Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 116)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

ப்ராபகாந்தரம் அஜ்ஞர்க்கு உபாயம்

இப்படி ப்ராபகாந்தரத்தை விரோதியென்று தள்ளலாமோ, அதுவும் மோக்ஷோபாயமாயன்றோ போருகிறது, அது பின்னையார்க்கு உபாயமென்ன வருளிச்செய்கிறார் (ப்ராபகாந்தரம்) என்று தொடங்கி.

இவ்விதம் மற்ற மோக்ஷ உபாயங்களை ஆத்மஸ்வரூபத்திற்கு விரோதி என்று ஒதுக்குவது சரியா, அவை மோக்ஷ உபாயங்கள் அல்லவா, அவற்றை விலக்கினால் அவை பின்னர் எந்த அதிகாரிகளுக்கு உபாயமாக உள்ளது போன்ற கேள்விகளுக்கு விடை அருளிச்செய்கிறார்.

– ”அஜ்ஞர்க்குபாயம்” என்றது ஸ்வரக்ஷணே ஸ்வயத்ந கந்தாஸஹமான ஸ்வரூபத்தையுள்ளபடி தர்சிப்பிக்கைக்கீடான ஜ்ஞாநமில்லாதவர்களுக்கு உபாயமா யிருக்குமென்றபடி.

”அஜ்ஞர்க்குபாயம்” என்றால், தங்களைக் காப்பாற்றிக் கொள்வதில் தங்களுக்கு முக்கியமான பங்கு உள்ளது என்று எண்ணியவர்களாக, ஆத்மஸ்வரூபத்தைச் சரியாக அறியாதவர்களுக்கு (தாங்களே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வது ஆத்மஸ்வரூபத்திற்கு விரோதம் ஆகும்) மற்ற உபாயங்கள் உள்ளன.