குதல் போன்ற பல செயல்களாலும் அவன் தந்த உடலை அவனுக்கே அடிமை என்னும்படி பண்ணுகையாகும். ஸ்ரீவிஷ்ணுதர்மம் - விசித்ரா தேஹ ஸம்பத்தி ஈச்வராய நிவேதிதும், பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மந் ஹஸ்த பாதாதி ஸம்யுதா - அந்தணரே! வியக்க வைப்பதாகவும், கைகால்களுடன் கூடியதாகவும் உள்ள இந்தச் சரீரம் என்பது ஈச்வரனை வணங்குவதற்காக மட்டுமே படைக்கப்பட்டது. திருவாய்மொழி – அந்நாள் நீ தந்த வாக்கை – நீ எனக்கு அளித்த இந்த உடல் கீதை (9-31) - மந்மநாபவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு - என்னிடம் மனம் வைப்பாய், என்னிடம் பக்தியுடன் இருப்பாய், என்னை வணங்குவாய். கீதை (9-14) – ஸததம் கீர்த்தயந்தோ மாம் யதந்தச்ச த்ருடவ்ரதா – எப்போதும் என்னையே பாடுபவராகவும், எனது கைங்கர்யங்களில் ஈடுபட்டவராகவும், என்னுடன் இருப்பதையே விரும்புகிறவராகவும் த்யானிக்கின்றனர். ”அடைவிலே கொடுக்கையாவது” என்றால் அவனது உடைமை என்ற எண்ணத்துடன் அளித்தல் என்பதாகும். “அநுபாயமாம்” என்றால் இப்படிப்பட்ட எண்ணத்துடன் அளிக்கும் போது, அவனுக்கு உடைமையான ஒன்றை அவனிடமே மீண்டும் அளித்ததாகும் அல்லாமல், தான் புதிதாகக் கொடுத்தது ஆகாது; எனவே அது பேற்றுக்கு உபாயம் அல்ல. ” அடைவுகெடக் கொடுக்கையாவது” என்றால் அவனது உடைமை என்று எண்ணாமல், என்னுடையது ஒன்றை அவனிடம் கொடுத்தேன் என்ற எண்ணத்துடன் அளிப்பதாகும். இவ்விதம் செய்தால் “களவு வெளிப்படும்” என்பது என்ன? எம்பெருமானின் ஆபரணத்தைக் களவு செய்த செயலானது உலகிற்கு வெளிப்படும் என்று கருத்து. உதாரணமாக, நம்பெருமாள் தனது திருமார்பில் அணிந்து கொள்ளும் ஆபரணமான “ராஜமஹேந்த்ரன்படி” என்பதை யாரும் அறியாமல் திருடிக்கொண்டு சென்ற ஒருவன், சில நாட்கள் கழித்து அந்த ஆபரணத்தைத் தான் நம்பெருமாளுக்குச் சாற்றுவதற்காகக் கொடுப்பது போன்றதாகும். இது போன்று மற்ற உபாயங்களைக் கடைபிடிப்பவர்களின் செய்கை உள்ளது என்று கருத்து (குறிப்பு: மூன்றாம் குலோத்துங்கன் என்பவன் நம்பெருமாளுக்கு அளித்த ஆபரணங்களில் ராஜமஹேந்த்ரன்படி என்பதும் ஒன்று. இந்த ஆபரணம் தற்போது பெரியகோயிலில் இல்லை என்பது அறிந்தவர்களின் கூற்று).