Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 92)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
உபாயபலமாய் உபேயாந்தர்ப் பூதமாயிருக்குமது உபாயப்ரதிபந்தகமாகாது.
ஆனாலும், இவ்வதிப்ரவ்ருத்தி இத்தலையில் ப்ரவ்ருத்தியி லொன்றையும் ஸஹியாத ஸித்தோபாயத்தின் கார்யகரத்வத்துக்கு ப்ரதிபந்தகமாகாதோ வென்னவருளிச் செய்கிறார் (உபாய) இத்யாதியாலே.
– ஆனால் ஸித்தோபாயமாக உள்ள எம்பெருமான் எதனையும் எதிர்பாராமல் கடாக்ஷிக்கும்போது, இவர்களது இந்தச் செய்கைகள் காரணமாக, எம்பெருமானின் செய்கைக்குத் தடை உண்டாகாதோ என்ற சந்தேசத்தை நீக்குகிறார்.
– “உபாயபலம்” என்றது, ஸித்தோபாயமானவவன் பண்ணின க்ருஷிபல மென்றபடி “மயர்வற மதிநல மருளினன்”, ”பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர்மேனி நங் கண்ணன்” என்றும் ஏவம்பூத ப்ரவ்ருத்தி ஹேதுவான பக்திக்கு உத்பாதகனும் வர்த்தகனு மவனேயிறே; ஆகையாலே, பக்தி பாரவச்ய நிபந்தநமான இப்ப்ரவ்ருத்தியை யுபாயபல மென்கிறது. (உபேயாந்தர்பூதா யிருக்குமது) என்றது –ப்ராப்ய த்வரையில் முறுகுதலாலே கண்ணாஞ் சுழலையிட்டு இத்தலைபடுகிற அலமாப் பெல்லாம் நம்மையாசைப்பட்டிப்படி படப்பெறுவதே என்று அவன் முகமலருகைக் குறுப்பாகையாலே. மடலெடுக்கை தொடக்கமான விந்த ப்ரவ்ருத்திகள் அவன் முகமலர்த்திக்காகப் பண்ணும் கைங்கர்யத்தோபாதியாய்க் கொண்டு உபேயத்திலே அந்தர்ப்பூதமாயிருக்குமென்கை. (உபாய ப்ரதிபந்தகமாகாது) என்றது, ஏவம் பூதமானது உபாயத்தினுடைய கார்யகரத்வத்துக்கு விலக்காகா தென்றபடி.
“உபாயபலம்” என்றால் ஸித்தோபாயமாக உள்ள எம்பெருமான் எதனையும் எதிர்பாராமல் செய்த செய்கை என்பதாகும். திருவாய்மொழி (1-1-1) - மயர்வற மதிநல மருளினன் – என்றும், திருவாய்மொழி (5-3-4) – பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர்மேனி நங் கண்ணன் – என்றும் கூறுவதற்கு ஏற்ப “சரீரம் துறத்தல்” உள்ளிட்ட செயல்களுக்கு அடிப்படைக் காரணமாக உள்ள பக்தியை உண்டாக்கியவனும், வளர்த்தவனும் அவனே அல்லவோ? எனவே பக்தியால் பரவசம் அடைந்த நிலை காரணமாக விளைகின்ற இச்செயல்களை உபாய பலம் என்றது பொருத்தமே ஆகும். ” உபேயாந்தர்பூதா யிருக்குமது” என்பது என்ன? அவனை விரைவாக அடைந்து விட வேண்டும் என்ற வேகத்தின் காரணமாக நிலைதடுமாறி ஒருவன் படுகிற பிரிவாற்றாமை துன்பங்கள் அனைத்தும் “நம்மை அடைய இவன் இத்தனை பாடுபடுகிறானே!” என்று எம்பெருமான் திருமுகம் மலர்வதற்கே ஆகும்; இதனால் மடல் எடுத்தல் போன்ற செயல்கள் அனைத்தும் அவனது திருமுகம் மலர்வதற்காகச் செய்யப்படும் கைங்கர்யம் போன்ற உபாயத்தில் அடக்கமே ஆகும். “உபாய ப்ரதிபந்தகமாகாது” என்பது என்ன? இத்தகைய செயல்கள் உபாயமான எம்பெருமான் நமக்காகச் செய்கின்ற செயல்களுக்குத் தடையை உண்டாக்காது என்பதாகும்.