Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 97)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
இந்தயிரண்டுமுண்டானால் ஆசார்யன் கைபுகுரும்; ஆசார்யன் கைபுகுந்தவாறே திருமந்திரம் கைபுகுரும்; திருமந்திரம் கைபுகுந்தவாறே ஈச்வரன் கைபுகுரும்; ஈச்வரன் கைபுகுந்தவாறே, “வைகுந்தமாநகர் மற்றது கையதுவே” என்கிறபடியே ப்ராப்ய பூமி கைபுகுரும்.
– இப்படிப்பட்ட சமமும் தமமும் ஏற்பட்டால் ஒருவனுக்குக் கிட்டக்கூடிய பலன்களின் வரிசையை அருளிச்செய்கிறார்.
இந்த சமதங்களுண்டானால் இவனுக்குண்டாகக்கடவ பலபரம்பரையை யருளிச் செய்கிறார் மேல் (இவையிரண்டும்) என்று தொடங்கி.
பகவத் ப்ராவண்யமடியாகவரும் பரிபூர்ணமான சமதமங்களைக் கீழ்ச்சொல்லிற்றேயாகிலும், இவ்விடத்தில் ஆசார்யாங்கீகாரத்துக்குப் பூர்வபாவியான வளவிலே யொதுக்கிச் சொல்லுகிறது. இந்த சமதமங்க ளிரண்டுமுண்டானால் ஆசார்யன் கைபுகுருகையாவது - இவ்வாத்மகுணம் கண்டுகந்து ஸம்ஸார நிவர்த்தகமான பெரிய திருமந்திரத்தை ஸார்த்தமாகவுபதேசிக்கும்படியிவனுக்கு வச்யனாகை. “தஸ்மை ஸ வித்வாநுபஸந்தாய ஸம்யக் ப்ரசாந்த சித்தாய சமாந்விதாய – யேநாக்ஷரம் புருஷம் வேத ஸத்யம் ப்ரோவாச தாம் தத்வதோ ப்ரஹ்மவித்யாம்” என்று சமதமோபேதனாய்க் கொண்டு உபஸந்நனானவனுக்கிறே ப்ரஹ்மவித்யையை தத்வத: உபதேசிக்கச் சொல்லிற்று. இந்த ச்ருதியில் ஆசார்யோபஸக்திக்குடலாகச்சொன்ன சமதமங்களுக்கு, “ஏதேந ச்ரவணோபயுக்த மவதாநம் விவக்ஷிதம் – நதூபாஸ நோபயுக்தாத்யந்தேந்த்ரிய ஜயாதி:” என்றிறே ச்ருதிப்ரகாசிகாகாரர் வ்யாக்யாநம் பண்ணிற்று. (ஆசார்யன் கைபுகுந்தவாறே திருமந்த்ரம் கைபுகுருகையாவது) – “தந்மந்த்ரம் ப்ராஹ்மணாதீநம்” என்று - திருமந்த்ரமும் ஆசார்யாதீநமாகையாலே, உபதேஷ்டாவானவன் கைபுகுந்தவாறே, ததுபதேச முகத்தாலே ஸார்த்தமாக விவன்நெஞ்சிலே ப்ரதிஷ்டிதமாகை. ”ப்ரஹ்மவித் ப்ராஹ்மணோ விது:” என்கையாலே ”ப்ராஹ்மணாதீநம்” என்கிறவிடத்தில், ப்ராஹ்மண சப்தத்தால் – ஆசார்யனைச் சொல்லுகிறது. (திருமந்த்ரம் கைபுகுந்தவாறே ஈச்வரன் கைபுகுருகையாவது) – “மந்த்ராதீநஞ்ச தைவதம்” என்று – திருமந்த்ரமிட்டவழக்கா யிருக்குமவனாகையாலே, அர்த்தஸஹிதமாக அது கைபுகுந்தவாறே, தத் ப்ரதிபாத்யனான தானிவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வ கேஷ்ட ப்ராப்திக்கு ப்ராபகனான (ஈச்வரன் கை புகுந்தவாறே, “வைகுந்தமாநகர் மற்றது கையதுவே” என்கிறபடியே - ப்ராப்ய பூமி கைபுகுருகையாவது) – ”தைவாதீநம் ஜகத் ஸர்வம்” என்று – உபய விபூதியுமீச்வரனிட்ட வழக்காகையாலே, அவன் ப்ராபகனாய் கைபுகுந்தவாறே, ப்ராப்ய பூமியான ஸ்ரீவைகுண்ட மிவனுக்குக்கத்யந்த ஸுலபமாகை.
– ஸர்வேச்வரனிடம் பூண்ட அன்பு காரணமாக உண்டாகின்ற பரிபூர்ணமான சமம் மற்றும் தமம் ஆகியவற்றை மேலே உரைத்தார். அடுத்து இங்கு ஆசார்யனின் அனுக்ரஹம் கிட்டுவதற்கு முன்பாக இவை இரண்டும் உண்டாவது பற்றியும், இவைகளின் விளைவு பற்றியும் கூறுகிறார். இந்தச் சமம் மற்றும் தமம் ஆகிய இரண்டும் ஒருவனுக்கு உண்டானால் – ஆசார்யன் கை புகுரும். அதாவது, இந்த ஆத்ம குணங்கள் ஒருவனிடம் இருப்பது கண்டு மகிழ்கின்ற ஆசார்யன், அவனுக்குப் பிறவியை அறுக்கவல்ல திருமந்த்ரத்தைப் பொருளுடன் உபதேசிக்கும்படியாக அந்த ஆசார்யன் அவனுக்கு வசப்பட்டு நிற்கிறான். முண்டக உபநிஷத் (1-2-12) – தஸ்மை ஸ வித்வாநுபஸந்தாய ஸம்யக் ப்ரசாந்த சித்தாய சமாந்விதாய யேநாக்ஷரம் புருஷம் வேத ஸத்யம் ப்ரோவாச தாம் தத்வதோ ப்ரஹ்மவித்யாம் - அருகில் வந்து, தூய்மையான மனம் கொண்டவனாக, அகம் மற்றும் புறம் ஆகிய அனைத்து உறுப்புகளையும் அடக்கியவனாக நிற்கின்ற சிஷ்யனுக்கு, எந்த ஒன்றின் மூலம் ஸத்யமாகவும் அழிவற்றதாகவும் உள்ள ப்ரஹ்மத்தை ஆசார்யன் அறிந்தானோ, அந்த ப்ரஹ்மவித்யையை உள்ளது உள்ளபடி உபதேசிக்கக் கடவன் – என்றது காண்க. ஆக சமம் மற்றும் தமம் ஆகியவற்றுடன் வந்து சேர்ந்த சிஷ்யனுக்கு அல்லவோ ப்ரஹ்மவித்யையை உள்ளதுஉள்ளபடி உபதேசிக்க வேண்டும் எனப்பட்டது? இத்தகைய இந்த உபநிஷத் வாக்கியத்திற்கு, ஆசார்யனை அடைவதற்குத் தேவையானதாக உரைக்கப்பட்ட சமம் மற்றும் தமம் ஆகியவை குறித்து ச்ருதப்ரகாசிகாகாரர் - ஏதேந ச்ரவணோபயுக்த மவதாநம் விவக்ஷிதம் நதூபாஸ நோபயுக்தாத்யந்தேந்த்ரிய ஜயாதி: – இதன் மூலமாக கேட்பதால் ஏற்படுகின்ற பயனாக இந்த்ரிய விலக்குதல் கூறப்பட்டது, உபாஸனம் செய்வதற்கு ஏற்றதான பரிபூர்ணமான இந்த்ரிய விலக்குதல் கூறப்பட்டவில்லை - என்றது காண்க. “ஆசார்யன் கைபுகுந்தவாறே திருமந்த்ரம் கைபுகுருகையாவது” என்பதன் பொருள் என்ன? தந்மந்த்ரம் ப்ராஹ்மணாதீநம் - அந்த மந்த்ரம் ஆசார்யனின் வசத்தில் உள்ளது - என்பதற்கு ஏற்ப திருமந்த்ரம் ஆசார்யனின் வசப்பட்டு உள்ளது; எனவே ஆசார்யனின் அருகில் சென்றவுடன் அவரது உபதேசம் மூலமாக அந்த திருமந்த்ரம் பொருளுடன் சேர்ந்து இவன் மனதில் நிலைநிற்கும் என்று கருத்து. ப்ரஹ்மவித் ப்ராஹ்மணோ விது: – ப்ரஹ்மத்தை அறிந்தவன் ப்ராஹ்மணன் – என்பதால், ”தந்மந்த்ரம் ப்ராஹ்மணாதீநம்” என்ற வரியில் உள்ள “ப்ராஹ்மணா” என்ற பதம் ஆசார்யனைக் குறித்தது என்றே கொள்க. “திருமந்த்ரம் கைபுகுந்தவாறே ஈச்வரன் கைபுகுருகையாவது” என்பது என்ன? மந்த்ராதீநஞ்ச தைவதம் - மந்திரத்தின் வசப்பட்டது தெய்வம் - என்பதற்கு ஏற்ப, திருமந்த்ரம் கூறுவதைக் கேட்பவனாக ஈச்வரன் உள்ளான்; எனவே பொருளுடன் சேர்ந்து அந்த திருமந்த்ரம் நிலை நின்றவுடன், அந்த மந்த்ரம் மூலம் கூறப்படுகின்ற ஸர்வேச்வரன், அந்தச் சேதனனுக்கு விருப்பம் இல்லாதவற்றை விலக்கியும், விரும்பியதை அடைவித்தும் செய்கிறான். “ஈச்வரன் கை புகுந்தவாறே, ‘வைகுந்தமாநகர் மற்றது கையதுவே’ என்கிறபடியே ப்ராப்ய பூமி கைபுகுருகையாவது” என்றால் என்ன? தைவாதீநம் ஜகத் ஸர்வம் – அனைத்தும் தெய்வத்தின் வசப்பட்டது – என்பதற்கு ஏற்ப இந்த உலகம் மற்றும் அந்த உலகம் ஆகிய இரண்டுமே அவன் வசப்பட்டதாக உள்ளது; ஆகவே அவனை மட்டுமே உபாயமாகப் புகுந்த இவனுக்கு மிகவும் சுலபமாகக் கிட்டுகிறது.