Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 86)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
இவனுக்கு வைதமாய் வருமதிறே த்யஜிக்கலாவது, ராகப்ராப்தமாய் வருமது த்யஜிக்கவொண்ணாதிறே.
– ”விஷ்ணோ: கார்யம் ஸமுத்திச்ய தேஹ த்யாகோ யதா க்ருத: ததா வைகுண்டமாஸாத்ய முக்தோ பவதி மாநவ” என்று ஆக்நேய புராணத்திலும், ”தேவகார்ய பரோ பூத்வா ஸ்வாம் தநும் ய: பரித்யஜேத் ஸயாதி விஷ்ணு ஸாயுஜ்யமபி பாதக க்ருந் நர:” என்று வாயவ்யத்திலும், “ரங்கநாதம் ஸமாச்ரித்ய தேஹத்யாகம் கரோதிய: தஸ்ய வம்சேம்ருதாஸ் ஸர்வே கச்சந்த்யாத்யந்திகம் லயம்” என்று வாமநீயத்திலும் சொல்லுகையாலும், விசேஷித்து ஆச்வமேதிக பர்வத்தில் வைஷ்ணவ தர்மசாஸ்த்ரத்தில் பஞ்சமாத்யாயத்திலே “அக்நி ப்ரவேசம் யச்சாபி குருதே மத்கதாத்மநா ஸ யாத்யக்நி ப்ரகாசேந விமாநேந மமாலயம், ப்ராணாம்ஸ் த்யஜதி யோ மர்த்யோ மாம் ப்ரபந்நோ ப்யநாசகம் பாலஸூர்ய ப்ரகாசேந வ்ரஜேந் யாநேந மத் க்ருஹம்” என்று பகவான் தானேயருளிச் செய்கையாலும், இப்படி மோக்ஷ ஸாதநமாகச் சொல்லப்படுகிற பகவதர்த்தமானே ஸ்வதேஹ த்யாகம் அநந்ய ஸாதநனான விவனுக்கு த்யாஜ்யமன்றோ, ப்ரபந்நராயிருக்கிற பிள்ளை திருநறையூரரையரித்தை யநுஷ்டிப்பா னென்னென்ன வருளிச் செய்கிறார் (இவனுக்கு) என்று தொடங்கி.
ஆக்நேய புராணம் விஷ்ணோ: கார்யம் ஸமுத்திச்ய தேஹ த்யாகோ யதா க்ருத: ததா வைகுண்டமாஸாத்ய முக்தோ பவதி மாநவ - மஹாவிஷ்ணுவின் காரியத்தை எண்ணியபடியே எப்போது சரீரம் விடப்படுகிறதோ அப்போதே அந்த ஜீவன் ஸ்ரீவைகுண்டம் அடைந்து முக்தன் ஆகிறான் - என்றது. வாயுபுராணம் தேவகார்ய பரோ பூத்வா ஸ்வாம் தநும் ய: பரித்யஜேத் ஸயாதி விஷ்ணு ஸாயுஜ்யமபி பாதக க்ருந் நர: - யார் ஒருவன் தேவகாரியத்தைச் செய்பவனாக தனது சரீரத்தை விடுகிறானோ, அவன் பாவங்கள் செய்திருந்தாலும் விஷ்ணுலோகம் அடைகிறான் - என்றது. வாமநபுராணம் - ரங்கநாதம் ஸமாச்ரித்ய தேஹத்யாகம் கரோதிய: தஸ்ய வம்சேம்ருதாஸ் ஸர்வே கச்சந்த்யாத்யந்திகம் லயம் - எந்தப் பயனும் எண்ணாமல் யார் ஒருவன் ஸ்ரீரங்கநாதனை அடைந்து தனது சரீரத்தை விடுகிறானோ அவனது வம்சத்தில் இருந்து போன அனைவரும் மோக்ஷம் அடைகின்றனர் - என்றது. ஆச்வமேதிக பர்வம், வைஷ்ணவ தர்ம சாஸ்த்ரம் ஐந்தாம் அத்யாயத்தில் - அக்நி ப்ரவேசம் யச்சாபி குருதே மத்கதாத்மநா ஸ யாத்யக்நி ப்ரகாசேந விமாநேந மமாலயம், ப்ராணாம்ஸ் த்யஜதி யோ மர்த்யோ மாம் ப்ரபந்நோ ப்யநாசகம் பாலஸூர்ய ப்ரகாசேந வ்ரஜேந் யாநேந மத் க்ருஹம் - என்னிடம் மனதை வைத்து யார் ஒருவன் தீயில் முழுகுகிறானோ அவன் தீ போன்று ப்ரகாசத்துடன் கூடிய விமானத்தில் பரமபதம் அடைகிறான்; எந்த ஒருவன் தனது பாரம் முழுவதையும் என்னிடம் வைத்தவனாக இறக்கிறானோ, அவன் இளஞ்சூரியன் போன்று மின்னும் விமானம் ஏறி, நாசம் இல்லாத பரமபதம் அடைகிறான் - என்று எம்பெருமான் தானே அருளிச்செய்தான். ஆக இவற்றின் மூலம் மோக்ஷத்திற்கு ஸாதனமாகக் கூறப்படும் எம்பெருமான் விஷயமாக சரீரத்தை விடுதல் என்பது, மற்ற ஸாதனங்கள் எதனையும் கைக்கொள்ளாத ப்ரபந்நனால் கைவிடத்தக்கது அல்லவோ? இப்படி உள்ளபோது ப்ரபந்நராக உள்ள பிள்ளை திருநரையூர் அரையர் இந்தச் செயலை ஏன் செய்தார் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
அதாவது ”இதம் குர்யாத்” என்று ஒரு விதிப்ரயுக்தமாய் வருமதிறே ப்ராப்தா ப்ராப்த விவேகம் பண்ணியிவனுக்குக் கைவிடலாவது; அங்ஙனன்றிக்கே, தன் விரஹத்திலாற்றப் போகாதபடி போக்யமுமாய் ப்ராப்தமுமான விஷயத்தில் ராகப்ரயுக்தமாய் வருமது வருந்தியும் கைவிடப்போகாதிறே யென்கை.
செய்யத்தக்கது எது, தள்ளத்தக்கது எது என்று அறிந்து, ப்ரபந்நனால் “இதம் குர்யாத் = இதனைச் செய்” போன்ற விதி வாக்கியங்களால் வருபவை மட்டுமே தள்ளக்கூடியதாக இருக்கும். ஆனால் எம்பெருமானைப் பிரிந்த பிரிவின்போது தாங்க இயலாமல், இனிமையானவனும் அடைவதற்கு ஏற்றவனும் ஆகிய எம்பெருமான் விஷயத்தில் ஆசையின் அடிப்படையில் வருவதே அரையர் செய்த செய்கை ஆகும். இது போன்றவை மிகவும் கடினப்பட்டு கைவிட முயற்சித்தாலும் இயலாது.