Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 112)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

அநஸூயைக்குப் பிராட்டியருளிச்செய்த வார்த்தையை ஸ்மரிப்பது.

இவ்வர்த்தத்துக்கு ஸம்வாதமாக பிராட்டி வார்த்தையை ஸ்மரிப்பிக்கிறார் மேல் (அநஸூயைக்கு) என்று தொடங்கி.

மேலே கூறியதற்கு ப்ரமாணம் கூறும் பொருட்டு பிராட்டி அருளிச்செய்த சொற்களை நினைவூட்டுகிறார்.

– அதாவது, அத்ரி பகவாநாச்ரமத்திலே பெருமாளெழுந்தருளி மஹர்ஷியையு மநுவர்த்திருந்த வநந்தரம், தத்பத்நியான அநஸூயையைப் பிராட்டி சென்று அநுவர்த்தித்திருக்கிறவளவிலே அவள் பிராட்டியைப் பார்த்து “பந்துஜநத்தையும் அபிமாநத்தையும் ஐச்வர்யத்தையும் விட்டுப் பெருமாள் பின்னே காட்டிலே போந்தவிது தைவயோகத்தாலேயுமக்கு நன்றாகக்கூடிற்று, நகரஸ்தனாகிலுமாம், வநஸ்தனாகிலுமாம், நல்லவனாகிலுமாம், தீயவனாகிலுமாம், ஸ்த்ரீகளுக்கு தைவம் பர்த்தாவே கிடீர், நீரிப்படி எப்போதும் பெருமாள் விஷயமாகவநுகூலித்துப் போரும்” என்ன; பிராட்டி, ஸஜ்ஜித்துக் கவிழ்தலையிட்டிருந்து, எனக்குப் பெருமாள் பக்கல் பாவபந்தம் ஸ்வத: உண்டாயிருக்கச் செய்தே, அவர்தாம் குணாதிகராயிருக்கையாலே, என்னுடைய பாவபந்தத்தை குணநிபந்தமேயென்றியிருப்பர்கள் நாட்டார், அவ்வாச்ரயத்தை குணங்களோடு வ்யதிரேகித்துக் காட்டவொண்ணாமையாலே நானவர்பக்கலிருக்குமிருப்பை யறிவிக்கப் பெறுகிறிலேன், அவர் குணஹீநருமாய் விரூபருமானவன்றும் நானவர்பக்கலிப்படி காணுமிருப்பது” என்றருளிச்செய்த வார்த்தை.

அத்ரி பகவானின் ஆச்ரமத்திற்கு இராமன் எழுந்தருளி, அந்த முனிவரை வணங்கி அவரது அருளாசியைப் பெற்றான். அதன் பின்னர், அவரது பத்தினியான அநசூயையைப் பிராட்டியான சீதை வணங்கி அவள் அருகில் நின்றாள். அப்போது அநசூயை சீதையிடம், “உனது உறவினர்கள், உனக்குத் தாழ்வு ஏற்படும் என்ற உணர்வு, செல்வம் போன்ற பலவற்றையும் நீ கைவிட்டாய். இராமனுடன் கானகம் வந்தாய். இந்த வாய்ப்பு உனக்கு அவனது ஸங்கல்பத்தால் கைகூடியது. நாட்டில் உள்ளபோதிலும், கானகத்தில் உள்ளபோதிலும், நல்லவனாக உள்ளபோதிலும், தீயவனாக உள்ளபோதிலும் பெண் ஒருவளுக்கு அவளது கணவனே முதல் தெய்வம் ஆவான். நீ இப்படியே எப்போதும் இராமனுக்குத் தொண்டு புரிந்தபடி இருப்பாயாக”, என்றாள். இதனைக் கேட்ட சீதை மிகுந்த நாணம் கொண்டு தனது தலையைத் தாழ்த்தியபடி, ”எனக்கு இராமனிடம் உள்ள அன்பு இயற்கையனது ஆகும். அவர் மிகுந்த குணங்களுடன் கூடியவராக உள்ளதால், எனது இந்த அன்பிற்குக் காரணம் அவரது குணங்களே என்று உலகில் உள்ளவர்கள் எண்ணக்கூடும். ஆனால் இராமனை எப்போதும் குணங்களில் இருந்து தனியே பிரித்துக் காட்டஇயலாது; ஆகவே அவரிடம் நான் அன்புடன் உள்ள நிலையானது குணங்களுக்காக மட்டும் அல்ல என்று என்னால் நிரூபிக்க இயலாது. ஆனால் அவர் குணங்கள் அற்றவராக இருந்தாலும், அழகற்றவராக இருந்தாலும் நான் அவரிடம் இப்போது இருப்பது போன்று இருப்பேன்”, என்றாள்.