Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 110)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

”கொடியவென்னெஞ்சமவனென்றே கிடக்கும்”, ”அடியேன் நான் பின்னுமுன்சேவடி யன்றி நயவேன்” என்னாநின்றார்களிறே.

குண ஹீநமென்று நினைத்த தசையில் பகவத் விஷய ப்ரவ்ருத்தி எங்கே கண்டதென்னவருளிச் செய்கிறார் (கொடியவென்னெஞ்சம்) என்று தொடங்கி.

– எம்பெருமான் குணம் அற்றவன் என்று எண்ணிய நிலையில் அவனை விட்டுவிடவேண்டும் என்று எண்ணுவதை எங்கே காணலாம் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது “கடியன்” என்று தொடங்கி, “அறிவரு மேனி மாயத்தன்” என்னுமளவும் ஸ்வகார்யபரன், பிறர்நோவறியாதவன், ஒருவர்க்குமெட்டாதவன், வஞ்சகன், துர்ஜ்ஞேய ஸ்வபாவன் என்று அவன் குண ஹாநியைச் சொல்லி, இப்படியிருந்தானாகிலும், அதிலோக க்ரூரமான வென்னெஞ்சு அவனையல்ல தறியாதே யிருக்குமென்றும்; வேம்புக் கிட்டுப்பிறந்த புழு அந்த வேம்பையே புஜிக்குமதொழிய கரும்பைக் கண்டாலும் விரும்பாது. அப்படியே, “கடல்மல்லைக் கிடந்த கரும்பு” என்னும்படி நிரதிசய போக்யனான நீதானே வேம்பு போலே விரஸனானவன்றும், த்வதநந்யார்ஹ சேஷபூதனான நான் எனக்கு வகுந்த சேஷியான உன் திருவடிகளையொழிய வாசைப்படேனென்றும் மயர்வற மதிநல மருளப்பெற்றவர்கள் அருளிச்செய்யா நின்றார்களிறே என்கை.

– திருவாய்மொழி (5-3-5) – கடியன் - என்று தொடங்கி, “அறிவரு மேனி மாயத்தன்” என்பது முடிய உள்ள வரிகளில் அவன் தனது காரியத்தில் மட்டுமே குறியாக உள்ளவன், தன்னை எண்ணி பிறர்படும் துன்பங்களை அறியாமல் உள்ளவன், யாராலும் அடைய இயலாதவன், வஞ்சகன், அறிந்து கொள்வதற்குக் கடிமையான தன்மை கொண்டவன் போன்று அவனது குணமற்ற தன்மைகள் கூறப்பட்டன. இப்படி அவன் உள்ளபோதிலும் உலக விஷயங்களை வெறுக்கும் எனது நெஞ்சம், அவனை அல்லாமல் வேறு ஏதும் அறியாது என்றும்; வேப்பங்காயில் உள்ள புழுவிற்கு அந்த வேப்பங்காய் அல்லாமல் கரும்பு கூடக் கசப்பதால், அந்த வேப்பங்காயை மட்டுமே உண்ணும் அல்லாது கரும்பை உண்ணாது என்றும்; பெரியதிருமொழி (7-1-4) – கடல்மல்லைக் கிடந்த கரும்பு – என்று கூறுவதற்கு ஏற்ப எல்லையற்ற இனிமையானவனாக உள்ள நீ வேம்பு போன்று இனிமை அற்றவனாக உள்ள நேரங்களிலும், வேறு யாருக்கும் அடிமை அல்லாது உனக்கு மட்டுமே அடிமையாக உள்ள நான், எனக்காகவே உள்ள உனது திருவடிகள் தவிர வேறு எதற்கும் ஆசைப்படமாட்டேன் என்றும் - இப்படியாகப் பலவிதமாக மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் அருளிச்செயல்களில் காணலாம்.