Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 105)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
அருசி பிறக்கும்போதைக்கு தோஷதர்சநமபேக்ஷிதமாயிருக்கும்.
விஷய வைலக்ஷண்யாதிசயத்தாலே விஷயாந்தராஜ்ஞாநம் விளையவும் கூடும். ஆப்தரான சிஷ்டர்களுடைய வாசாராநுஸந்தாநத்தாலே அவிஹித விஹித விஷய ஸ்பர்சத்திலச்சம் விளையவும் கூடும், அநாதிகாலமாசைப்பட்டு மேல் விழுந்து போந்த விஷயங்களிலேயருசி பிறக்கை அகடிதமிறே; அப்படிப்பட்ட அருசிதானவனருளாலே பிறக்கும்போதைக்கு அபேக்ஷிதாம்சத்தையருளிச் செய்கிறார் (அருசி) என்று தொடங்கி.
– ஸர்வேச்வரனின் திருமேனி அழகு என்பது மிகவும் வேறுபட்ட மேன்மை உடையது என்பதால், அதன் விளைவாக மற்ற விஷயங்களில் அறியாமை உண்டாகலாம். நமக்கு நன்மை செய்பவர்கள் என்று நம்பக்கூடிய ஆசார்யர்களின் ஆசாரம் பற்றி எண்ணுவதால் சாஸ்த்ரங்கள் உரைக்கின்ற பிறர்மனை நோக்குதல் கூடாது என்பது பற்றியும், விதிக்கப்பட்டபடி தனது மனைவியைச் சேர்தலிலும் அச்சம் உண்டாகலாம். ஆனால் எல்லையற்ற காலம் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்து வருவதான பெண்கள் விஷயத்தில் வெறுப்பு ஏற்படுதல் என்பது உண்டாகக் கூடியதோ? அத்தனை எளிது அல்லவே! ஆகவே அப்படிப்பட்ட வெறுப்பு என்பது அவனது க்ருபை மூலமாக நமக்கு உண்டாகும்போது நம்மிடம் நிலைநிற்க வேண்டியது என்ன என்பதை அருளிச் செய்கிறார்.
(தோஷ தர்சநமாவது) போக்யதா புத்த்யா பரிஷ்வங்கிக்கிற யோஷித்தேஹம் மாம்ஸாஸ்ருக் பூயவிண் மூத்ர ஸ்நாயு மஜ்ஜாஸ்தி ஸமுதாயமாய் சர்மாவநத்தமாய் துர்கந்தியாயிருக்கும்படியையும், போகந்தானல்பமாய் அஸ்திரமாய் துக்க மிச்ரமாய் அநர்த்தாவஹமாயிருக்கும்படியையும் ப்ரத்யக்ஷாதி ப்ரமாணங்களாலே தர்சிக்கை.
– ”தோஷ தர்சநம்” என்றால் என்ன? இன்பம் அளிக்கவல்லது என்ற எண்ணத்துடன் அணைக்கப்படும் சரீரம் என்பது - மாம்ஸாஸ்ருக் பூயவிண் மூத்ர ஸ்நாயு மஜ்ஜாஸ்தி – மாமிசம், இரத்தம், சீ, மலம், மூத்திரம், நரம்பு, மஜ்ஜை – போன்ற பலவற்றின் கூட்டம் என்பதும்; துர்நாற்றம் வீசக்கூடியது எனவும்; இன்பம் மிகவும் அற்பமாயும் நிலையற்றதாயும், துன்பம் என்பது மிகவும் அதிகமாகவும் அளிக்கவல்லது என்பதை நேரடியாகவும் ப்ரமாணங்கள் மூலமாகவும் காண்பதாகும்.