Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 122)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

திருக்குருகைப்பிரான்பிள்ளான் பணிக்கும்படி – மதிராபிந்துமிச்ரமான சாதகும்பம்ய கும்பகத தீர்த்தஸலிலம்போலே அஹங்காரமிச்ரமானவுபாயாந்தரம்.

இப்படி ஸ்வரூப நாசகமான உபாயாந்தரத்தினுடைய அத்யந்த நிஷித்தத்வத்தை அபியுக்த வசநத்தாலே தர்சிப்பிக்கிறார் (திருக்குருகைப்பிரான்பிள்ளான் என்று தொடங்கி).

– இப்படியாக ஆத்மாவின் ஸ்வரூபத்தை அழிக்கக்கூடியதாக உள்ளவற்றில், மற்ற உபாயங்கள் மிகவும் தாழ்ந்ததாக உள்ளன என்பதை வேதங்களை நன்றாக அறிந்தவர்களின் சொற்கள் மூலம் உணர்த்துகிறார்.

– திருக்குருகைப்பிரான்பிள்ளானாகிறார் ஸர்வஜ்ஞரான பாஷ்யகாரர் திருவடிகளிலே ஸேவித்து ததபிமத விஷயமாய் ஸகல சாஸ்த்ரங்களையுமாராய்ந்தறுதி யிட்டிருக்குமவ ராகையாலே, ஆப்த தமராயிருக்குமவரிறே. (பணிக்கும்படி) என்றது – அருளிச்செய்யும் ப்ரகாரமென்றபடி. (மதிரையாவது) - அத்யந்த நிஷித்த த்ரவ்யமாய் ஸ்வஸ்பர்ச லேசமுள்ள வஸ்துக்களையும் தன்னைப்போலே நிஷித்தமாக்குமதிறே; இத்தை அஹங்காரத்துக்கு த்ருஷ்டாந்த மாக்குகையாலே, அதினுடைய அத்யந்த நிஷித்தத்வமும்; தத்ஸ்பர்சலேசமுள்ள வஸ்துவும் தத்வத் நிஷித்தமென்னுமிடமும் தோற்றுகிறது; (சாதகும்பமாவது) - ஸுவர்ணம். (தந்மயகும்பம்) என்றது. உள்ளு த்ரவ்யாந்தரமாய் ஸுவர்ணம் மேல்பூச்சாயிருக்கையன்றிக்கே, அதுதானே உபாதாநமாகப் பண்ணின குடமென்றபடி; இத்தால் – பாத்ரசுத்தி சொல்லுகிறது. (தத்கததீர்த்த ஸலிலம்) என்கையாலே - அதுக்குள்ளிருக்கிற ஜலத்தின் பாவநத்வம் சொல்லுகிறது. (அதுபோலே அஹங்கார மிச்ரமான உபாயாந்தரம்) என்கையாலே இங்கும் பாத்ர சுத்தியும் தத்கத பதார்த்த சுத்தியும் சொல்லவேணும். அதாவது “ஆத்மா ஜ்ஞாநமயோமல:” என்கிற ஸ்வதோ நிர்மலதையாலும் பகவதநந்யார்ஹ சேஷதையாலும் பரிசுத்தமாயிறே பக்த்யாச்ரயமானவாத்மவஸ்துவிருப்பது; தத்கத பக்தியும் பகவதேகாகரதயா பரிசுத்தையிறே; அஹங்காரம் கலசிற்றில்லையாகிலொரு குறையில்லையே. ஆக, இத்தால் சொல்லிற்றாய்த்த தென்னென்னில்; ஸுவர்ணபாத்ரகதமான தீர்த்தஜலம், பாத்ரசுத்தியுமுண்டாய்த் தானும் பரிசுத்தமாயிருக்க, ஸுராபிந்து மிச்ரதையாலே நிஷித்தமாமாப்போலே, ஸ்வதோநிர்மலத்வாதிகளாலே பரிசுத்தமான ஆத்மவஸ்து கதையாய் பகவதேகவிஷயதயா பரிசுத்தையாயிருக்கிற பக்திதான், ஸ்வயத்ந மூலமான வஹங்கார ஸ்பர்சத்தாலே ஜ்ஞாநிகளங்கீகரியாதபடி நிஷித்தையாயிருக்குமென்றதாய்த்து (பணிக்கும்படி) என்றதுக்குச் சேர, வாக்யத்தின் முடிவிலே, என்று என்கிற வித்தனையும் கூட்டி நிர்வஹிப்பது.

அனைத்தும் அறிந்தவரான எம்பெருமானாரின் திருவடிகளிலே பணிந்தவராக, அவருக்கு மிகவும் அபிமான சீடராக, அனைத்து சாஸ்த்ரங்களும் ஆராய்ந்து அறிந்தவராக உள்ளவர் திருக்குருகைப்பிரான்பிள்ளான் ஆவார். “பணிக்கும்படி” என்றால் அவர் அருளிச்செய்தபடி என்று பொருள். ”மதிரை” என்றால் – மிகவும் விலக்கப்பட்ட வஸ்து; தனது தொடர்பு சிறிது ஏற்பட்டாலும் கூட, அந்த வஸ்துவையும் தன்னைப் போன்றே மிகவும் விலக்கப்பட்டதாக மாற்றவல்ல வஸ்து என்று பொருள். இதனை அஹங்காரத்திற்கு உவமையாகக் கூறுவதால், அத்தகைய அஹங்காரம் என்பது மிகவும் விலக்கப்படவேண்டிய ஒன்று என்பதும், அந்த அஹங்காரத்துடன் தொடர்புடைய அனைத்தும் விலக்கிவைக்கப்படும் என்பதும் தெளிவாகிறது. “சாதகும்பம்” என்றால் தங்கம் ஆகும். “தந்மயகும்பம்” என்றால் உட்புறம் வேறு உலோகம் ஒன்றினால் செய்யப்பட்டு, மேலே தங்கமுலாம் பூசப்பட்டது போல் அல்லாமல், முழுவதுமாகவே தங்கத்தால் செய்யப்பட்ட குடம் என்று பொருள்; இதன் மூலம் அந்தக் குடத்தின் தூய்மை உணர்த்தப்பட்டது. “தத்கததீர்த்த ஸலிலம்” என்பதன் மூலம் அத்தகைய குடத்தின் உள்ளே வைக்கப்படுகின்ற தண்ணீரின் தூய்மை கூறப்பட்டது. “அதுபோலே அஹங்கார மிச்ரமான உபாயாந்தரம்” என்றால் இங்கு பாத்திரத்தின் தூய்மை மற்றும் அந்தப் பாத்திரத்தில் வைக்கப்பட்ட பொருளின் தூய்மை கூறப்படவேண்டும். ஸ்ரீவிஷ்ணு புராணம் – ஆத்மா ஜ்ஞாநமயோமல: - ஆத்மா ஞானமயமானது, தோஷம் அற்றது - என்று கூறுவதற்கு ஏற்ப இயற்கையாகவே தோஷம் அற்ற தன்மை மற்றும் எம்பெருமான் தவிர மற்ற யாருக்கும் அடிமையற்ற தன்மை ஆகிய இரண்டாலும் மிகவும் தூய்மையாக உள்ளது ஆத்மாவாகும். அத்தகைய ஆத்மாவில் உள்ள எம்பெருமானைக் குறித்த பக்தி என்பதும், ஸர்வேச்வரன் விஷயமாக மட்டுமே உள்ளதால், மிகவும் தூய்மையானது ஆகும். அதில் அஹங்காரம் கலக்காமல் உள்ளபோது எந்தவிதமான குறையும் இல்லை. ஆகவே இதன் மூலம் உணர்த்தப்பட்டது என்ன? தங்கப்பாத்திரத்தில் வைக்கப்பட்ட தூய்மையான தண்ணீர் என்பது அந்தப் பாத்திரத்தின் தூய்மை மற்றும் தன்னுடைய தூய்மை ஆகியவற்றுடன் இருந்தாலும், அதில் சிறிது கள் சேர்க்கப்பட்டாலும் விலக்கப்படும். இது போன்று ஆத்மாவானது இயல்பாகவே குற்றங்கள் இல்லாத தன்மை போன்றவற்றால் தூய்மையாக உள்ளது. அத்தகைய ஆத்மாவில் உள்ளதாகவும், எம்பெருமானை மட்டுமே தனக்கு விஷயமாகக் கொண்டதால் மேலும் தூய்மையாகவும் உள்ள பக்தி என்பது, ”தன்னுடைய முயற்சி” என்பதை மூலமாகக் கொண்ட அஹங்காரத்துடன் தொடர்பு கொண்டால், அத்தகைய பக்தியானது ஞானிகளால் ஏற்கப்படாமல் விலக்கப்படும் என்று அறிக. “பணிக்கும்படி” என்பதற்கு ஏற்ப சூர்ணையின் இறுதியில் “என்று” என்பதைக் சேர்த்துக் கொள்ளவேண்டும்.