Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 113)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

பகவத்விஷய ப்ரவ்ருத்தி பின்னைச் சேருமோவென்னில், அதுக்கடி ப்ராவண்யம்; அதுக்கடி ஸம்பந்தம்; அதுதான் ஔபாதிகமன்று; ஸத்தாப்ரயுக்தம்.

– இப்படி ஸ்வரூப ப்ரயுக்தமான தாஸ்யமே ப்ரதாநமாகில், சேஷி செய்தபடி கண்டிருக்குமதொழிய, அநந்யோபாயத்வாதிகள் குலையும்படி யவ்விஷயத்தைக் குறித்துப் பண்ணுகிற ஸ்வப்ரவ்ருத்தி சேருமோ வென்கிற சங்கையை யநுவர்த்திக்கிறார் (பகவத்விஷய ப்ரவ்ருத்தி) இத்யாதியால். அத்தைப் பரிஹரிக்கிறார் (அதுக்கடி ப்ராவண்யம்) என்று தொடங்கி.

– இவ்விதம் ஆத்மஸ்வரூபத்தின் காரணமாக உண்டான அடிமைத்தன்மை என்பதே சிறந்தது என்றால், நமது இயல்பான எஜமானனாகிய ஸர்வேச்வரன் என்ன செய்கிறானோ அப்படியே செய்து கொள்ளட்டும் என்று இருத்தல் வேண்டும். அப்படி உள்ளபோது மற்ற எதனையும் உபாயமாகக் கொள்ளாமல் இருத்தல் போன்று ஸர்வேச்வரனைக் குறித்து ஒருவன் செய்கின்ற செயல்களைத் தொடர்ந்து செய்யவேண்டுமா என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– ப்ராவண்யமாவது, அதிமாத்ர ஸ்நேஹம். அந்த ப்ராவண்யத்துக்கடி விஷய வைலக்ஷண்யமன்றோவென்ன, (அதுக்கடி ஸம்பந்தம்) என்கிறார். (ஸம்பந்தமாவது) – சேஷசேஷிபாவம். அதுதான் குணக்ருதமாயும் வாராதோ வென்ன, (அதுதான் ஔபாதிகமன்று, ஸத்தா ப்ரயுக்தம்) என்கிறார். (ஸத்தா ப்ரயுக்தம்) என்றது - இவ்வாத்மாவினுடைய ஸத்தையே பிடித்துள்ளதொன்றென்கை.

– ப்ராவண்யம் என்றால் சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட எல்லைகளையும் ஸர்வேச்வரனுக்காக மீறுகின்ற அளவிற்கு அவனிடம் உள்ள அன்பாகும். அப்படிப்பட்ட அன்பிற்குக் காரணம் அவனது திருமேனி அழகோ என்ற கேள்விக்கு, “அந்த அன்பிற்குக் காரணம் அவனுடன் நமக்கு உள்ள ஸம்பந்தமே” என்கிறார். இந்த ஸம்பந்தம் என்பது எஜமானன் – அடிமை என்பதாகும். அத்தகைய ஸம்பந்தம் என்பது குணங்கள் காரணமாக வரலாம் அல்லவோ என்னும் சந்தேகத்திற்கு, “அந்த ஸம்பந்தம் வேறு காரணங்களால் வருவது அல்ல, ஆத்மாவின் இருப்பு என்பதுடன் கூடியதாகும்”, என்கிறார். ஸத்தா ப்ரயுக்தம் என்றால், ”ஆத்மாவின் இருப்பு என்பது என்று முதல் உள்ளதோ அன்றிலிருந்து உள்ளது” என்பதாகும்.