Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 103)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

பிறக்கும் க்ரமமென் என்னில்; அழகு அஜ்ஞாநத்தை விளைக்கும்; அருள் அருசியை விளைக்கும்; ஆசாரம் அச்சத்தை விளைக்கும்.

இவ்வோஹேதுக்களால் பிறக்கும் க்ரமத்தை, தஜ்ஜிஜ்ஞாஸு ப்ரச்நத்தை யநுவதித்துக் கொண்டருளிச் செய்கிறார் (பிறக்கும் க்ரமம்) என்று தொடங்கி.

– மேலே பல காரணங்கள் கூறப்பட்டன. இப்படிப்பட்ட காரணங்கள் மூலமாக “மற்ற விஷயங்களின் மீது உள்ள நாட்டம் தவிர்தல்” என்பது எவ்விதம் பிறக்கும் என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு, அதற்கான விடையை அருளிச்செய்கிறார்.

(அழகு அஜ்ஞாநத்தை விளைக்கையாவது), சித்தாபஹாரியாகையாலே, விஷயாந்தரந்தன்னை யொன்றாக வறியாதபடி யாக்குகை. (அருள் அருசியை விளைக்கையாவது) – விஷயாந்தரங்களைக் காணும்போது அருவருத்துக் காரித்துமிழ்ந்து போம்படி பண்ணுகை. (ஆசாரம் அச்சத்தை விளைக்கையாவது) – ருசி செல்லச் செய்தே, அவர்களாசரித்தபடி செய்யாதபோது நமக்கநர்த்தமே பலிக்கும் என்று, விஷய ஸ்பர்சத்திலிழிய நடுங்கும்படி பண்ணுகை. ஆகையால் இக்க்ரமத்திலே பிறக்குமென்று கருத்து.

“அழகு அஜ்ஞாநத்தை விளைக்கையாவது” என்பது என்ன? காண்பவர்களின் மனதைச் சட்டென்று கவரும்படி ஸர்வேச்வரன் உள்ளதால், தன்னைத் தவிர உள்ள மற்ற சிற்றின்பங்களை ஒன்றாக அறிந்து கொள்ளாதபடிச் செய்வதாகும். “அருள் அருசியை விளைக்கையாவது” என்பது என்ன? மற்ற விஷயங்களைக் காணும்போது அருவருப்பு அடைந்து, காரி உமிழ்ந்து அகன்று போகும்படிச் செய்தலாகும். ”ஆசாரம் அச்சத்தை விளைக்கையாவது” என்பது என்ன? நம் போன்றவர்களுக்கு நமது ஆசார்யர்கள் என்ன செய்தார்களோ அதனை நாம் செய்யாமல் விட்டால் கேடு உண்டாகும் என்று பெண்களின் சேர்க்கையில் ஈடுபடுவதை எண்ணி நடுங்கும்படிச் செய்வதாகும். இப்படியாக இந்த மூன்று நிலைகளும் உண்டாகும் என்று கருத்து.