Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 95)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
”மாற்பால் மனஞ் சுழிப்ப”, ”பரமாத்மநி யோரக்த:”, ”கண்டு கேட்டுற்றுமோந்து”.
இவ்வர்த்தத்தில் ப்ரமாணோபாதாநம் பண்ணுகிறார் (மாற்பால்) என்று தொடங்கி.
கடந்த சூர்ணையில் கூறப்பட்ட விஷயத்திற்கு ஏற்ற ப்ரமாணங்களை அருளிச்செய்கிறார்.
– “மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு நூற்பால் மனம் வைக்க நொய்விதாம்” என்று ஸர்வேச்வரன் பக்கலிலே ஹ்ருதயம் ப்ரவணமாக, போக்யைகளான ஸ்த்ரீகளுடைய தோளோடேயணைகையில் நசையற்று, ப்ரமாணங்களிலே மநஸ்ஸை வைக்க வெளிதாமென்றும்; “பரமாத்மநி யோ ரக்தோ விரக்தோ பரமாத்மநி” என்று பரமாத்மாவின் பக்கலிலே ரக்தனாய் அத்தாலே பரமாத்மேதர விஷயத்தில் விரக்தனானவனென்றும்; ”ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக் கண்ட சதிர் கண்டு கண்டு கேட்டுற்று மோந்துண்டுழலு மைங்கருவி கண்ட வின்பம் தெரிவரிய வளவில்லாச் சிற்றின்பம் ஒழிந்தேன்” என்று பெரியபிராட்டியாரும் தேவருமாயொரு தேசவிசேஷத்திலே யெழுந்தருளியிருக்கிற சேர்த்தியைக் கண்டு அங்கே ப்ரவணனாய், ஐச்வர்ய கைவல்யங்களில் விரக்தனானே னென்றும்; பகவத் ப்ராவண்ய மிதர விஷய விரக்தி ஹேதுவாகச் சொல்லப்பட்டதிறே.
– மூன்றாம் திருவந்தாதி (14) மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு நூற்பால் மனம் வைக்க நொய்விதாம் – என்பது என்ன? ஸர்வேச்வரனிடம் சென்று விட்டால் தனக்கு இனியவர்களாக இருந்து வந்த பெண்களின் தோள்களைத் தழுவுதலில் உள்ள ஆசை விலகி, ப்ரமாணங்களில் மனம் செல்லும் என்பதாகும். பரமாத்மநி யோ ரக்தோ விரக்தோ பரமாத்மநி – எம்பெருமானிடம் ஆசை வைத்து, அவன் நீங்கலாக உள்ள மற்றவற்றில் ஆசையை விலக்கி - என்றால் என்ன? பரம்பொருளான எம்பெருமானிடம் ஆசை கொண்டுவிட்டால், அவன் நீங்கலாக உள்ள மற்ற விஷயங்களில் ஆசை நீங்கும் என்பதாகும். திருவாய்மொழி – ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக் கண்ட சதிர் கண்டு கண்டு கேட்டுற்று மோந்துண்டுழலு மைங்கருவி கண்ட வின்பம் தெரிவரிய வளவில்லாச் சிற்றின்பம் ஒழிந்தேன் – என்பது என்ன? பெரிய பிராட்டியும் ஸர்வேச்வரனும் ஒன்றாக எழுந்தருளியுள்ள அழகைக் கண்ட பின்னர் அங்கு என் அன்பு சென்றவனாக, செல்வத்திலும் கைவல்யத்திலும் அன்பு இல்லாதவனாக நின்றேன் - என்பதாகும். ஆக எம்பெருமான் மீது கொண்ட ஈடுபாடு என்பது மற்ற விஷயங்களின் மீது உண்டாகும் வெறுப்பிற்குக் காரணம் என்று காட்டப்பட்டது.