Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 123)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

ரத்நத்துக்குப் பலகறை போலேயும் ராஜ்யத்துக்கு எலுமிச்சம்பழம் போலேயும் பலத்துக்கு ஸத்ருசமன்று.

இன்னமுமிதுக்குப் பல விஸத்ருசத்வ மென்பதொரு தூஷணமுண் டென்கிறார் (ரத்நத்துக்கு) என்று தொடங்கி.

– மேலும், கிட்டுகின்ற பலனாகிய மோக்ஷத்திற்குப் பக்தி என்பது ஈடாகாது என்ற தோஷமும் பக்திக்கு உள்ளது என்று அருளிச்செய்கிறார்.

– அதாவது, த்வீபாந்தரங்களிலே சிலர் பலகறையை ஆபரணமாகப் பூண்கையாலே, பலகறையைக் கொடுத்தவர்களுக்கு ரத்நத்தைக் கொடுப்பர்கள்; உதாரரான ராஜாக்கள் ராஜ்யார்த்தியாய் வந்து ஓரெலுமிச்சம்பழத்தைக் கொடுத்தவனுக்கு ராஜ்யத்தைக் கொடுப்பர்கள்; இப்படி கொடுப்பர்களென்றால், மஹார்க்கமான ரத்நத்துக்கும் மஹாஸம்பத்தான ராஜ்யத்துக்கும், பலகறையு மெலுமிச்சம்பழமும் ஸத்ருச ஸாதநமல்லாதாப்போலே, “பக்த்யா லப்யஸ் த்வநந்யயா”, ”பக்த்யா த்வநந்யயா சக்ய:” என்கின்றபடியே, பக்தி சபலனாய் பரமோதாரனான வீச்வரன் இவன் பக்கல் பக்தி மாத்ரமே பற்றாசாக பரமபுருஷார்த்த லக்ஷண மோக்ஷத்தைக் கொடுத்தாலும், பலத் துக்கிது ஸத்ருச ஸாதநமன்றென்கை.

ஒரு சில தீவுகளில் சிலர் சோழிகளை (பலகறை) ஆபரணமாக அணிவார்கள். அங்கு சோழிகளைக் கொண்டு வந்து கொடுத்தால் அதற்கு ஈடாக இரத்தினக்கற்களை அளிப்பார்கள். இது போன்று தன்னை மிகவும் விருப்பத்துடன் வந்து காணும் ஒருவன் எலுமிச்சம்பழம் அளித்தான் என்றால், அந்த அரசன் அதற்கு ஈடாக பல நாடுகளையும் நகரங்களையும் கூடப் பரிசாக அளிப்பான். இப்படி அளித்தபோதிலும் இரத்தினக்கல்லும், நாடுநகரங்களும் சோழிக்கோ அல்லது எலுமிச்சம் பழத்திற்கோ ஈடாகுமோ? அப்படி ஆகாது என்று கருத்து. கீதை (8-22) - பக்த்யா லப்யஸ் த்வநந்யயா - வேறு எதனையும் நாடாத பக்தி மூலம் மட்டுமே அடையத்தக்கவன் என்றும், கீதை (11-54) - பக்த்யா த்வநந்யயா சக்ய: - வேறு எதனாலும் அல்லாமல் பக்தியால் மட்டுமே - என்றும் கூறுகின்றபடி, நமது பக்தி மூலமாக மிகவும் ப்ரீதி அடைந்த, தாராள மனம் கொண்ட ஈச்வரன் நம்மிடம் உள்ள பக்தியை மட்டுமே ஏற்றுக்கொண்டு மோக்ஷத்தைப் பரிசாக அளித்தாலும், அந்த மோக்ஷம் என்ற பலனுக்கு நமது பக்தி ஈடாகாது என்பதால், பக்தி மோக்ஷ ஸாதனம் அல்ல என்று கருத்து.