Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 96)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

ஆத்ம குணங்களில் ப்ரதாநம் சமமும் தமமும்.

ஆத்ம குணங்கள் அனைத்திற்கும் முக்கியமான காரணம் ஸர்வேச்வரனிடம் உள்ள அன்பே ஆகும் என்று கூறினார். தொடர்ந்து சிற்றின்பத்தின் மீது ஆசை ஏற்படாமல் போவதற்கான காரணமும் அவன் மீது கொள்ளும் ஈடுபாடே என்று ஏன் ப்ரமாணங்கள் மூலம் கூறவேண்டும் என்ற சந்தேகத்திற்கு விடை அளிக்கிறார்.

பகவத்ப்ராவண்ய மாத்க குணங்களெல்லாவற்றுக்கும் ப்ரதாந ஹேதுவென்று ப்ரஸ்தாவித்து, இதரவிஷய விரக்தி ஹேதுத்வமாத்ரத்தில் ப்ரமாணங்களை தர்சிப்பிப்பானென்னென்கிற சங்கையிலே யருளிச்செய்கிறார் (ஆத்ம குணங்களில் ப்ரதாநம் சமமும் தமமும்) என்று.

– சமமாவது, அந்த:கரண நியமநம்; தமமாவது, பாஹ்ய கரண நியமநம். ”சமச் சித்த ப்ரசாந்திஸ் ஸ்யாத் தமச்சேந்த்ரிய நிக்ரஹ:” என்னக் கடவதிறே. “க்ஷமா ஸத்யம் தமச்சம:” என்கிறவிடத்தில், “தமோ பாஹ்ய கரணாநா மநர்த்த விஷயேப்யோ நியமநம் - சமோந்த: கரணஸ்ய ததா நியமநம்” என்றிறே பாஷ்யகாரருமருளிச் செய்தது. மாறிச்சொல்லுமிடமுமுண்டு. இந்த சம தமங்களுண்டானவிடத்தில் அல்லாத குணங்கள் தன்னைடையே வருமாகையாலே ப்ரதாநமான விவற்றுக்கு ஹேதுவென்னுமிடத்தில் ப்ரமாணம் காட்டப்பட்டதென்று கருத்து. அன்றிக்கே, கீழ்ச்சொன்ன விரக்தி ஹேதுத்வம், ஸகலாத்ம குணோத்பத்திக்கும் ஹேதுவென்னுமிடத்துக்கு உபலக்ஷணமாக்கி, இவ்வாத்ம குணங்களில் ப்ரதாநமேதென்கிற சங்கையிலே, (ஆத்மகுணங்களில் ப்ரதாநம் சமமும் தமமும்) என்றருளிச் செய்தாராகவுமாம்.

சமம் என்றால் அந்தகரணமான மனதை அடக்குதல், தமம் என்றால் புற உறுப்புகளான ஐந்து இந்த்ரியங்களை அடக்குதல் ஆகும். இதனை – சமச் சித்த ப்ரசாந்திஸ் ஸ்யாத் தமச்சேந்த்ரிய நிக்ரஹ: – அக உறுப்புகளை அடக்குதல் சமம், புற இந்த்ரியங்களை அடக்குதல் தமம் – என்பதன் மூலம் காணலாம். கீதையில் உள்ள (10-4) – க்ஷமா ஸத்யம் தம: சம: - என்ற ச்லோகத்திற்கு ஸ்ரீபாஷ்யகாரர் தனது கீதாபாஷ்யத்தில் - தமோ பாஹ்ய கரணாநா மநர்த்த விஷயேப்யோ நியமநம் - சமோந்த: கரணஸ்ய ததா நியமநம் - தமம் என்றால் துன்பங்கள் அளிக்கவல்ல ஐந்து புலன்களின் இன்பத்தில் சிக்கி அழிந்துபோகாமல், புற உறுப்புகளை அடக்குதல்; சமம் என்றால் அக உறுப்பாகிய மனதை அவ்விதமே அடக்குதல் – என்றது காண்க. ஒரு சில இடங்களில் சமம் என்பதற்குக் கூறப்படும் பொருள் தமம் என்பதற்கும், தமம் என்பதற்குக் கூறப்படும் பொருள் சமம் என்பதற்கும் மாற்றிக் கொள்ளப்படும். ஒருவனுக்குச் சமம் மற்றும் தமம் ஆகிய இரண்டும் உண்டானால், மற்ற ஆத்ம குணங்கள் தானாகவே அவனிடம் வந்தடையும் என்பதால், இந்தக் குணங்களுக்கு ”முக்கியமான காரணம் இன்னது” என்பதற்கு மட்டும் ப்ரமாணம் காட்டப்பட்டது. அல்லது, மற்ற விஷயங்களின் மீது பற்றுதல் இல்லாத நிலை உண்டாகக் காரணம், அனைத்து ஆத்ம குணங்கள் உண்டாவதற்கும் காரணம் என்ற இடத்திற்குக் கூறி, “இந்த ஆத்ம குணங்களில் முக்கியமானது எது?” என்ற கேள்விக்கு - ஆத்ம குணங்களில் முக்கியமானவை சமம் மற்றும் தமம் என்றார் - எனவும் கொள்ளலாம்.