Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 93)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
ஸாத்யஸமாநம் விளம்பாஸஹமென்றிறே ஸாதநத்துக்கேற்றம்; ஸாத்ய ப்ராவண்ய மடியாகவிறே ஸாதநத்திலிழிகிறது.
இப்படி மடலெடுக்கை முதலானவை ஸித்தோபாய ப்ரதிபந்தகமாகாதென்னுமிடம் சொல்லி, அவை தனக்கு ஸித்தோபய ஸாம்யத்தை விவக்ஷித்தருளிச் செய்கிறார்மேல் (ஸாத்ய ஸமாநம்) இத்யாதி வாக்யத்வயத்தாலே.
இப்படியாக மடலெடுத்தல் போன்ற செயல்கள், ஸித்தோபாயமான எம்பெருமான் நமக்காகச் செய்ய உள்ளவற்றைத் தடுக்காது என்று கூறி, அவற்றுக்குள்ள ஸித்தோபாய ஒற்றுமையைக் கூற எண்ணியவராய், இந்தச் சூர்ணையை அருளிச் செய்கிறார்.
– ஸாத்ய வஸ்துவே ஸாதநமாகையாலே ஸாத்யத்துக்கு ஸமாநமென்றும், பல விளம்பத்தை ஸஹியாதே சீக்ரமாக கார்யம் செய்து கொடுக்குமென்றுமிறே இதர ஸாதநங்களிற் காட்டில் ஸித்தஸாதநத்துக்கேற்றம்; ஸாத்யத்தில் ப்ராவண்யமடியாகவிறே இந்த ஸாதகபரிக்ரஹந்தன்னிலிழிகிறது; அவை இரண்டுமிவற்றுக்கு முண்டென்று கருத்து. எங்ஙனேயென்னில்; மடலெடுக்கை முதலான, ப்ரவ்ருத்திகள் சேஷிக்கதிசய கரங்களாகையாலே கைங்கர்யரூப ஸாத்யத்துக்கு ஸமாநங்களாயிருக்கையாலும், மடலூருதல் நோன்பு நோற்குதல் செய்வனென்று துணிந்தபோதே ஸர்வேச்வரன் த்வரித்துக் கொண்டு வந்து இவர்கள் காலிலே விழும்படி பண்ணிக் கொடுக்கையாலே பல விளம்பாஸஹங்களாயிருக்கையாலும், ஸித்த ஸாதநம் போலே இதர ஸாதநங்களிற் காட்டிலேற்றத்தையுடைத்தாய், ஸாத்யப்ராவண்யமடியாக இவற்றிலிழிகிற வாகாரமு மொத்திருக்கையாலே இத்தால் - ஸித்தோபயத்தை யொழியவு மிதுதானே கார்யம் செய்யவற்றாகையாலே தத் ப்ரதிபந்தகமென்னும் தூஷணமில்லையென்று கருத்து. அன்றிக்கே (உபாயப்ரதிபந்தகமாகாது) என்றத்தை யின்னமும் முகபேதத்தாலே யுபபாதிக்கிறார் (ஸாத்ய) இத்யாதி வாக்ய த்வயத்தாலே, அதாவது – பால் மருந்தாமாப்போலே ஸாத்ய வஸ்து தானே ஸாதநமகையாலே ஸாரஸ்யத்தில் ஸாத்யத்தோடொத்திருக்கு மென்றும், ஸாத்யத்தை ப்ராபிக்கு மளவில் காலவிளம்பத்தைப் பொறாது கடுக ப்ராபித்துவிடுமென்றுமன்றே ஸாதநாந்தரத்திற் காட்டில் ஸித்த ஸாதநத்துக்கேற்றம்; இப்போதிது சொல்லுகிறது, இவ்வாகார த்வயமும் ஸாத்ய ப்ராவண்ய ஹேதுவாமென்று தோற்றுகைக்காக. இப்படியாகையாலே, தானடியாக விளைந்து க்ஷண காலவிளம்பம் பொறாமல் துடிக்கும்படி முறுகடியிடுகிற ஸாத்ய ப்ராவண்யமடியாகவிறே மடலெடுக்கை முதலான விஸ்ஸாதநத்தி லிழிகிறதென்கை. ஆகையாலே, ஏவம் பூத ப்ராவண்யத்தின் முறுகுதலாலே கண்ணாஞ்சுழலையிட்டுச் செய்கிற விப்ப்ரவ்ருத்திகள் உபாயம் மேல்விழுந்து கார்யஞ்செய்கைக்குடலாமித்தனை யல்லாது தத்ப்ரதிபந்தகமாகாதென்று கருத்து. ஆக (இவனுக்கு வைதமாய் வருமதிறே த்யஜிக்கலாவது) என்று தொடங்கி இவ்வளவு வர, பிள்ளை திருநறையூரரையர் ப்ரவ்ருத்தி வ்யாஜத்தாலே, பகவத் ப்ரபந்நனா யிருந்தனேயாகிலும் உபேயபரனானவனுக்கு தத் விஷயப்ராவண்யத்தாலே வரும் ஸ்வதேஹ த்யாகம் துஸ்த்யஜம், உபாய புத்த்யாவநுஷ்டித மல்லாமையாலே அதுதானுபாய கோடியிலந்வயியாது, வஸ்துகத்யா அந்வயித்ததாகிலும் ப்ரேம பரவசர்க்கு தோஷாயவன்று. புத்தி பூர்வகமாக வநந்யோபாயத்வாதிகள் குலையும் படியான ப்ரவ்ருத்திகள் தெளியக் கண்டவர்கள் பக்கலிலும் காண்கையாலே; இவைதான் அஜ்ஞாந மூலமேயாகிலும் ப்ரேம கார்யமான வஜ்ஞாநத்தாலே வந்தவையாகையால் அதிச்லாக்யாங்கள், ஸித்தோபாய ப்ரதிபந்தகமாகாது; அவ்வளவன்றிக்கே அத்தோடொக்கச் சொல்லலாம்படியன்றோ விவற்றின் பெருமையென்று சொல்லுகையாலே உபேயாதிகாரத்தில் (தன்னைப் பேணாமை) என்று சொன்னவிது அநந்ய ஸாதநத்வத்துக்குச் சேருமோவென்னு மதிசங்கா பரிஹாரம் பண்ணப்பட்டது.
மற்ற அனைத்து உபாயங்களையும் விட எம்பெருமான் என்னும் உபாயத்திற்கு ஏற்றம் என்னவென்றால் – எம்பெருமான் என்னும் ஸாத்ய வஸ்துவே அவனை உடைய உதவும் ஸாதனமான ஸித்தோபாயமாகவும் உள்ளான். எனவே அந்த ஸாதனம் அவனுக்கு ஒத்ததாக உள்ளது என்பதும், பலனாகிய தன்னைப் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதை அவன் பொறுத்துக் கொள்வதில்லை, எனவே விரைவாகத் தன்னை அடையும்படிச் செய்கிறான் என்பதும் - ஆகும். இப்படிப்பட்ட ஸாத்ய வஸ்துவான எம்பெருமான் மீது கொண்ட அன்பு காரணமாக அல்லவோ ஸித்தோபாயமான எம்பெருமானையே ஸாதனமாகக் கொள்கின்றனர். ஆகவே காலதாமதம் பொறுத்துக் கொள்ள இயலாமை, அன்பின் காரணமாகவே ஸித்தோபாயத்தைப் பற்றுதல் என்று இரண்டும் மடல் எடுத்தல் போன்ற செயல்களுக்கு அடிப்படை ஆகிறது. எப்படி? மடல் எடுத்தல் போன்ற செயல்கள் எஜமானனாகிய எம்பெருமானுக்கு மேன்மையை ஏற்படுத்தவல்லவை என்பதால் இவை கைங்கர்யம் என்னும் ஸாத்யத்தை ஒத்தவை ஆகும் (ஸாத்யம் என்பது மூன்றாகும் - எம்பெருமான் ஸாத்யம் எனப்படுபவன், கைங்கர்யம் ஸாத்யம் எனப்படும், கைங்கர்யம் மூலம் ஏற்படும் அன்பும் ஸாத்யம் எனப்படும்). மேலும் அவர்கள் மடல் எடுத்தல்,நோன்பு நோற்றல் போன்ற செயல்களில் ஈடுபட எண்ணிய உடனேயே, ஸர்வேச்வரன் விரைவாக ஓடிவந்து இவர்களின் காலில் விழும்படிச் செய்யவல்லவை என்பதால் பலனைப் பெறுவதில் உள்ள தாமதத்தைப் பொறுக்க இயலாத தன்மை இவைகளுக்கு உண்டு. மற்ற அனைத்தும் உபாயங்களையும் விட, ஸித்தோபாயமான எம்பெருமான் என்னும் உபாயத்திற்கு ஏற்றம் உள்ளது போன்று, இவைகளுக்கு ஏற்றம் உண்டு. எம்பெருமான் மீது கொண்ட அன்பு மட்டுமே காரணமாக இவர்கள் இதில் ஈடுபடுகின்றனர் போன்ற பல காரணங்கள் கூறலாம். ஆகவே ஸித்தோபாயம் அல்லாமல் இவை தாங்களாகவே காரியம் செய்யவல்லவை என்பதால், இவை எம்பெருமானின் செய்கைகளுக்குத் தடை ஆகாது என்று அறிக. இந்தச் சூர்ணைக்கு வேறு பொருளும் கூறலாம். கடந்த சூர்ணையில் “உபாயப்ரதிபந்தகமாகாது” என்று கூறியதற்கு மேலும் காரணம் கூறி இந்தச் சூர்ணையில் விளக்குகிறார் எனலாம். பால் என்பது உணவாகவும் மருந்தாகவும் உள்ளது போன்று, உபேயமாக உள்ள எம்பெருமான் தானே உபாயமாகவும் உள்ளான். ஆகவே தன்னை அடைவிப்பதற்கான காலதாமதத்தைத் தானே பொறுத்துக் கொள்ள இயலாமல், விரைவாகப் பலனை அளிப்பதால், மற்ற உபாயங்களான பக்தி போன்றவற்றைக் காட்டிலும் ஸித்தோபாயமான எம்பெருமானுக்கு ஏற்றமே உள்ளது. இதனை இங்கு ஏன் கூற வேண்டும் என்றால், ஸாத்யவஸ்து மீது அன்பு உண்டாவதற்கு இந்த இரு தன்மைகளுமே காரணம் என்பதை உணர்த்தவே ஆகும். ஆகவே ஸர்வேச்வரன் அடியாக ஏற்பட்டு, ஒரு நொடிப்பொழுது கூட அவனை அடையும் காலத்தில் தாமதம் ஏற்படுவதைப் பொறுக்க இயலாமல் துடித்தபடி, அந்த ஸாத்யவஸ்து மீது உண்டான அன்பு காரணமாக அல்லவோ மடல் எடுத்தல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்? எனவே அன்பு மேலிடுவதன் காரணமாகச் செய்கின்ற இந்தச் செய்கைகள், ஸர்வேச்வரன் பதிலுக்கு ஓடி வந்து மேலே விழுந்து செய்கின்ற செயல்களுக்குக் காரணமாக இருக்குமே அல்லாமல், அவனது செயல்களுக்குத் தடையாக இருக்காது என்று கருத்து. ஆகவே சூர்ணை-86 முதல் இந்தச் சூர்ணை முடிய, பிள்ளை திருநறையூர் அரையரின் செயலானது கூறப்பட்டு, அந்தச் செய்கை ஏற்புடையதா என்ற ஐயத்திற்கான விடை அளிக்கப்பட்டது. இதனைக் கீழே காண்க: பகவத் ப்ரபந்நனாக உள்ளபோதிலும் அந்த உபேயமான எம்பெருமான் மீது கொண்ட அன்பு காரணமாகத் தனது சரீரம் துறத்தால் என்பதை விட இயலாது. அப்படி சரீரம் துறத்தல் என்னும் செயலானது உபாய புத்தியுடன் செய்யப்படவில்லை என்பதால், எம்பெருமான் அல்லாமல் மற்றொரு உபாயம் கைக்கொண்டான் என்ற தோஷம் ஏற்படாது. அந்தச் செயலின் தன்மை காரணமாக அதனை உபாயமாக என்று சிலர் எண்ணினாலும், அன்பின் வசப்பட்டிருக்கும் அவனைப் பொறுத்தவரை அது தோஷம் அல்ல. மற்ற உபாயங்களைக் கைவிட்டவர்களின் பார்வையில் இது போன்று சரீரம் விடுதல் முதலான செயல்களை உணர்ந்தே செய்தனர் என்று தோன்றினாலும் தோஷம் எற்படாது. இது போன்ற செயல்கள் அறிவில்லாத தன்மையின் விளைவாக ஏற்படுவது என்று கூறலாம். ஆனாலும் மிகுந்த பக்தி காரணமாக அந்த அறிவின்மை ஏற்படுவதால், இந்தச் செயல்கள் போற்றப்பட வேண்டியவையே ஆகும். இது போன்ற செயல்கள் ஸித்தோபாயமான எம்பெருமான் நமக்காகச் செய்யும் செய்கைகளுக்குத் தடை ஏற்படுத்தாது. இது போன்று செயல்கள் ஸித்தோபாயமான எம்பெருமானின் செயல்களை ஒத்திருப்பவை என்னும்படி மேன்மை பெற்றவை ஆகும். இப்படியாக உபாய அதிகாரத்தில் “தன்னைப் பேணாமை” என்று கூறப்பட்ட இது, மற்ற உபாயங்களின் வரிசையில் சேர்ந்துவிடுமோ என்ற சந்தேகம் விலக்கப்பட்டது.