Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 87)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

உபாயத்வநுஸந்தாநம் நிவர்த்தகம்; உபேயத்வாநுஸந்தாநம் ப்ரவர்த்தகம்.

வைதமாய் வருமளவில் ஸுத்யஜமாய், ராகப்ராப்தமாய் வருமளவில் துஸ்த்யஜமாவானென்னென்ன வருளிச்செய்கிறார் (உபாயத்வ) இத்யாதியாலே.

சாஸ்த்ரம் மூலமாக உண்டாகின்ற விதிகளை எளிதில் தள்ளும்படியாகவும், ஆசை காரணமாக உண்டாவதை எளிதில் கைவிட இயலாதபடியும் எவ்விதம் நிகழ்கிறது என்ற கேள்விக்கு விடை அளிக்கிறார்.

– (உபாயத்வாநுஸந்தாநம் நிவர்த்தகம்) என்றது, வைதமாய் வரும் தசையில் தேஹ த்யாக ரூப ப்ரவ்ருத்தியிலுபாயத்வாநுஸந்தாநம் நடக்கையாலே, அவ்வநுஸந்தாநமிவனை ஸாதநதயா ஸம்ப்ரதிபந்நமான இத்தேஹ த்யாக ரூப ப்ரவ்ருத்தியில் நின்றும் மீளுவிக்குமென்றபடி. (உபேயத்வாநுஸந்தாநம் ப்ரவர்த்தகம்) என்றது, ராகப்ராப்தமாய் வரும் தசையில், இவ்விஷயத்துக்கு ஹாநி வரக்கண்டிருப்பதில் முடிகையே நல்லது என்று தேஹ த்யாகந்தன்னை புருஷார்த்தமாக வநுஸந்திக்கையாலே, அவ்வநுஸந்தாநமிவனையதிலே மூளுவிக்குமென்றபடி. அன்றிக்கே, வைதமாய் வரும்போது, பகவத் விஷயத்திலுபாயத்வாநுஸந்தாநம் இதுக்கு நிவர்த்தகமாம்; ராக ப்ராப்தமாய் வரும்போது, அவ்விஷயத்தில் உபேயத்வாநுஸந்தாநமிதுக்கு ப்ரவர்த்தகமா மென்னவுமாம்.

“உபாயத்வாநுஸந்தாநம் நிவர்த்தகம்” என்பது என்ன? சாஸ்த்ரம் மூலமாக உண்டாகின்ற விதிகளில், ”சரீரத்தைக் கைவிடுதல்” என்பதில் அந்தச் செயல் உபாயம் என்று எண்ணிவிடக்கூடிய தன்மை உண்டு; ஆகவே அந்த அந்த எண்ணம் காரணமாக இவன் அந்தச் செயலில் ஈடுபடாமல் இருந்துவிடுவான். “உபேயத்வாநுஸந்தாநம் ப்ரவர்த்தகம்” என்பது என்ன? ஆசை காரணமாக உண்டாகின்ற செயல்களில் – எம்பெருமானுக்குத் தீமை உண்டாகும்போது அதனைக் கண்டவுடன் உயிரை விடுதலே நன்மை என்று சரீரத்தை விடுதல் என்பதை ஒரு பேறாக எண்ணும்போது, அந்த எண்ணம் அந்தச் செயலில் அவனை ஈடுபடுத்திவிடும். அல்லது சாஸ்த்ரம் மூலமாக வரும்போது பகவானே உபாயம் என்ற எண்ணம் அந்தச் செயலில் இருந்து மீட்டுவிடும்; ஆசை காரணமாக வரும்போது பகவானே உபாயம் என்ற எண்ணம் அந்தச் செயலில் நிலைநிறுத்திவிடும் எனலாம்.