Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 120)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

“வர்த்ததே மே மஹத் பயம்” என்கையாலே பயஜநகம்; “மா சுச:” என்கையாலே சோக ஜநகம்.

இதினுடைய ஸ்வரூபநாசகத்வ ப்ரயுக்தமான தூஷணவிசேஷங்களை யருளிச் செய்கிறார் (வர்த்ததே) இத்யாதி வாக்ய த்வயத்தாலே.

– ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய தோஷங்களை அருளிச்செய்கிறார்.

– அதாவது “காலேஷ்வபிச ஸர்வேஷு திக்ஷு ஸர்வாஸுசாச்யுத, சரீரேச கதௌசாபிவர்த்ததே மே மஹத் பயம்” என்று உபாயாந்தராநுஷ்ட்டாநத்துக்கு யோக்யமான கால தேச தேஹ விஷயமாகவும், உபாயாந்தரங்கள் தன்விஷயமாகவும் எனக்கு மஹாபயம் வர்த்தியா நின்றதென்கையாலும்; உபாயாந்தர ச்ரவணாநந்தரம் அர்ஜுநனுக்கு சோகம் பிறக்க ஸ்வரூபாநுரூபோபாயத்தை யுபதேசித்து ”மாசுச:” என்று சோகாபநோதநம் பண்ணியருளுகையாலும்; ஸ்வரூப விரோதியான ப்ராபகாந்தரம் ஜ்ஞாநிகளுக்கு பயஜநகமுமாய் சோகஜநகமுமாயிருக்குமென்கை.

– ஜிதந்தே ஸ்தோத்ரம் (9) – காலேஷ்வபிச ஸர்வேஷு திக்ஷு ஸர்வாஸுசாச்யுத, சரீரேச கதௌசாபிவர்த்ததே மே மஹத் பயம் – அடியார்களை எப்போதும் கைவிடாத அச்சுதா! மற்ற உபாயங்களைக் கைக்கொள்ள ஏதுவாக புண்ணிய தேசங்கள், புண்ணிய காலங்கள், சரீரம் போன்றவை உள்ளன; அந்த உபாயங்களைக் கண்டால் எனக்கு அச்சமே ஏற்படுகிறது - என்றது காண்க. இதன் மூலம் மற்ற உபாயங்களைக் கைக்கொள்வதற்கு ஏற்றதான காலம், தேசம், சரீரம், உபாயம் போன்றவற்றைக் கண்டால் அச்சமே ஏற்படுகிறது என்பது தெளிவு. கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் போன்ற பலவற்றையும் கேட்ட பின்னரும் அர்ஜுனனுக்கு சோகமே நிலை நின்றது. எனவே ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு ஏற்றதான ப்ரபத்தி உபாயத்தை உபதேசம் செய்து, ”மாசுச: - கவலைப்படாதே” என்று அவன் சோகத்தை எம்பெருமான் நீக்கினான். ஆகவே ஆத்மஸ்வரூபத்திற்கு அழிவை ஏற்படுத்தவல்ல மற்ற உபாயங்கள் அனைத்தும் ஞானிகளுக்கு சோகத்தைப் பிறப்பிக்க வல்லவையாகும்.