Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 111)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

குணக்ருத தாஸ்யத்திலுங்காட்டில் ஸ்வரூப ப்ரயுக்தமான தாஸ்யமிறே ப்ரதாநம்.

– “குணைர் தாஸ்யமுபாகத:” என்றாருமில்லையோவென்ன வருளிச்செய்கிறார் (குணக்ருத தாஸ்யத்திலும்) என்று தொடங்கி.

– அவனது குணங்களில் தோற்றுப்போய் அவனுக்கு அடிமையாக உள்ள நிலையை அடைந்தவர்கள் என்று யாரும் உள்ளனரா என்று கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– (குணக்ருத தாஸ்யமாவது) அவன் குணங்களுக்குத் தோற்றடிமை யாயிருக்கை. (ஸ்வரூப ப்ரயுக்தமான தாஸ்யமாவது) சேஷத்வைக நிரூபணியமான தன் ஸ்வரூபத்தைப் பார்த்தடிமையாயிருக்கை. ஸ்வரூபமிப்படியிருந்தாலும் குணாதிக விஷயமாகையாலே குணக்ருத தாஸ்யமுமிவ்விஷயத்திலே யநுவர்த்தியாநிற்கும்; ஆகையிறே, சேஷத்வைக நிரூபகரானவிளையபெருமாள் தாமப்படி அருளிச்செய்ததும். ஆனாலும் குணக்ருதமானது ஔபாதிகமாகையாலே அப்ரதாநமாய், மற்றையது நிருபாதிகமாகையாலே ப்ராதாநமாயிருக்கும்; அத்தைப் பற்றவிறே தத் ப்ராதாந்ய ப்ரஸித்தி தோற்றவருளிச்செய்தது.

“குணக்ருத தாஸ்யம்” என்றால் அவனுடைய குணங்களில் தோற்றுப்போய் அவனுக்கு அடிமையாய் இருத்தல் ஆகும். ” ஸ்வரூப ப்ரயுக்தமான தாஸ்யம்” என்றால் தனது அடிமைத்தனம் மூலமாக நிரூபிக்கப்படுவதாக உள்ள தன்னுடைய ஆத்மாவின் ஸ்வரூபத்தைப் பார்த்து அடிமையாக இருத்தல் ஆகும். ஆத்மாவின் ஸ்வரூபம் இப்படி உள்ளபோதிலும் ஸர்வேச்வரன் குணங்களின் கடலாக உள்ளதால் அவனுடைய குணத்தில் தோற்று அடிமையாதல் என்பது எப்போதுமே இருப்பதாகும். இப்படி உள்ளதால் அல்லவோ அடிமைத்தனம் என்பதன் மூலம் நிரூபிக்கப்படும் லக்ஷ்மணன் இராமாயணத்தில் – குணைர் தாஸ்யமுபாகத - இராமனின் குணங்களுக்குத் தோற்று அடிமையானேன் – என்றான். ஆனால் குணங்களுக்குத் தோற்றதன் காரணமாக அடிமையாதல் என்பது ஒரு குறிப்பிட்ட காரணத்தை அடிப்படையாகக் கொண்டதால் அது ப்ரதானமாக இருக்காது; மாறாக மற்றவற்றால் உண்டாகும் அடிமைத்தனம் என்பது காரணத்தின் அடிப்படையில் அமையாததால் ப்ரதானமாக இருக்கும். ஆகவே “ஸ்வரூப” என்பதன் மூலம் எந்தவிதமான காரணத்தையும் அடிப்படையாகக் கொள்ளாமல் எடுக்கின்ற அடிமைத்தனத்தின் சிறப்பை அருளிச்செய்கிறார்.