Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 109)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
இப்படி கொள்ளாதபோது, குணஹீநமென்று நினைத்த தசையில் பகவத்விஷய ப்ரவ்ருத்தியும், தோஷாநுஸந்தாநதசையில் ஸம்ஸாரத்தில் ப்ரவ்ருத்தியும் கூடாது.
ஆகிலெத்தாலேயென்ன (ஸ்வரூப ப்ராப்தமென்று) என்கிறார். அதாவது - பகவத் விஷயத்தைப் பற்றுகிறது அத்தலையில் கல்யாண குணங்களடியாகவன்று இவ்வாத்மாவுக்கு வகுத்த விஷயமென்னுமத்தாலே என்கை.
– கடந்த சூர்ணையில் அருளிச்செய்த அர்த்தத்தை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் உண்டாகின்ற முரண்பாட்டினை அருளிச்செய்கிறார்.
(இப்படி கொள்ளாதபோது) என்றது, இதர விஷயங்களிலருசிக்கு ஹேது அப்ராப்ததை; பகவத் விஷயத்தில் ருசிக்கு ஹேது ப்ராப்ததை என்று கொள்ளாதே, தோஷ தர்சநத்தையும் குண தர்சநத்தையும் இவற்றுக்கு ஹேதுவாகக் கொள்ளும் போதென்றபடி. (குண ஹீநமென்று நினைத்த தசையில் பகவத் விஷய ப்ரவ்ருத்தியாவது) - பிரிவாற்றாமை கரைபுரண்டு பொருவிடாய்ப்பட்டுத் துடித்து அலமரா நிற்க சடக்கென வந்து முகங்காட்டாமையாலே குண ஹீநமென்று சிந்தித்த தசையிலே, பின்னையும் “அவனை யல்லதறியேன்” என்று அவன் பக்கலிலே அத்யபிநிவேசத்தைப் பண்ணுகை. (தோஷாநு ஸந்தாந தசையில் ஸம்ஸாரத்தில் ப்ரவ்ருத்தியாவது) - மாதா பித்ராதிகளும் பார்யா புத்ராதிகளும் ஜ்ஞாதிகளும் பந்துக்களும் க்ருஹ க்ஷேத்ராதிகளுமாய் சப்தாதி போகங்களை யநுபவித்திருக்கையாகிற ஸம்ஸாரத்தின் துக்க பஹுளத்வாதி தோஷத்தை ப்ரத்யக்ஷாதிகளாலேயறிந்தநுஸந்தியா நிற்கச்செய்தேயும், அதிலே அபிநிவேசம் நடந்து செல்லுகை. இவையிரண்டுங் கூடாதென்றபடி. அன்றிக்கே, (தோஷாநுஸந்தாந தசையில் ஸம்ஸாரத்தில் ப்ரவ்ருத்தியாவது) - தத்வ வித்துக்களான மஹர்ஷிகள் தொடக்கமானார் ஸாராஸார விவேக வத்தயா விஷய தோஷாநுஸந்தாநமுண்டாயிருக்கச் செய்தே சாஸ்த்ர விஹித தயா ப்ராப்தமென்கிற புத்தியாலே பண்ணுகிற ப்ரஜோத்பாதநாதிரூப ஸம்ஸாரத்தில் ப்ரவ்ருத்தியாகவுமாம். இப்படி கொள்ளாதபோதிவை கூடாதென்று விரோதங் காட்டுகையாலே இப்படி கொள்ளாவேணுமென்னுமிடம் ஸ்தாபிக்கப்பட்டது.
– ”இப்படி கொள்ளாதபோது” என்றால்: மற்ற விஷயங்களில் உண்டாகும் வெறுப்புக்குக் காரணம் அவர்கள் ஏற்ற விஷயமாக இல்லாமல் இருத்தலே என்றும்; ஸர்வேச்வரனிடம் கொள்ளும் ப்ரேமைக்குக் காரணம் அவன் நமக்கு ஏற்ற விஷயமாக உள்ளதால் என்றும் கொள்ளாமல் - மற்ற விஷயங்களில் உள்ள தோஷதர்சநம் மற்றும் எம்பெருமானிடம் உள்ள குணங்கள் என்பவற்றையே அந்த வெறுப்பு மற்றும் விருப்புகளுக்குக் காரணமாகக் கொள்ளும்போது - என்று பொருள். “குணஹீநம்” என்றால் – அவனையே எண்ணி பிரிவாற்றாமை காரணமாக, அவனை அடைந்தே தீரவேண்டும் என்று மிகுந்த தாகம் எடுத்தவன் போன்று துடித்துக் கொண்டு உள்ளபோது, அதனை நீக்கும்படி அவன் தனது திருமுகம் காண்பிக்கவில்லையே என்பதால், “அவன் குணங்கள் அற்றவன்” என்று எண்ணிவிடக்கூடும்; ஆகவே எம்பெருமானிடம் திருவாய்மொழி (5-3-5) – அவனையல்லதறியேன் - என்பதற்கு ஏற்ப அவனது குணங்களின் காரணமாக அவனிடம் ஈடுபட்டால், அவன் தனது குணங்களை வெளிப்படுத்தவில்லை என்ற எண்ணம் ஏற்படும்போது, அவன் மீது உள்ள ஈடுபாடு விலகிவிடக்கூடும்; ஆகவே அவனது குணங்களின் தர்சநம் என்பது காரணமாக இருத்தல் கூடாது என்று கருத்து. “தோஷாநு ஸந்தாந தசையில் ஸம்ஸாரத்தில் ப்ரவ்ருத்தியாவது” என்றால் தாய், தந்தை, மனைவி, புத்திரர்கள், பங்காளிகள், உறவினர்கள், வீடு, நிலம் என்று அனைத்துவிதமான இன்பங்களுடன் உள்ளதாக எண்ணிக் கொண்டிருக்கும் ஸம்ஸாரத்தில், துக்கம் முதலானவை அதிகமாகவே உள்ளது என்பதை நேரில் பல இடங்களில் கண்டு அறிந்த பின்னரும் அவற்றை விடவேண்டும் என்று எண்ணாமல், அதில் மேலும் நாட்டத்துடன் இருத்தல் கூடாது - என்பதாகும். அல்லது “தோஷாநு ஸந்தாந தசையில் ஸம்ஸாரத்தில் ப்ரவ்ருத்தியாவது” என்பதற்கு வேறுவிதமாகவும் பொருள் உரைக்கலாம். உண்மையான கருத்துக்களை உள்ளது உள்ளபடி அறிந்த மஹரிஷிகள் போன்றவர்கள் ஏற்கத்தக்கது எது, ஏற்கத்தகாதது எது என்று பகுத்து வைத்துள்ளனர்; இதன் மூலமாக ”விஷயங்களின் சேர்க்கை” என்பது துன்பத்தையே அளிக்கவல்லது என்ற எண்ணம் உண்டாகக்கூடும். ஆயினும் ”சாஸ்த்ரங்களால் விதிக்கப்பட்டது” என்ற காரணத்தை முன்னே வைத்து, “இந்த செயல்கள் ஏற்புடையது” என்று எண்ணி மக்கட்பேறு முதலான ஸம்ஸார செய்கைகளில் ஈடுபடுவது கூடாது என்று கொள்ளலாம்.