Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 91)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
ஜ்ஞாநவிபாக கார்யமான அஜ்ஞானத்தாலே வருமவையெல்லாம் அடிக்கழஞ்சு பெறும்.
இத்தனையும் கலக்கத்தாலே வந்தவையிறே, அஜ்ஞாந மூலமாய் வருமவை யொன்று மாதரணீயமன்றே என்ன வருளிச்செய்கிறார் (ஜ்ஞாந) இத்யாதியாலே.
இப்படிப்பட்ட செயல்கள் அனைத்தும் (காமனைத் தொழுவது, மடல் எடுப்பது) எம்பெருமானைக் குறித்து எண்ணியபடி உள்ளதால் ஏற்பட்ட கலக்கம் காரணமாக வந்தது அல்லவோ? ஆகவே அறிவின்மை காரணமாக இவை வந்ததால் இவற்றைக் குற்றம் என்றே கொள்ள வேண்டும் அல்லவோ? இதற்கு விடை அருளிச்செய்கிறார்.
(ஜ்ஞாந விபாகமாவது) – ”ஞானங்கனிந்தநலம்” என்கிறபடியே, ஜ்ஞாநத்தினுடைய பரிபாக ரூபையான பக்தி; அதின் கார்யமான (அஜ்ஞாநமாவது) – அந்த பக்த்யதிசயத்தாலே வரும் ப்ராப்தாப்ராப்த விவேகாபாவம்; அத்தாலே வரும் ப்ரவ்ருத்தி விசேஷங்களெல்லாம் (அடிக்கழஞ்சுபெறும்) என்றது, அதி ச்லாக்யங்களா யிருக்கு மென்றபடி. கர்ம நிபந்தநமான அஜ்ஞாநத்தாலே வருமவையே ஹேயங்களென்று கருத்து.
“ஜ்ஞாநம விபாகம்” என்றால் இராமாநுச நூற்றந்தாதி (66) – ஞானம் கனிந்த நலம் – என்று கூறுவதற்கு ஏற்ப ஞானம் என்பது உயர்ந்த பக்குவத்தை அடைந்து ஏற்படுகின்ற பக்தி என்பதாகும். அதன் விளைவாக உண்டாகும் அஜ்ஞானம் என்பது என்ன? அந்தப் பக்தியின் எல்லையற்ற நிலை காரணமாக எது சரி, எது தவறு என்று அறிய இயலாமல் உள்ள தன்மை ஆகும். இந்த நிலையின் மூலம் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் மிகுந்த போற்றுதல்களுக்கு உரியவை என்று கருத்து. அடிக்கழஞ்சு என்றால் - ஓர் அடி அளவே உள்ள நிலமானது கழஞ்சு என்னும் அளவு கொண்ட தங்கத்திற்கு சமம் என்று பொருள்; அதாவது நிலம் இங்கு மேன்மையுடன் கூறப்பட்டது. இந்த நிலம் போன்று இவர்களின் அறியாமை கொள்ளப்படுகிறது. ஆனால் கர்மம் காரணமாக உண்டாகிற அறியாமை என்பது மட்டுமே தாழ்வானவையே ஆகும்.