Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 101)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
மற்றையிருவர்க்கும் நிஷித்த விஷய நிவ்ருத்தியேயமையும்; ப்ரபந்நனுக்கு விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற்றம்.
அவ்வாதிக்யந்தன்னை யருளிச்செய்கிறார் (மற்றையிருவர்க்கும்) என்று தொடங்கி.
கடந்த சூர்ணையில் கூறப்பட்டதான “ப்ரபந்நனுக்கு இது மிகவும் வேண்டும்” என்பதை மேலும் விளக்குகிறார்.
– அதாவது, சப்தாதி போகபரனான வைச்வர்யகாமனுக்கும், ஸாதநாந்தரபரனான உபாஸகனுக்கும், சாஸ்த்ர நிஷித்த விஷயமான ப்ரபந்நனுக்கு, சாஸ்த்ர விஹித விஷயமான பரதாராதியில் நிவ்ருத்தி மாத்ரமமையும்; ததுபய வ்யாவ்ருத்தனா யிருக்கிற ப்ரபந்நனுக்கு, சாஸ்த்ர விஹித விஷயமான ஸ்வதாரத்தில் நிவ்ருத்தி அவர்களைப் பற்ற வேற்றமென்கை. அவர்களிருவரிலும், ஐச்வர்யகாமனுக்கு, ஸ்வதாரத்தில் ஸாதந தசையில் தர்மபுத்த்யா ப்ரவ்ருத்தியும், பல தசையில் போக்யதா புத்த்யா ப்ரவ்ருத்தியுமாயிருக்கும்; உபாஸகனுக்கு பலம் பகவதநுபவமாகையாலே, அவனைப்போலே பல தசையில் அந்வயமில்லையே யாகிலும், உபாஸநதசையில் தர்மபுத்த்யா ப்ரவ்ருத்தி வேணும்; ப்ரபந்நனுக்கு, தர்மபுத்த்யா ப்ரவர்த்திக்கையும் ஸ்வாதிகார பஞ்ஜகமாகையாலே விஹித விஷயத்திலும் நிவ்ருத்தி வேணுமென்ற தாய்த்து.
சப்தம் முதலான புலன்களின் விஷயங்களில் வசப்பட்ட ஐச்வர்யத்தை விரும்புகின்றவன், பக்தி என்னும் ஸாதனத்தைக் கைக்கொண்டு நிற்கும் உபாஸகன் ஆகியவர்களுக்குச் சாஸ்த்ரங்களால் தள்ளப்பட்டதான பிறர்மனை நோக்குதல் போன்றவற்றைத் தவிர்த்தல் முதலானவையே போதுமானதாகும். ஆனால் சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்டபடி உள்ளதான தனது மனைவியைச் சேர்தல் என்பதையே தள்ளுகின்ற செயலானது, ப்ரபந்நனுக்கு அவர்களைக் காட்டிலும் ஏற்றம் அளிக்கவல்லதாகும். ஐச்வர்யத்தை விரும்பும் ஒருவனுக்கு அவன் ஸாதன நிலையில் உள்ளபோது மனைவியிடம் கொள்ளும் சேர்க்கை என்பது தனது இல்லற தர்மம் என்பதாகவும், பலதசையில் அவள் ஒரு இன்பப்பொருள் என்னும் புத்தியுடன் கூடியதாகவும் இருக்கும். உபாஸகனின் பலன் என்பது எம்பெருமானின் அனுபவமே ஆகும். எனவே, மேலே உள்ள ஐச்வர்யம் விரும்புகின்றவன் போல பலதசையில், தனது மனைவி ஒரு இன்பப்பொருள் என்னும் புத்தியுடன் சேர்க்கை இல்லை என்றாலும், உபாஸனத்தின் போது இல்லற தர்மம் என்ற புத்தியால் சேர்க்கை வேண்டும். ஆனால் ப்ரபந்நன் ஒருவன் தனது இல்லற தர்மத்திற்கு ஏற்றபடி மனைவியுடன் சேர்தல் என்பது உள்ளபோதிலும், அத்தகைய சேர்க்கை என்பது “எம்பெருமானைத் தவிர மற்ற எதிலும் இன்பம் இல்லை” என்ற அதிகாரத்திற்குத் தடை ஏற்படுத்தும் என்பதால் கூடாது.