Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 88)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

அப்ராப்த விஷயங்களிலே ஸக்தனானவன் அது லபிக்கவேணும் என்றிரா நின்றால், ப்ராப்த விஷயப்ரவணனுக்குச் சொல்லவேண்டாவிறே.

இப்படியொரு ஸாதந புத்த்யாவன்றிக்கே, தத் விஷய ப்ராவண்யாதி சயத்தாலே ஸ்வதேஹத்தை விடும்படியான நிலை விளையக்கூடுமோவென்ன வருளிச்செய்கிறார் (அப்ராப்த) இத்யாதி.

எம்பெருமானை எண்ணியபடியே சரீரத்தை விடுதல் என்பது மோக்ஷ ஸாதனம் என்ற எண்ணம் காரணமாகவே ஒருவன் சரீரத்தை விடக்கூடும். இவ்விதம் அல்லாமல் எம்பெருமான் மீது உள்ள ஆசை காரணமாக சரீரத்தை விரும்பியதான நிலை உண்டாகுமோ என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, ஸ்வரூப ப்ராப்தமல்லாத ஹேயவிஷயங்களிலே ப்ரவணனானவன், தன்னையழிய மாறியாகிலும் அவ்விஷயத்தை லபிக்கவேணுமென்று ஸ்வதேஹ த்யாகத்திலே ப்ரவர்த்தியா நின்றால் ஸ்வரூப ப்ராப்தமான விலக்ஷண விஷயத்திலே ப்ரவணனானவனுக்கு, அவ்விஷயத்தைப் பற்றித் தன்னையழிய மாறுகையாகிறவிது கூடுமென்னுமிடம் கிம்புநர் ந்யாயஸித்தமன்றோவென்கை. ஒரு வேச்யையளவிலேயொருவன் அதிஸக்தனாய்க்கொண்டு போருமவனாய், அவளுக்கு வ்யாதி கனக்கவந்தவளவிலே “இவள் ஆறியெழுந்தவறே நான் என் தலையையரிந்து தருகிறேன்” என்றொரு தேவதைக்கு ப்ரார்த்தித்து, பின்பு தலையையரிந்து கொடுப்பது செய்தானென்று ப்ரஸித்தமிறே.

தனது ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு ஏற்றதாக இல்லாத தாழ்வான விஷயங்களில் நாட்டம் கொண்ட ஒருவன், தனது சரீரம் அழியும் என்றாலும் துணிந்து அந்த விஷயங்களில் ஈடுபடவேண்டும் என்று எண்ணுகிறான். இதன் விளைவாக தனது சரீரத்தை விடுகின்ற நிலைக்கும் செல்கிறான். அற்பமான விஷயத்தைக் குறித்தே இப்படி உள்ளபோது, தனது ஆத்மஸ்வரூபத்திற்கு ஏற்றதான எம்பெருமான் விஷயத்தில் மிகுந்த ப்ரேமை கொண்ட ஒருவன் எம்பெருமானுக்காகத் தன்னை அழித்துக்கொள்வது என்பது நிகழும் என்பதை மீண்டும் தனியாகக் கூறவேண்டுமோ? ஒரு வேசி மீது மிகுந்த காதல் கொண்ட ஒருவன் அவளுக்கு உள்ள நோயைக் கண்டான். உடனே அவன், ”இவளது நோய் குணமானால் எனது தலையை அளிக்கிறேன்”, என்று ஒரு தெய்வத்திடம் வேண்டினான். அந்த நோய் நீங்கியவுடன், தான் கூறியது போன்று, தனது தலையை அறுத்து அளித்தான் என்பது மிகவும் ப்ரஸித்தமான நிகழ்வாகும்.