Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 85)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

உபாயத்துக்கு, சக்தியும் லஜ்ஜையும் யத்நமும் குலைய வேணும்; உபேயத்துக்கு ப்ரேமமும் தன்னைப் பேணாமையும் தரியாமையும் வேணும்.

ஆக இப்படி நிதர்சநபூதர்படிகளைச் சொல்லி, இனி யிவர்களைப்போலே யிருக்கவேணுமென்றதின் கருத்தையருளிச் செய்கிறார் (உபாயத்துக்கு) இத்யாதி வாக்யத்வயத்தாலே.

– இப்படியாக உண்மையாகவே நடந்தவற்றைக் கூறி, “இனி இவர்கள் போன்று இருத்தல் வேண்டும்” என்ற கருத்தை இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.

– அதாவது, உபாயத்துக்கதிகாரியாம்போது, தன்னுடைய ரக்ஷணம் தானே பண்ணிக்கொள்ளுகைக்குறுப்பான சக்தியும், தான் பரிக்ரஹிக்கிற உபாயத்துக்கு விரோதிகளானவற்றை விடுமளவில் நாட்டார் சிரிக்குமதுக்குக் கூசும் லஜ்ஜையும், தன் பாரதந்த்ர்ய விரோதியான ஸ்வயத்நமும் கைவிடவேணும்; உபேயத்துக் கதிகாரியாம்போது, சேஷியைப் பிரியாதே நின்று எல்லாவடிமையு மவனேவினபடி செய்ய வேணுமென்னும் ப்ரேமமும், அத்தலைக்கொரு தீங்குவரில் அது கண்டாற்ற மாட்டாமல் தன்னுடம்பை யுபேக்ஷிக்கையும், தத்விக்ரஹாநுபவாலாபத்தில் தரித்திருக்க மாட்டாமல் மூச்சடங்கும்படியாகையும் வேணுமென்றபடி. ஆகையாலே, அவர்களைப் போலேயிருக்கையாவது - இவ்வதிகாரங்களை யுடையராகை யென்று கருத்து.

உபாயத்திற்கு அதிகாரியாகும்போது - தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள உதவியாக உள்ள சக்தி, தான் கைக்கொள்ளும் உபாயத்திற்கு விரோதிகளாக உள்ளவற்றைக் கைவிடும்போது அதனைக்கண்டு உலகில் உள்ளவர்கள் சிரித்தால் கொள்ளும் வெட்கம், தனது பாரதந்த்ர்யத்திற்கு விரோதியாக உள்ள தனது முயற்சிகள் – ஆகிய அனைத்தையும் கைவிடவேண்டும். உபேயத்திற்கு அதிகாரியாகும்போது - எஜமானனாகிய எம்பெருமானை விட்டு அகலாமல் அனைத்து அடிமைத் தொழில்களையும் அவனது ஆணைக்கு ஏற்பச் செய்யவேண்டும் என்றுள்ள அன்பு, அவனுக்கு ஏதேனும் தீமை உண்டானால் அதனைக் கண்டு பொறுத்துக்கொள்ள இயலாமல் தனது உடலையும் வெறுத்தல், அவனது விக்ரஹத்தை அனுபவிக்க இயலாதபோது தாங்க இயலாமல் மூச்சு அடங்குவது - என்று இருத்தல் வேண்டும். ஆக சூர்ணை 84-ல் கூறியவர்கள் போல் இருப்பது என்பது, இந்தச் சூர்ணையில் கூறப்பட்டது போன்று இருத்தல் ஆகும்.