Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 99)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

இதுதான் ஐச்வர்யகாமர்க்கும் உபாஸகர்க்கும் ப்ரபந்நர்க்கும் வேணும்.

இந்த சமதமாதிகள்தான் போகமோக்ஷகாமரெல்லார்க்கும் வேணுமென்கிறார் (இதுதான்) என்று தொடங்கி.

– இத்தகைய சமம் மற்றும் தமம் ஆகிய இரண்டும் இன்பத்தை விரும்புகின்றவர்கள், மோக்ஷத்தை விரும்புகின்றவர்கள் ஆகிய இருவருக்கும் வேண்டுவதாகும் என்கிறார்.

ஐச்வர்யகாமர்க்கு சப்தாதி போகமே புருஷார்த்தமாகிலும், தத் ஸாதநாநுஷ்டாந தசையில் சமதமாதிகள் வேணும்; “இந்த்ரியாணி புராஜித்வா ஜிதம் த்ரிபுவநம் த்வயா”, “படிமன்னு பல்கலன் பற்றோடறுத் தைம்புலன் வென்று” என்னக் கடவதிறே. “ஐம்புலன்வென்று” என்றது மநோ நியமநத்துக்கு முபலக்ஷணம். உபாஸகர்க்கு வித்யாங்கதயா சமாதி வேணும்; ”தஸ்மாதேவம்வித் சாந்தோதாந்த உபரத ஸ்திதிக்ஷுஸ் ஸமாஹிதோ பூத்வாத்மந்யேவாத்மாநம் பச்யேத்”, ”புன்புல வழியடைத் தரக்கிலச்சினை செய்து நன்புல வழி திறந்து ஞான நற்சுடர் கொளீஇ” என்னக்கடவதிறே. ப்ரபந்நாக் கதிகாரார்த்தமாக சமாதி வேணும்; “ஏகாந்தீது விநிச்சித்ய தேவதா விஷயாந்தரை: பக்தியுபாயம் ஸமம் க்ருஷ்ண ப்ராப்தௌ க்ருஷ்ணைகஸாதந:”, “அடக்கரும்புலன்க ளைந்தடக்கி யாசை யாமவை துடக்கறுத்து வந்து நின்தொழிற் கணின்ற வென்னை” என்னக் கடவதிறே.

ஐச்வர்யத்தை விரும்புகிறவர்களுக்கு ஐந்து புலன்களால் கிட்டக்கூடிய இன்பம் என்பதே புருஷார்த்தமாக உள்ளது. ஆனாலும் அந்த இன்பங்களை அடைவதற்கான வழிகளைச் செய்யும்போது சமம் மற்றும் தமம் அவசியமாகிறது. கீழே உள்ள வரிகள் காண்க: இராமாயணம் யுத்தகாண்டம் (114-18) – இந்த்ரியாணி புராஜித்வா ஜிதம் த்ரிபுவநம் த்வயா - உன்னால் இந்த்ரியங்கள் வெல்லப்பட்டதால் அல்லவோ மூன்று உலகங்களும் வெல்லப்பட்டன – என்றது. இது இராவணனைக் குறித்து மண்டோதரி உரைத்தது. திருவாய்மொழி (4-1-9) - படிமன்னு பல்கலன் பற்றோடறுத் தைம்புலன் வென்று – இங்கு ”ஐம்புலன் வென்று” என்பதன் மூலம் மன அடக்குதலும் சேர்த்தே கூறப்பட்டது என்று கொள்க. உபாஸகன் ஒருவனுக்குப் பக்தி உண்டாவதற்கு ஏதுவாக இத்தகைய சமம் மற்றும் தமம் ஆகிய இரண்டும் வேண்டியதாகிறது. கீழே உள்ள வரிகள் காண்க: ப்ருஹத் உபநிஷத் – தஸ்மாதேவம்வித் சாந்தோதாந்த உபரத ஸ்திதிக்ஷுஸ் ஸமாஹிதோ பூத்வாத்மந்யேவாத்மாநம் பச்யேத் - இப்படியாக அறிந்தவன் அகம் மற்றும் புறம் ஆகிய உறுப்புகளை அடக்கியவனாக, மற்ற உலக விஷயங்களில் பற்றுதல் அற்றவனாக, விழிப்புடன் உள்ளவனாக நிலைநின்று ஆத்மாவில் பரமாத்மாவைக் காண்பானாக. திருச்சந்தவிருத்தம் (96) – புன்புல வழியடைத் தரக்கிலச்சினை செய்து நன்புல வழி திறந்து ஞான நற்சுடர் கொளீஇ. அடுத்து ப்ரபந்நன் ஒருவனுக்கு இத்தகைய சமம் மற்றும் தமம் ஆகிய இரண்டும் அவசியமாகிறது. கீழே உள்ள ப்ரமாணங்கள் காண்க: ப்ருஹத் உபநிஷத் – ஏகாந்தீது விநிச்சித்ய தேவதா விஷயாந்தரை: பக்தியுபாயம் ஸமம் க்ருஷ்ண ப்ராப்தௌ க்ருஷ்ணைகஸாதந: - பரமைகாந்தி ஒருவன் கண்ணனை மட்டுமே உபாயமாகக் கொண்டிருக்கக்கூடும். அப்படிப்பட்ட அவன் அந்த க்ருஷ்ணனை அடையும் விஷயத்தில் மற்ற தேவதைகளைத் தனது ஐந்து புலன்களால் அடையப்படும் இன்பங்களுக்குச் சமமாக வைத்து (அதாவது ஒதுக்கி), பக்தி என்னும் உபாயத்தைக் கைக்கொள்வானாக. திருச்சந்தவிருத்தம் (95) – அடக்கரும்புலன்க ளைந்தடக்கி யாசை யாமவை துடக்கறுத்து வந்து நின்தொழிற் கணின்ற வென்னை.