Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 84)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

பெரியவுடையாரும் பிள்ளை திருநறையூரரையரும் உடம்பை யுபேக்ஷித்தார்கள்; சிந்தயந்திக்குடம்பு தன்னடையே போயிற்று.

(பெரியவுடையாரும் பிள்ளை திருநறையூரரையரும் உடம்பை யுபேக்ஷித்தார்கள்) ஸ்ரீஜடாயு மஹாராஜரை பெரியவுடையார் என்றாய்த்து நம் முதலிகளருளிச்செய்வது. இவர்தாம், பஞ்சவடியிலே பெருமாளெழுந்தருளி தம்மை யங்கீகரித்து “இஹ வத்ஸ்யாமி ஸௌமித்ரே ஸார்த்தமேதேந பக்ஷிணா” என்றவன்று தொடங்கி திருவடிகளுக்கு மிகவும் பரிவராய், பெருமாளெழுந்தருளியிருக்கிற திவ்யாச்ரமத்துக் காஸந்நமாக வர்த்தியா நிற்கச்செய்தே, அசிந்திதமாக ராவணன் வந்து பிராட்டியைப் பிரித்துக்கொண்டு போக, அப்போது பிராட்டி இவரையொரு வ்ருக்ஷத்தின் மேலே கண்டு “என்னை யிவனிப்படி யபஹரித்துக் கொண்டு போகாநின்றான்” என்று இவர் பேரைச் சொல்லிக்கூப்பிட, உறங்குகிறவிவர் அந்த ஆர்த்த த்வநியைக் கேட்டுணர்ந்து, ராவணன் கொண்டு போகிறபடியைக் கண்டு “உனக்கிது தகாதுகாண்” என்று தர்மோபதேசம் பண்ணினவளவில் அவன் கேளாமையாலே, “நம் ப்ராணனோடேயிது கண்டிருக்கக் கடவோமல்லோம், யுத்தம் பண்ணி மீட்குதல், இல்லையாகில் முடிதல் செய்யக் கடவோம்” என்று அத்யவஸித்து, அதிபல பராக்ரமராகையாலே யவனோடே மஹாயுத்தத்தைப் பண்ணி, அவன் கையாலேயடிபட்டு விழுந்து தந்திருமேனியை விட்டாரிறே. பிள்ளை திருநறையூரரையர் ஸகுடும்பமாக திருநாராயணபுரத்தில் வேதநாராயணப் பெருமாளை ஸேவிக்கச் சென்று புகுந்தவளவிலே பரஸமயிகள் அந்தக் கோயிலிலே அக்நி ப்ரக்ஷேபத்தைப் பண்ண, உள்ளு நின்றவர்களெல்லாரும் புறப்பட்டோடிப் போகச்செய்தே, அந்த வெம்பெருமான் திருமேனிக் கழிவு வருகிற படியைக் கண்டு ஸஹிக்கமாட்டாத ப்ரேமாதிசயத்தாலே தாமுமொக்க முடிவதாக வத்யவஸித்து இவர் நிற்கையாலே பிள்ளைகளும் இவரை விட்டுப் போகோம் என்று நிற்க, அவர்களும் தாமும் கூடவதுக்குள்ளே நின்று திருமேனியை விட்டாரென்று ப்ரஸித்தமிறே. (சிந்தயந்திக்குடம்பு தன்னடையே போயிற்று) அதாவது “காசித் ஆவஸதஸ்யாந்தே ஸ்தித்வ த்ருஷ்ட்வா பஹிர்குரும் தந்மயத்வேந கோவிந்தம் தத்யௌ மீலிதலோசநா. தச்சித்த விமலாஹ்லாத க்ஷிண புண்யசயா ததா ததப்ராப்தி மஹாதுக்க விலீநாசேஷ பாதகா – சிந்தயந்தீ ஜகத்ஸூதிம் பரப்ரஹ்ம ஸ்வரூபிணம் –நிருச்ச்வாஸதயா முக்திம் கதாந்யா கோபகந்யகா” என்கிறபடியே திருக்குரவையினன்று திருக்குழலோசையைக் கேட்டு, ஸ்ரீப்ருந்தாவநத்தேறப் போவதாகப் புறப்பட்டவளவிலே, குருதர்சநத்தாலே போகமாட்டாமல் நின்று க்ருஷ்ணனை த்யாநம் பண்ணி, தத்கதசித்தை யாகையாலே வந்த நிர்மல ஸுகத்தாலும் தத்ப்ராப்தி நிபந்தநமான நிரவதிக துக்கத்தாலும் ப்ரக்ஷீணாசேஷ புண்யபாபையாய், தத்ஸ்மரணம் செல்லாநிற்க, தத்ப்ராப்த்யலாப க்லேசத்தாலே தரிக்கமாட்டாமல் மூச்சடங்குகையாலே, இவளுக்குத் தானுபேக்ஷிக்க வேண்டாதபடி தேஹம் தன்னடையே விட்டுக்கொண்டு நின்றதென்கை.

ஸ்ரீஜடாயு மஹாராஜரைப் பெரியஉடையார் என்றே ஸ்ரீவைஷ்ணவர்கள் அழைப்பார்கள். பஞ்சவடியில் இராமன் எழுந்தருளியபோது லக்ஷ்மணனிடம் இராமாயணம் ஆரண்யகாண்டம் (15-19) – இஹ வத்ஸ்யாமி ஸௌமித்ரே ஸார்த்தமேதேந பக்ஷிணா - பறவைகளின் அரசனாகிய இந்த ஜடாயுவுடன் நான் இங்கே வசிக்கப்போகிறேன் - என்றான். இவ்விதமாகத் தன்னை ஏற்றுக்கொண்ட இராமனின் திருவடிகளில் ஜடாயு மிகவும் அன்புடன் விளங்கினார். இராமன் வசித்து வந்த பர்ணசாலைக்கு மிகவும் அருகில் தானும் வசிந்து வந்தார். அப்போது சற்றும் எதிர்பாராமல் இராவணன் வந்து சீதையைப் பிரித்துக்கொண்டு சென்றான். அந்த நேரத்தில் ஜடாயு ஒரு மரத்தின் மீது அமர்ந்துள்ளதைக் கண்ட சீதை, ”என்னை இவ்விதமாக இவன் அபகரித்துச் செல்கிறான்” என்று இவரது பெயரைக் கூறி அழைத்தாள். உறங்கிக் கொண்டிருந்த ஜடாயு சீதையின் அந்த துயர ஓசை கேட்டு விழித்தவராக, இராவணன் சீதையைக் கொண்டு செல்வதைக் கண்டார். அப்போது இராவணனிடம், ”இந்தச் செயல் உனக்கு ஏற்புடையது அல்ல” என்று தர்மஉபதேசம் செய்தார். அதனை இராவணன் கேட்கவில்லை. உடனே ஜடாயு தனது மனதில், “நாம் உயிரோடு உள்ளவரை இதனைக் காணமாட்டோம். யுத்தம் செய்து சீதையை மீட்போம். இல்லையேல் யுத்தத்தில் உயிரைவிடுவோம்”, என்று முடிவு செய்தார். மிகுந்த வலிமை மற்றும் வீரம் கொண்டவர் என்பதால் இராவணனுடன் கடும் யுத்தம் செய்தார். அவன் கையால் அடிப்பட்டு விழுந்து தனது திருமேனியை விட்டார். – பிள்ளை திருநறையூரரையர் தனது குடும்பத்துடன் திருநாராயணபுரத்தில் எழுந்தருளியுள்ள வேதநாராயணைப் பெருமாளைச் சேவிக்கச் சென்றார். அப்போது மற்ற சமயத்தினர் அந்தக் கோயிலுக்குத் தீ வைத்தனர். அந்தக் கோயிலுக்குள் நின்றிருந்த அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு ஓடினர். எம்பெருமானின் திருமேனிக்கு அழிவு உண்டாவதைக் கண்டு அரையரால் பொறுக்க இயலவில்லை. அவன் மீது கொண்ட அன்பின் மிகுதி காரணமாகத் தானும் அவனது திருமேனியுடன் முடிந்து போவது என்று முடிவு செய்து அங்கே நின்றார். அவரது புத்திரர்களும் அவரைவிட்டு அகல்வதில்லை என்று அங்கேயே நின்றனர். ஆக இப்படியாக இவர்களும் தாமுமாகத் தனது திருமேனியை அங்கேயே விட்டார். – ”காசித் ஆவஸதஸ்யாந்தே ஸ்தித்வ த்ருஷ்ட்வா பஹிர்குரும் தந்மயத்வேந கோவிந்தம் தத்யௌ மீலிதலோசநா. தச்சித்த விமலாஹ்லாத க்ஷிண புண்யசயா ததா ததப்ராப்தி மஹாதுக்க விலீநாசேஷ பாதகா – சிந்தயந்தீ ஜகத்ஸூதிம் பரப்ரஹ்ம ஸ்வரூபிணம் – நிருச்ச்வாஸதயா முக்திம் கதாந்யா கோபகந்யகா” - க்ருஷ்ணனின் குழலோசையைக் கேட்ட சிந்தயந்தி என்னும் ஓர் ஆயர்குலப் பெண் வீட்டை விட்டு வெளியே ஓடிவர முயலும்போது வீட்டில் உள்ள பெரியவர்கள் அங்கு நின்றதன் காரணமாக வர இயலவில்லை; இதனால் அவள் வீட்டில் இருந்தபடியே கண்களை மூடியபடி கோவிந்தனை த்யானித்தாள்; அப்போது க்ருஷ்ணனிடம் வைத்த தூய்மையான மனம் காரணமாக உண்டான தூய்மையான சுகங்களால் தனது புண்ணியங்கள் அனைத்தும் நீங்கும்படியாகச் செய்தாள்; அவனை நேரில் சென்று அடைய இயலாமல் போனதால் உண்டான துக்கத்தின் காரணமாகத் தனது பாவங்களையும் அழித்தாள்; பரப்ரஹ்மமும் உலகின் காரணமாக உள்ளவனும் ஆகிய க்ருஷ்ணனை த்யானித்தபடி, தனது மூச்சை அடக்கி நின்றதால், தன்னை விட்டுச் சரீரம் நீங்கப் பெற்றாள் – என்றது காண்க. ஆயர்பாடியில் அழகிய குழலோசையைக் கேட்டாள். உடனே ஸ்ரீப்ருந்தாவனம் புறப்படத் தயாரானாள். அப்போது வழியில் வீட்டின் பெரியவர்கள் நின்றிருந்ததால் வெளியே கிளம்ப இயலாமல் நின்றாள். அவனிடம் மட்டுமே ஈடுபட்ட தூயமனம் கொண்டவள் ஆனாள். த்யானம் காரணமாக உண்டான தூய சுகம் மூலம் தனது புண்ணியங்களையும், அவனைச் சென்று அடைய இயலாமல் போனதால் உண்டான துக்கம் மூலமாகத் தனது பாவங்களையும் அழித்தாள். அவனுடைய நினைவிலேயே நிலைநின்றாள். அவனை அடைய இயலவில்லை என்ற வேதனை தாங்காமல் மூச்சு அடங்கியது. இவளுக்கு வெறுக்கவேண்டும் என்ற நிலை ஏற்படாதபடி இவளது சரீரம் இவளைத் தானாகவே விட்டது.