Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 124)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
தான் தரித்ரனாகையாலே தனக்குக்கொடுக்கலாவதொன்றில்லை.
ஆனால் விஸத்ருசமான பலகறையையுமெலுமிச்சம் பழத்தையு முபஹாரமாகக் கொடுத்த, ரத்நத்தையும் ராஜ்யத்தையும் பெறுகிறவர்கள்தான் பெறுகிறபடியென், அவ்வோபாதியாகிறதென்ன; அது தனக்கு யோக்யதையில்லை யென்கிறார் (தன்) என்று தொடங்கி.
ஆனால் ஈடாகாத எலுமிச்சம்பழம் மற்றும் சோழிகள் ஆகியவற்றைக் கொடுத்து நாட்டையோ அல்லது இரத்தினக்கற்களையோ பெறுவது உண்மைதானே; இது போன்றுதானே இங்கு பக்தி என்பது உள்ளது என்று கேட்கலாம். ஆனால் அதற்கும் தகுதி இல்லை என்கிறார்.
– அதாவது, அங்கு தானும் தனக்குரியனாய் தனக்கென்னவொரு பலகறையும் எலுமிச்சம் பழமுமுண்டாகையாலே அது செய்யலாம்; இங்கு அப்படியன்றிக்கே ”யானே நீ என்னுடைமையும் நீயே” என்கிறபடியே ஆத்மாத்மீயங்களிரண்டு மங்குத்தையதாய், தனக்கென்ன ஒன்றுமில்லாத வகிஞ்சநனாகையாலே, பேற்றுக்கு ஹேதுவாக அவன் விஷயத்தில் தனக்கு ஸம்ர்ப்பிக்கலாவதொன்றுமில்லை என்கை.
– அதாவது இங்கு தான் தனக்கே உரியவன் என்று எண்ணுவதாலும், ஒரு சோழி அல்லது எலுமிச்சம்பழம் என்பது தனக்கே உரியது என்று உள்ளதாலும், இது போன்று செய்வது ஏற்கும். ஆனால் திருவாய்மொழி (2-2-9) – யானே நீ என்னுடைமையும் நீயே - என்பதற்கு ஏற்ப ஆத்மாவும், அதனுடன் தொடர்புடைய அனைத்தும் எம்பெருமானின் உடைமைகள் என்பதால் அவனுக்கே உரியதாகின்றன. எனவே மோக்ஷ விஷயத்தில் சேதனன் தனக்கு என்று ஏதும் இல்லாத தரித்ரன் ஆகிறான். எனவே எம்பெருமானுக்கு அளிப்பதற்குத் தன்னிடம் ஏதும் இல்லாதவனாகவே ஆகிறான்.