Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 121)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
இப்படி கொள்ளாதபோது ஏதத்ப்ரவ்ருத்தியிலே ப்ராயச்சித்தவிதி கூடாது.
கீழ்ச்சொன்னபடியே அர்த்தத்தை அங்கீகரியாதவளவில் விரோதங் காட்டுகிறார் (இப்படி கொள்ளாதபோது) என்று தொடங்கி.
மேலே கூறிய கருத்தை ஏற்காவிடில் உண்டாகும் விரோதத்தை அருளிச் செய்கிறார்.
(இப்படிகொள்ளாதபோது) என்றது - ஸ்வரூப நாசகமென்று கொள்ளாத போதென்றபடி. (ஏதத் ப்ரவ்ருத்தியில் ப்ராயச்சித்தவிதி கூடாது) என்றது “ஸ்க்ருதேவஹி சாஸ்த்ரார்த்த: க்ருதோயம் தாரயேந் நரம், உபாயாபாய ஸம்யோகே நிஷ்ட்டயா ஹீயதே அநயா; அபயஸம்ப்லவே ஸத்ய: ப்ராயச்சித்தம் ஸமாசரேத். ப்ராயச்சித்திரியம் ஸாத்ர யத் புநச்சரணம் வ்ரஜேத்; உபாயாநாமுபாயத்வ ஸ்வீகாரேப்யேததேவஹி” என்று ப்ரபந்நனானவனுக்கு ப்ராமாதிகமாக உபாயாந்தர ப்ரவ்ருத்தி வந்த காலத்தில், அபாய ப்ரவ்ருத்தியில்போலே புந:ப்ரபதநரூப ப்ராயச்சித்தத்தை விதிக்கக்கூடாதென்கை. புந: ப்ரபதநமாவது பூர்வப்ரபதந ஸ்மரணம்; புந: ப்ரயோகமன்று.
– ”இப்படிகொள்ளாதபோது” என்றால் – மற்ற உபாயங்கள் ஆத்மாவின் தன்மையை அழிக்கக்கூடியவை என்று கொள்ளாதபோது – என்று பொருள். “ஏதத் ப்ரவ்ருத்தியில் ப்ராயச்சித்தவிதி கூடாது” என்றால் - லக்ஷ்மீ தந்த்ரம் – ஸ்க்ருதேவஹி சாஸ்த்ரார்த்த: க்ருதோயம் தாரயேந் நரம், உபாயாபாய ஸம்யோகே நிஷ்ட்டயா ஹீயதே அநயா; அபயஸம்ப்லவே ஸத்ய: ப்ராயச்சித்தம் ஸமாசரேத். ப்ராயச்சித்திரியம் ஸாத்ர யத் புநச்சரணம் வ்ரஜேத்; உபாயாநாமுபாயத்வ ஸ்வீகாரேப்யேததேவஹி - சாஸ்த்ரங்களில் உரைக்கப்பட்டதான இந்த ப்ரபத்தி என்பது ஒருமுறை செய்தாலே காப்பாற்றிவிடும் தன்மை கொண்டது; மற்ற உபாயங்களாகிற அபாயங்களை ஒருவன் கைக்கொண்டால் இந்த ப்ரபத்தியில் இருந்து அவன் நழுவியவன் ஆகிறான்; விலக்கப்பட்ட தீய செயல்களுடன் மீண்டும் தொடர்பு உண்டானால் உடனே அதற்கான ப்ராயச்சித்தம் செய்யவேண்டும்; மீண்டும் ப்ரபத்தி செய்தலே இங்கு ப்ராயச்சித்தம் ஆகிறது; மற்ற உபாயங்களை நாடுதல் என்ற என்ணம் ஏற்பட்டாலே இதுவே ப்ராயச்சித்தம் – என்றது காண்க. ஆனால் ப்ரபந்நன் ஒருவன் எந்தவிதமான குறிக்கொளும் இன்றி மற்ற உபாயங்களைக் கைக்கொள்ள நேர்ந்தால், (பாவம் செய்தால் எவ்விதம் ப்ராயச்சித்தம் செய்யவேண்டுமோ அது போன்று) மீண்டும் ப்ரபத்தி செய்தல் என்ற ப்ராயச்சித்தத்தை விதித்தல் கூடாது. ”மீண்டும் ப்ரபத்தி செய்தல்” என்று லக்ஷ்மீ தந்த்ரத்தில் கூறப்பட்டது என்னவெனில், முன்பு செய்த ப்ரபத்தியை மீண்டும் நினைவு கூறுதல் என்பதே ஆகும் அல்லாமல் மீண்டும் ப்ரபத்தி செய்தல் அல்ல.