Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 107)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

அப்ராப்ததையே ப்ரதாநஹேது.

ஆனால் ப்ரதாந ஹேதுதானேதென்ன (அப்ராப்த்தையே ப்ரதாந ஹேது) என்கிறார்.

– அப்படி என்றால், முக்கியமான காரணம் எது என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

(அப்ராப்ததையாவது) பகவதேக போகமான ஸ்வரூபத்துக்குச் சேராததாயிருக்கை. இத்தால் - அருளருசியை விளைக்குமிடத்தில் தோஷ தர்சநாதிகளைப் பண்ணுவித்து விளைப்பிக்கையால், தோஷ தர்சநமும் அப்ராப்தி தர்சநமும் தத்வவித்துக்களுடைய அருசிக்கு கௌணமுக்க்ய ஹேதுக்களாயிருக்கு மென்றதாய்த்து.

– “அப்ராப்ததை” என்பது என்ன? எம்பெருமானை மட்டுமே அனுபவிக்க ஏற்றதான இந்த ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு விரோதமாக இருத்தல். ஸர்வேச்வரனின் க்ருபை என்பது மற்ற விஷயங்களில் வெறுப்பை ஏற்படுத்தும்போது, சரீரத்தின் தோஷங்கள் போன்றவற்றை நாம் ஆராயும்படிச் செய்தல் முதலானவை மூலமே நமக்கு அவற்றின் மீது வெறுப்பு உண்டாகும்படிச் செய்கிறது. ஆனால் உண்மையை அறிந்த உயர்ந்தவர்களுக்கு இப்படியாக வெறுப்பு உண்டாவதற்குச் சரீரத்தின் தோஷம் காணுதல் என்பது முக்கியமான காரணம் அல்ல, அவர்களைப் பொறுத்தவரை ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு விரோதமாக இருத்தல் (அப்ராப்தி தர்சநம்) என்பதே முக்கியமான காரணம் ஆகும்.