Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 104)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
இவையும் ஊற்றத்தைப் பற்றச் சொல்லுகிறது.
இந்த த்ரிவித ப்ரபந்நர்க்கும் ஸௌந்தர்யாதி த்ரயத்திலோரொன்றே விரக்தி ஹேதுவாகச் சொல்லுகிறதுக்கு நிதாநத்தையருளிச் செய்கிறார் (இவையும் ஊற்றத்தைப் பற்றச் சொல்லுகிறது) என்று.
இப்படியாக உள்ள மூன்றுவிதமான ப்ரபந்நர்களுக்கு எம்பெருமானின் ஸௌந்தர்யம் போன்று மூன்று விதமான காரணங்களில் ஏதேனும் ஒன்று, அவர்கள் மற்ற விஷயங்களின் மீது கொள்ளும் பற்றில்லாமைக்குக் காரணமாகும் என்று கூறுவதற்கான ந்யாயத்தை அருளிச்செய்கிறார்.
அதாவது (அஜ்ஞாநத்தாலே ப்ரபந்நர்) இத்யாதியால் – இவர்களுக்குச் சொன்ன ப்ரபத்தி ஹேதுக்களானவை ஓரொன்றினூற்றத்தைப் பற்றச் சொன்னாப் போலே, (அழகாலே பிறக்கும்) என்று தொடங்கிச் சொன்ன விரக்தி ஹேதுக்களான விவையும் ஓரொன்றினூற்றத்தைப் பற்றச்சொல்லுகிறதென்கை. இத்தால் – பக்திபாரவச்ய ப்ரபந்நர்க்கு, அருசிக்கடியான க்ருபையும் அச்சத்துக்கடியான ஆசாராநுஸந்தாநமு முண்டாயிருக்கச்செய்தே, பகவத் விக்ரஹ வைலக்ஷண்யத்தை ஸாக்ஷாத்கரித் தநுபவிக்குமவர்களாகையாலே எப்போதும் நெஞ்சு பற்றிக்கிடக்கையால் விஷயாந்தரங்களையறியாதபடி பண்ணுமவ்வழகே அவர்கள் பக்கலுறைத்திருக்கும்; ஜ்ஞாநாதிக்ய ப்ரபந்நர்க்கு, அஜ்ஞாந ஹேதுவான விக்ரஹ ஸௌந்தர்யத்தை அர்ச்சாவதாரத்திலே கண்டநுபவிக்கையும் பயஹேதுவான ப்ராக்தந சிஷ்டாசாராநு ஸந்தாநமுமுண்டாயிருக்கச்செய்தே, அவன் தன் க்ருபையை முழுமடைசெய்தெடுத்த விஷயங்களாகையாலே அருசிக்கடியான க்ருபையவர்கள் பக்கலுறைத்திருக்கும். அஜ்ஞாந ப்ரபந்நர்க்கு, அர்ச்சாவதாரத்திலே காதாசித்கமாக விக்ரஹ ஸௌந்தர்யாநுபவமும் அருசிஹேதுவான க்ருபையும் ஒருமர்யாதையுண்டாயிருக்கச் செய்தே, பூர்வர்களாசாரங்களையே பலகாலம் அநுஸந்தித்துக் கொண்டு போருகையாலே பயஹேதுவானவவ்வாசரங்கள் அவர்கள் நெஞ்சிலேயூன்றியிருக்கும். இவ்வூற்றத்தைப் பற்ற ஓரொன்றே விரக்தி ஹேதுவாகச் சொல்லுகிறதென்றதாய்த்து.
“அஜ்ஞானத்தால் ப்ரபந்நர்” என்று கூறிய சூர்ணை 43-ல் இந்த மூன்று விதமான ப்ரபந்நர்களுக்கும் கூறப்பட்ட ப்ரபத்திக்கான காரணங்கள் கூறப்பட்டன; அங்கு அவற்றில் ஏதோ ஒன்று அவரவர்களுக்கு அந்தந்த காரணங்களைப் பற்றுவதன் வாய்ப்பாக உரைக்கப்பட்டது. இது போன்று “அழகாலே பிறக்கும்” என்று கூறிய சூர்ணை 102-ல் கூறப்பட்ட விரக்தியின் காரணங்கள் ஒவ்வொன்றின் அடிப்படையும் அவரவர்களின் ஈடுபாட்டைப் பொறுத்தது என்கிறார். பக்தியால் பரவசத்துடன் கூடியுள்ளவர்களுக்கு மற்ற விஷயத்தின் மீது உண்டாகிற ருசியற்ற நிலைக்கு அடிப்படையாக உள்ள எம்பெருமானின் க்ருபை மற்றும் மற்ற விஷயங்களைக் கண்டு அச்சத்துடன் ஒதுங்குவதற்கு அடிப்படையான ஆசாரத்தின் நினைவும் உள்ளன என்றாலும் – அவர்கள் ஸர்வேச்வரனின் திருமேனி அழகைத் தங்கள் மனக்கண் மூலமாகத் தெளிவாகக் கண்டு அனுபவித்தபடி உள்ளவர்கள் என்பதால், அவனுடைய அழகில் மட்டுமே தங்கள் மனம் பறி கொடுத்து நிற்பதால், மற்ற விஷயங்களை அவர்கள் காணாதபடி செய்கின்ற அவனது திருமேனி அழகு என்பதே அவர்களிடம் நிலைத்திருக்கும். ஞானத்தின் காரணமாக ப்ரபந்நரானவர்களிடம் மற்ற விஷயங்களைக் கண்டு மயங்காமல் உள்ளதற்குக் காரணமான எம்பெருமானின் அழகினை அவனது அர்ச்சாவதாரத்திலே கண்டு அனுபவித்தல், மற்ற உலக விஷயங்களில் ஈடுபடுதல் கூடாது என்ற அச்சத்தின் அடிப்படையான ஆசார்யர்களின் உபதேசத்தின் மூலம் உண்டாகும் ஆசாரம் பற்றிய எண்ணம் ஆகியவை உள்ளன என்றாலும் - ஸர்வேச்வரன் தனது க்ருபை என்னும் வெள்ளத்தை மடையை முழுமையாகத் திறந்துவிட்டது போன்று அவர்களிடம் பாயும்படிச் செய்வதால் மற்ற விஷயங்களில் ஈடுபடுவதைத் தடுக்கின்ற அவனது க்ருபை என்பது அவர்களிடம் நிலைத்து காணப்படும். அறியாமையின் விளைவால் ப்ரபந்நரானவர்களிடம் அர்ச்சாவதார திருமேனியில் உண்டாகின்ற அனுபவம், மற்ற விஷயங்களில் வெறுப்பு உண்டாக்கவல்ல அவனது க்ருபை ஆகிய இரண்டும் உள்ளன என்றாலும் – பூர்வாச்சார்யர்கள் கடைபிடித்து வந்த ஆசாரங்களையே பல காலமாக எண்ணியபடி வந்ததால், அச்சத்திற்குக் காரணமாக அந்த ஆசாரங்கள் அவர்கள் உள்ளத்தில் நிலைநின்றிருக்கும். ஆகவே இத்தகைய ஈடுபாடு ஏற்படுவதற்கு ஏதேனும் ஒன்று மட்டுமே ப்ரதான காரணம் எனப்பட்டது.