Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 102)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
இதுதான் சிலர்க்கழகாலே பிறக்கும்; சிலர்க்கருளாலே பிறக்கும்; சிலர்க்காசாரத்தாலே பிறக்கும்.
தர்மபுத்த்யா ப்ரவ்ருத்திக்கு பரிஹாரம் பண்ணுவது போக்யதா புத்த்யா ப்ரவ்ருத்திதான் தவிர்ந்தாலன்றோ, அநாதிகாலம் வாஸநை பண்ணிப்போந்த விஷயங்களில் நிவ்ருத்திதான் பிறக்கும்படி யெங்ஙனே யென்கிற சங்கையிலேயருளிச் செய்கிறார் (இதுதான் சிலர்க்கு) என்று தொடங்கி.
– இல்லற தர்மம் என்னும் புத்தியுடன் சேர்கின்ற சேர்க்கை என்பதையும் தவிர்த்தல் என்பது, “இன்பம் அளிக்கவல்லது” என்னும் புத்தியுடன் சேர்கின்ற சேர்க்கையைத் தவிர்த்தால் அல்லவோ கைகூடும்? ஆனால் எல்லையற்ற காலமாக ஈடுபட்டு வந்த மற்ற விஷயங்களில் ஆசை என்பது எவ்விதம் நீங்கும் என்பதை இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
(சிலர்க்கழகாலே பிறக்கும்) என்றது, ஸாக்ஷாத்க்ருத பகவத் தத்வரான பக்திபாரவச்ய ப்ரபந்நர்க்கு, ஸகலஜநமோஹநமான தத்விக்ரஹ ஸௌந்தர்யாநு பவத்தாலே பிறக்குமென்றபடி. (சிலர்க்கருளாலே பிறக்கும்) என்றது, தத்வயாதாத்ம்ய தர்சிகளான ஜ்ஞாநாதிக்ய ப்ரபந்நர்க்கு, “நம்மையநுபவிக்க இட்டுப் பிறந்த வஸ்து இப்படி அந்யவிஷய ப்ரவணமா யநர்த்தப்படுவதே” என்று அந்யவிஷய ஸங்கமறும்படி யவன் பண்ணும் பரமக்ருபையாலே பிறக்குமென்றபடி. (சிலர்க்காசாரத்தாலே பிறக்கும்) என்றது, அளவிலிகளான அஜ்ஞாந ப்ரபந்நர்க்கு, அவதாரங்களில் “மர்யதாநாஞ்ச லோகஸ்ய கர்த்தா காரயிதாச ஸா” என்கிறபடியே, அதிகாராநுகுணமாக வவனாசரித்தும் ஆசரிப்பித்தும் போந்தபடிகளையும், அளவுடையரான பூர்வாசார்யர்க ளாசரித்துப் போந்தபடிகளையும், சாஸ்த்ரமுகத்தாலு மாசார்யோபதேச க்ரமத்தாலுமறிகையாலே அவ்வாசாரங்களை யநுஸந்திக்க வநுஸந்திக்கப் பிறக்கு மென்றபடி.
– “சிலர்க்கழகாலே பிறக்கும்” என்பது என்ன? ஸர்வேச்வரனை நேரிலேயே கண்டு அறிந்த காரணத்தால் பக்திப் பரவசத்தில் மூழ்கிய ப்ரபந்நர்களுக்கு (இப்படியாக பெண்கள் உட்பட மற்ற விஷயத்தில் உள்ள ஆசை எவ்விதம் விலகும் என்றால்) பார்ப்பவர்களின் மனங்களைக் கவர்கின்ற எம்பெருமானின் திவ்யமான திருமேனி அழகு காரணமாக ஆகும். “சிலர்க்கருளாலே பிறக்கும்” என்பது என்ன? உண்மையான மெய்ப்பொருளை உள்ளதுஉள்ளபடி உணர்ந்த ஞானம் மூலமாக ப்ரபந்நராக உள்ளவர்களுக்கு (இந்த ஆசை எப்படி விலகும் என்றால்) ”உன்னுடைய ஆத்மாவானது என்னை அனுபவிப்பதற்காகவே உள்ளது. அப்படிப்பட்ட ஆத்மா இவ்விதம் உலக விஷயங்களில் சிக்கி அழிவது ஏனோ?” என்று உலக விஷயங்களின் மீது உள்ள பற்றுதல்களை அழிக்கும்படியாக எம்பெருமான் செய்கின்ற கருணையான செயல்கள் மூலம் ஏற்படும். “சிலர்க்காசாரத்தாலே பிறக்கும்” என்பது என்ன? சூர்ணை 44-ல் கூறியபடி அறியாமை என்பதால் ப்ரபந்நரானவர்களுக்கு (இந்த ஆசை விலகுவது எப்படி என்றால்), இராமாயணம் ஸுந்தரகாண்டம் (35-11) – மர்யதாநாஞ்ச லோகஸ்ய கர்த்தா காரயிதாச ஸா – இந்த உல்கில் உள்ள அனைத்துவிதமான தர்மங்களைத் தான் செய்பவனாகவும், மற்றவர்களைச் செய்ய வைப்பவனாகவும் இராமன் உள்ளான் - என்று கூறியபடி, அதிகாரங்களுக்குத் தகுதி ஏற்படும்படியாகத் தர்மங்களைக் கடைபிடித்தும், மற்றவர்களைக் கடைபிடிக்கும்படிச் செய்தும், ஞானம் நிறைந்த ஆசார்யர்களின் தர்மங்களை அறிந்தும், சாஸ்த்ரம் மற்றும் ஆசார்யன் மூலமாக இவைகளை அறிந்தும் செய்வதால், அந்த ஒழுக்க முறைகளை எண்ணியபடி உள்ளதால் கைக்கூடும்.