Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 115)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
ப்ரபகாந்தர பரித்யாகத்துக்கும் அஜ்ஞாநாசக்திகளன்று, ஸ்வரூப விரோதமே ப்ரதான ஹேது.
இதரவிஷயபரித்யாகத்துக்கும் பகவத்விஷய பரிக்ரஹத்துக்கும் ப்ரதாந ஹேதுக்களின்னதென்றார் கீழ்; இந்த ப்ரஸங்கத்திலே, இதரோபாய பரித்யாகத்துக்கு ப்ரதாநஹேதுவின்னதென்கிறார் மேல் (ப்ராபகாந்தர பரித்யாகத்துக்கும்) என்று தொடங்கி.
பெண்களுடனான தொடர்பு உள்ளிட்ட மற்ற விஷயங்களைக் கைவிடுவதற்கும், எம்பெருமானைப் பற்றுவதற்கும் உள்ள முக்கியமான காரணங்கள் இவை இவை என்று மேலே கூறினார். இங்கு ப்ரபத்தி தவிர்த்து உள்ள மற்ற உபாயங்களைக் கைவிடுவதற்கான காரணம் இவை இவை என்று அருளிச்செய்கிறார்.
ப்ராபகாந்தரங்களாவன – ப்ரபத்த்யுபாயத்தை யொழித்த உபாயங்கள் (அஜ்ஞாநாசக்திகளன்று) என்றது - அவற்றையறிகைக்கும் அநுஷ்டிக்கைக்குமீடான ஜ்ஞாநசக்திகளில்லாமை தத்த்யாகத்துக்கு ப்ரதாநஹேதுவன்று என்றபடி. (ஸ்வரூப விரோதமே ப்ரதாநஹேது) என்றது – பகவதத்யந்த பாரதந்த்ர்யமாகிற ஸ்வரூபத்துக்குச் சேராதென்னுமதுவே முக்கிய ஹேதுவென்றபடி. இத்தால் – “அஜ்ஞாநத்தாலே ப்ரபந்நர்” என்கிறவிடத்தில் சொன்ன அஜ்ஞாநாசக்திகள் முக்கியஹேதுவன்றென்னுமிடம் சொல்லுகிறது. அஜ்ஞாநாசக்திகளடியாகாவிடில் ஜ்ஞாநசக்திகளுண்டாகில் பரிக்ராஹ்யமாமிறே , ஸ்வரூபவிரோதமென்றுவிட்டாலிறே மறுவலிடாதொழிவது.
– “ப்ராபகாந்தரங்கள்” என்பவை ப்ரபத்தியைத் தவிர உள்ள மற்ற உபாயங்கள் ஆகும். “அஜ்ஞாநாசக்திகளன்று” என்றால் அப்படிப்பட்ட மற்ற உபாயங்கள் எவை என்று அறிந்து கொள்வதற்குத் தேவையான ஞானம் மற்றும் அவற்றை இயற்ற நம்மிடம் ஆற்றல் இல்லை என்பதன் காரணமாகவே அவற்றைக் கைவிடவேண்டும் என்பது அவற்றைக் கைவிடுவதற்கான முக்கியமான காரணங்கள் அல்ல - என்பதாகும். ”ஸ்வரூப விரோதமே ப்ரதாநஹேது” என்றால் – அது போன்று மற்ற உபாயங்களைக் கைக்கொள்ளுதல் என்பது எமபெருமானுக்கு மட்டுமே நாம் அனைத்துவகையிலும் வசப்பட்டவர்கள் என்பதான நமது ஆத்மஸ்வரூபத்திற்குப் பொருந்தாது என்பதால் கைவிடவேண்டும் என்று கொள்ளவேண்டும். இதன் மூலம் சூர்ணை 43ல் ”அஜ்ஞாநத்தால்” கூறப்பட்டதான அறிவு இல்லாத தன்மை மற்றும் ஆற்றல் இல்லாத தன்மை ஆகிய இரண்டும் முக்கியமான காரணம் அல்ல எனப்பட்டது. ஏனென்றால் அறிவற்ற தன்மை மற்றும் ஆற்றல் அற்ற நிலை ஆகிய இரண்டும் மற்ற உபாயங்களைக் கைக்கொள்ளாமல் இருப்பதற்கு முக்கியமாகக் காரணமாக இருந்தால், ஞானம் மற்றும் ஆற்றல் ஏற்பட்டால் அந்த உபாயங்களைக் கைக்கொள்ளக்கூடும் அல்லவோ? ஆனால் அவை ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு விரோதம் என்று எண்ணிய பின்னர் மீண்டும் தலைதூக்காது அல்லவோ?