Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 89)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
அநுஷ்டாநமும் அநநுஷ்டாநமும் உபாயகோடியிலந்வயியாது.
உபாயோபேயாதிகாரங்களுக்குடலாக மற்றுஞ் சொன்ன அநுஷ்டாநங்கள் போலன்றிக்கே, உபாயதயா சாஸ்த்ரஸித்தமாகையாலே, அநந்ய ஸாதநனுக்கு அநநுஷ்டாநமானவிந்த தேஹத்யாகம் ராகப்ராப்தமாகையாலே துஸ்த்யஜமா யிருந்ததே யாகிலும், உபாய கோடியிலே யந்வயித்தன்றி நில்லாதே யென்னவருளிச் செய்கிறார் “அநுஷ்டாநமும்” என்று தொடங்கி.
– மற்ற எந்தவிதமான ஸாதனத்தையும் கைக்கொள்ளாமல் எம்பெருமானை மட்டுமே ஸாதனமாக ஒருவன் பற்றியுள்ளான் என்று வைத்துக்கொள்வோம். மேலே கூறப்பட்ட உபாய உபேய அதிகாரங்களுக்கு அங்கமாக உள்ள சரீரத்தைத் துறத்தல் முதலானவை சாஸ்த்ரங்களால் உபாயமாக விதிக்கப்பட்டவை ஆகும். அப்படி உள்ளபோது மேலே கூறப்பட்ட ஒருவன் தனது ஆசை காரணமாக உண்டான செய்கை என்பதால் எம்பெருமானுக்காக சரீரம் விடுதல் போன்றவற்றைக் கைவிடாமல் உள்ளபோதும், அவை உபாயங்களாக ஆகிவிடாதோ (அப்போது எம்பெருமான் தவிர மற்ற உபாயங்களைக் கைக்கொள்வதாக ஆகிவிடுமே)? இந்தக் கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, அநுஷ்டாநமாகச் சொன்ன ஸ்வசக்தி த்யாகாதிகளும் ப்ரேமாதி களும் உபாயோபேயாதிகாராந்தர்ப்பூதமாகையாலே உபாயகோடியிலந்வயியாதாப் போலே அநநுஷ்டாநமாகச் சொன்ன ஸ்வதேஹத்யாகமும், உபாய புத்த்யா அநுஷ்டிதமன்றிக்கே ராகப்ராப்தமாகையாலே உபாயகோடியிலந்வயியாது; உபேயாதிகாரத்திலே யந்தர்ப்பவிக்குமத்தனை என்கை. உபாயதயா சாஸ்த்ர ஸித்தமேயாகிலும், உபாயபுத்த்யா வநுஷ்டிதமானதுக்கேயிறே உபாயத்வமுள்ளது. அங்ஙனன்றாகில் ப்ரபந்நனானவனுபாய புத்தியற உபேயபுத்த்யா பண்ணுகிற புண்யதேச வாஸாதிகளுமுபாய கோடியிலே அந்வயிக்க வேணுமிறே.
அநுஷ்டானங்களாக உரைக்கப்பட்ட “தனது சக்தியைக் கைவிடுதல்” போன்றவையும், “அன்பு” முதலானவையும் உபாயம் மற்றும் உபேய அதிகாரங்களில் சேர்ந்தவை என்பதால் அவை உபாயங்களின் வரிசையில் சேராது. தனது சரீரத்தை விடுதல் என்பது ப்ரபந்நன் ஒருவனுக்கு முரணாக செய்கை என்று கூறப்படாமல்; ஆனால் அத்தகைய செய்கையானது ”உபாயம்” என்ற எண்ணத்துடன் செய்யப்படாமல், ஆசை காரணமாகச் செய்யப்படும்போது உபாயம் ஆகாது; அதுவும் உபேயம் என்பதிலேயே அடங்கிவிடும். எந்த ஒரு செயலும் உபாய புத்தியுடன் செய்யப்பட்டால் மட்டுமே, அது சாஸ்த்ரங்களில் கூறப்பட்டபடி உபாயமாகும் தன்மை அடைகிறது. இவ்விதம் கொள்ளவில்லை என்றால், உபாயம் என்று கருதாமல், உபேயம் என்று எண்ணியபடி ப்ரபந்நன் ஒருவன் திவ்யதேசத்தில் வசித்தல் என்பதும் உபாயமாக அல்லவோ கொள்ளப்படவேண்டும்? (இவ்விதம் கொள்ளப்படுவதில்லை)