Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 90)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
அநந்யோபாயத்வமும் அநந்யோபேயத்வமும் அநந்யதைவத்வமும் குலையும்படியான ப்ரவ்ருத்தி காணாநின்றோமிறே.
அன்றிக்கே, இந்த ப்ரவ்ருத்திதான் உபாயகோடிலேயந்வயித்ததாகிலும் அநந்யோபாயத்வத்துக்குக் குலைதல் வருமித்தனையிறே, அது ப்ரேமபரவசர்க்கு அவத்யமன் றென்கைக்காக ப்ரேமபரவசர் ப்ரவ்ருத்திகளை தர்சிப்பிக்கிறார் (அநந்யோ பாயத்வமும்) என்று தொடங்கி.
அல்லது, இது போன்று சரீரம் விடுவது முதலான செயல்கள் உபாயமாகக் கொள்ளப்பட்டாலும் தவறு இல்லை எனலாம். இவ்விதம் கொண்டால் வேறு எந்த ஒரு உபாயத்தையும் கைக்கொள்ள்வதில்லை என்ற நிலைக்கு முரண்பாடு உண்டாகும் அல்லவோ? இதற்கு விடையாக “இந்தச் செய்கை அன்பின் மிகுதியால் வருவதால், அது அவர்களின் தோஷம் ஆகாது” என்று விளக்கும் விதமாக, அன்பின் வசப்பட்டவர்கள் செய்யும் செயல்களை உரைக்கிறார்.
அநந்யோபாயத்வம் குலையும்படியான ப்ரவ்ருத்தியாவது “திருந்தவே தோற்கின்றேன்”, ”நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள்”, ”குதிரியாய் மடலூர்தும்”, ”ஓதிநாமம்”, “ஊராதொழியேன் நான் வாரார்பூம் பெண்ணைமடல்”, ”உலகறியவூர்வன் நான் மன்னியபூம் பெண்ணைமடல்” என்று நோன்பு நோற்கை, மடலெடுக்கை முதலான வ்யாபாரங்களிலே யிழிகை. அநந்யோபேயத்வம் குலையும்படியான ப்ரவ்ருத்தியாவது - அத்தலைக்கதிசயத்தை விளைக்கையே புருஷார்த்தமென்றிருக்கை தவிர்ந்து, “நமக்கே நலமாதலில்” என்றும், “தூமலர்த் தண்ணந்துழாய் மலர்கொண்டு சூடுவோம்” என்றும் தனக்கதிசயம் தேடத்தொடங்குகை. அநந்யதைவத்வம் குலையும்படியான ப்ரவ்ருத்தியாவது, “காமதேவா வுன்னையுமும்பியையும் தொழுதேன்”, “பேசுவதொன்றுண் டிங்கெம்பெருமான்” என்று காமன் பக்கலிலே தேவதா புத்தி பண்ணி யாராதிக்கை. (காணா நின்றோமிறே) என்றது, ப்ராப்ய வஸ்துவின் ப்ராவண்யாதிசயத்தாலே பேரளவுடையவர்கள் பக்கலிலு முண்டாகக் காணாநின்றோமிறே என்கை. முன்பு சொன்ன ப்ரவ்ருத்திக்கு உபயகோட்யநவயம் வஸ்துகதயா வருமென்று கொள்ளுகிற மாத்ரமிறே; அங்ஙனன்றிக்கே, நேரேயுபாய புத்த்யாவநுஷ்ட்டிதமானவையிறே யிவை; ஆகையால் ப்ரேமபரவசர்க்கிது அவத்யமன்தென்று கருத்து.
“அவனைத் தவிர மற்ற எதனையும் உபாயமாகக் கொள்ளாமல் இருத்தல்” என்னும் உறுதி மாறும்படியாகக் காமனைக் குறித்து நோன்பு எடுத்தல், அவன் அழியவேண்டும் என்று மடல் எடுத்தல் போன்ற செய்கைகள் உள்ளனவே. இவற்றை நாச்சியார் திருமொழி (1-6) – திருந்தவே தோற்கின்றேன், (1-8) – நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள், திருவாய்மொழி (5-3-9) – குதிரியாய் மடலூர்தும், பெரிய திருமொழி (9-3-9) – ஓதிநாமம், சிறியதிருமடல் – ஊராதொழியேன் நான் வாரார்பூம் பெண்ணைமடல், சிறியதிருமடல் – உலகறியவூர்வன் நான் மன்னியபூம் பெண்ணைமடல் – போன்றவைகளில் காணலாம். “அவனைத் தவிர வேறு எதனையும் உபாயமாகக் கொள்ளாமல் இருத்தல்” என்னும் உறுதி மாறும்படியாக, ”அவனுக்கு மேன்மை உண்டாக்குவதே எனது புருஷார்த்தம்” என்னும் எண்ணம் மாறுபட்டு, தனக்கு ஏற்ற நன்மையைத் தேடுதல் காணலாம். எங்கு? பெரியதிருமொழி (9-3-9) – நமக்கே நலமாதலில், திருவாய்மொழி (5-3-10) - தூமலர்த் தண்ணந்துழாய் மலர்கொண்டு சூடுவோம் – போன்ற பாசுரங்களில் காணலாம். “அவனைத் தவிர மற்ற தெய்வம் இல்லை” என்னும் உறுதி குலையும்படி, காமனைத் தெய்வம் என்று ஆராதிக்கும் நிலையை நாச்சியார் திருமொழி (1-1) – காமதேவா வுன்னையுமும்பியையும் தொழுதேன், (1-8) – பேசுவதொன்றுண் டிங்கெம்பெருமான் - என்ற வரிகளில் காணலாம். ”காணா நின்றோமிறே” என்பது என்ன? அடையத்தகுந்தவனாகிய எம்பெருமானிடம் உண்டான அளவு கடந்த ப்ரேமை காரணமாக, பேரளவுடையவர்கள் பக்கமும் அதே ப்ரேமை ஏற்படுகிறது என்று கருத்து. “சரீரத்தை விடுதல்” என்பது அந்தச் செயலின் தன்மை காரணமாகவே உபாயமாகக் கொண்டு பேசப்பட்டது. ஆனால் இங்கு கூறப்பட்ட மூன்று செயல்களும் உபாயம் என்ற எண்ணத்துடன் செய்யப்பட்டவை ஆகும். அப்படி என்றால் “அவனைத் தவிர மற்ற உபாயம் கைக்கொள்ளுதல்” என்ற தோஷம் ஏற்படுமே என்றால், பக்தியின் வசப்பட்டு நிற்பவர்களுக்கு இந்தத் தோஷம் ஏற்படாது என்று கருத்து.