Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 83)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

பசியராயிருப்பார் அட்டசோறுமுண்ணவேணும் அடுகிறசோறுமுண்ணவேணு மென்னுமாப் போலே காட்டுக்குப் போகிறபோது இளையபெருமாள் பிரியில் தரியாமையை முன்னிட்டு, அடிமை செய்யவேணும் எல்லாவடிமையும் செய்யவேணும் ஏவிக்கொள்ளவும் வேணும் என்றார்; படைவீட்டில் புகுந்த பின்பு, காட்டில் தனியிடத்தில் ஸ்வயம் பாகத்திலே வயிற்றை பெருக்கினபடியாலே, ஒப்பூணுண்ணமாட்டாதே, ஒரு திருக்கையாலே திருவெண்கொற்றக்குடையையும், ஒரு திருக்கையாலே திருவெண் சாமரத்தையும் தரித்து அடிமை செய்தார்.

இனி உபேயாதிகாரிகளில் ப்ரதாநரான இளையபெருமாள்படியை விஸ்தரேணவருளிச் செய்கிறார் (பசியர் என்று தொடங்கி).

– அடுத்து உபேய அதிகாரிகளில் மிகவும் சிறந்தவனாகிய லக்ஷ்மணன் உள்ளிட்டவர்கள் குறிந்து விரிவாக உரைக்கிறார்.

– அதாவது, பசியராயிருப்பார், தங்கள் பசியின் கனத்தாலே, இதுக்கு முன்பாக்கின சோறும் இப்போதாக்குகிற சோறும் எல்லாம் நாமேயுண்ணவேணும் என்று மநோரதிக்குமாப்போலே; பெருமாள் காட்டுக்கெழுந்தருளுகிறபோது, பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்தரானவிளையபெருமாள், படைவீட்டில் நின்றும் புறப்படுவதற்கு முன்னே கூடப்போவதாக உத்யோகிக்கிற படியைக்கண்டு, நீர்நில்லும் என்று நிர்ப்பந்தித்தருள ”குருஷ்வ மாமநுசரம் வைதர்ம்யம் நேஹ வித்யதே, க்ருதார்த்தோஹம் பவிஷ்யாமி தவசார்த்த: ப்ரகல்பதே” என்றும், கங்கை கடந்தேறினவன்று மீளவிடுகைக்குறுப்பாக அவர் அனேகமருளிச்செய்ய, “ந ச ஸீதா த்வயா ஹீநா தசாஹமபி ராகவ, முஹுர்த்தமபி ஜீவாவோ ஜலாந் மத்ஸ்யா விவோத்த்ருதௌ” என்றும் சொல்லுகையாலே பிரியில் தாமுளராக மாட்டாமையை முன்னிட்டு “குருஷ்வ மாம்” என்றவநந்தரத்திலே, “தநுராதாய ஸகுணம் கநித்ர பிடகாதர:, அக்ரதஸ் தே கமிஷ்யாமி பந்தாநமநுதர்சயந் ஆஹரிஷ்யாமி தே நித்யம் மூலாநிச பலாநிச: வந்யாநி யாநி சாந்யநி ஸ்வாஹாராணி தபஸ்விநாம்” என்கையாலே ஸ்வசேஷத்வாநுகுணமாக அடிமை செய்யவேணுமென்றும், ததநந்தரத்திலே ”பவாம்ஸ்து ஸஹ வைதேஹயா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே; அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதச்ச தே” என்கையாலே – அதுதன்னிலுமின்னவின்ன வடிமையென்று ஒரு நியதியின்றியே எல்லாவடிமையும் செய்யவேணுமென்றும்; பஞ்சவடியில் எழுந்தருளினபோது, நீரும் நிழலும் வாய்த்திருப்பதொரு ப்ரதேசத்தைப் பார்த்துப் பர்ணசாலையைச் சமையும் என்ன, “ஏவமுக்தஸ்து ராமேண லக்ஷ்மணஸ் ஸம்யதாஞ்ஜலி:, ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்தமிதம் வசதமப்ரவீத்” என்று - நந்தலையிலே ஸ்வாதந்தர்யத்தை வைந்தபோதே பெருமாள் நம்மைக்கைவிட்டாரென்று விக்ருதராய்; பிராட்டி முன்னிலையாகக் கையுமஞ்சலியுமாய் நின்று ”பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷசதம் ஸ்திதே, ஸ்வயந்து ருசிரே தேசே க்ரியநாமிதி மாம் வத” என்கையாலே – அடிமை செய்யுமளவில் ஸ்வாதந்தர்யமாகிற தோஷம் கலசாதபடி உசித கைங்கர்யங்களிலேயேவிக் கொள்ள வேணுமென்றும் ப்ரார்த்தித்தாரென்கை. (படைவீட்டில்) இத்யாதி. திருப்படை வீட்டில் எழுந்தருளிவந்து புகுந்து திருவபிஷேகம் பண்ணியருளினபோது, தம்மோடுகூட அடிமை செய்கைக்கொருவருமில்லாததொரு தனிக்காட்டிலே தாமேயடிமை செய்து கைங்கர்யாபி நிவேசத்தைப் பெருக்குகையாலே, ஸ்வயம்பாகத்திலே வயிற்றைப் பெருக்கினவன் ஒப்பூணுண்ண மாட்டாதாப்போலே, ஸ்ரீபரதாழ்வான் தொடக்கமானவர்களோடொக்கத் தாமும் ஓரடிமைசெய்து நிற்கமாட்டாதே, திருவெண்கொற்றக்குடையையெடுக்கை திருவெண்சாமரம் பரிமாறுகையாகிற விரண்டடிமையை ஏககாலத்தில் செய்தாரென்கை. இந்த வ்ருத்தாந்தந்தான் ஸ்ரீராமாயணத்திலில்லை. ”சத்ரசாமர பாணிஸ்து லக்ஷ்மணோ நுஜகாமாஹா” என்கிறது ஸ்ரீராமாயணமன்றோவென்னில்; காட்டுக் கெழுந்தருளுவதற்கு முன்னே திருவபிஷேகார்த்தமாகவலங்கரித்து, தம்முடைய திவ்யாந்தப்புரத்தில் நின்றும் புறப்பட்டு, சக்ரவர்த்தி திருமாளிகையை நோக்கித் திருத்தேரிலேயேறிப் பெருமாளெழுந்தருளுகிறபோது, இளையபெருமாள் செய்த வ்ருத்தாந்தமாக திருவயோத்யா காண்டத்திலே சொல்லப்பட்டதாகையாலே, இவ்விடத்துக்கது சேராது. ஆனால் இவர் என்கொண்டிப்படியருளிச் செய்தாரென்னில்; பாத்மபுராண ப்ரக்ரியையாலே யருளிச்செய்தார். “அத தஸ்மிந் திநே புண்யே சுப லக்நே சுந்விதே, ராகவஸ்யாபிக்ஷேகார்த்தம் மங்களஞ்சக்ரிரே ஜநா:” என்று தொடங்கி பரக்கச் சொல்லிக் கொண்டு வந்து, ”மந்த்ர பூத ஜலைச் சுத்தைர் முநயஸ் ஸம்ச்ரித வ்ரதா: - ஜபந்தோ வைஷ்ணவாந் ஸூக்தாந் சதுர்வேத மயாந் சுபாந் - அபிக்ஷேகம் சுபஞ்சக்ரு: காகுத்ஸ்தம் ஜகதாம் பதிம் - தஸ்மிந் சுபதமே லக்நே தேவ துந்துபயோ திவி - நிநேது: புஷ்ப வர்ஷாணி வவர் ஷுச்ச ஸமந்தத: - திவ்யாம்பரைர் பூஷணைச்ச திவ்யகந் தாநுலேபநை: - புஷ்பைர் நாநா விதைர் திவ்யைர் தேவ்யா ஸஹ ரகூத்வஹ: - அலங்க்ருதச்ச சுசுபே முநிபிர் வேதபாரகை: - சத்ரஞ்ச சாமரம் திவ்யம் த்ருதவாந் லக்ஷ்மணஸ் ததா – பராச்வே பரத சத்ருக்நௌ தாளவ்ருந்தம் விவேஜது: - தர்ப்பணம் ப்ரததௌ ஸ்ரீமாந் ராக்ஷஸேந்த்ரோ விபீஷண: - ததார பூர்ண கலசம் ஸுக்ரீவோ வாநரேச்வர: - ஜாம்பவாம்ச்ச மஹாதேஜா புஷ்பமாலாம் மநோஹராம் – வாலிபுத்தரஸ்து தாம்பூலம் ஸகர்ப்பூரம் ததௌ ப்ரியாத் – ஹநூமாந் தீபிகாம் திவ்யாம் ஸுஷேணஸ்து த்வஜம் சுபம் – பரிவார்ய மஹாத்மாநம் மந்த்ரிணஸ் ஸமுபாஸிரே” என்று பாத்மபுராணத்தில் உத்தரகாண்டத்தில் நாற்பத்தொன்பதாமத்யாயத்திலே சொல்லப்பட்டதிறே, ”சத்ரஞ்ச சாமரம் திவ்யம் த்ருதவாந்” என்றது தோற்றவிறே (திருவெண்கொற்றக்குடையையும் திருவெண் சாமரத்தையும் தரித்து) என்றருளிச்செய்தது.

பசியுடன் உள்ள ஒருவன், தனது பசியின் காரணமாக, “இப்போது செய்த உணவும் வேண்டும். இதற்கு முன்பாகச் செய்த உணவும் வேண்டும். அனைத்தையும் நான் உண்பேன்” என்று கூறுவது காணலாம். இதனைப் போன்று லக்ஷ்மணன் விஷயத்தில் காணலாம். இராமன் கானகம் எழுந்தருள முற்பட்டபோது, குழந்தைப்பருவம் தொடங்கியே இராமனுடன் அன்பாக இருந்துவரும் லக்ஷ்மணனும் அயோத்தியை விட்டு, இராமன் புறப்படுவதற்கு முன்பாகத் தானும் புறப்பட முயற்சித்தான். இதனைக் கண்ட இராமன், ”நீ இங்கேயே இருப்பாயாக”, என்று கூறினான். இதனைக் கேட்ட லக்ஷ்மணன் அயோத்யாகாண்டம் (30-22) – குருஷ்வ மாமநுசரம் வைதர்ம்யம் நேஹ வித்யதே, க்ருதார்த்தோஹம் பவிஷ்யாமி தவசார்த்த: ப்ரகல்பதே – உன் பின்னே வரும்படி அடியேனுக்கு உத்தரவிடவேண்டும்; அவ்விதம் செய்யாமல் நீ விட்டால், நான் உயிர் தாங்கமாட்டேன்; உனக்குக் கைங்கர்யம் செய்தால் மட்டுமே நான் செய்ய வேண்டியதைச் செய்து முடித்தவன் ஆவேன்; உனக்கும் சேதன லாபம் கிட்டும் - என்றான். அடுத்து கங்கையைக் கடந்த பின்னர் லக்ஷ்மணன் அயோத்திக்குத் திரும்பும்படி மீண்டும் இராமன் பலவிதமாகக் கூறினான். இதனை கேட்ட லக்ஷ்மணன் அயோத்யாகாண்டம் (53-31) - ந ச ஸீதா த்வயா ஹீநா தசாஹமபி ராகவ, முஹுர்த்தமபி ஜீவாவோ ஜலாந் மத்ஸ்யா விவோத்த்ருதௌ – இராகவா! நானும் சீதையும் உன்னைப் பிரிந்து உயிர் வாழ்வோம் என்றால், நீரில் இருந்து எடுக்கப்பட்ட மீன் போன்று மிகவும் அற்பமான காலம் மட்டுமே வாழ்வோம் – என்றான். இதன் மூலமாக இராமனைப் பிரிந்தால் தான் உயிருடன் இருக்கமாட்டாத நிலையை முன்னிட்டு - குருஷ்வ மாம்- என்னை நியமிப்பாய் – என்றான். அடுத்து அயோத்யாகாண்டம் (31-23, 24) – தநுராதாய ஸகுணம் கநித்ர பிடகாதர:, அக்ரதஸ் தே கமிஷ்யாமி பந்தாநமநுதர்சயந் ஆஹரிஷ்யாமி தே நித்யம் மூலாநிச பலாநிச: வந்யாநி யாநி சாந்யநி ஸ்வாஹாராணி தபஸ்விநாம் - வில், மண்வெட்டி, கூடை ஆகியவற்றைத் தனது தலையில் வைத்தபடி, உனக்கு வழிகாட்டியபடி நான் செல்லக் கடவன்; கானகத்தில் உள்ள முனிவர்களுக்கு ஏற்றபடியாக உள்ள உணவான பழங்கள் மற்றும் கிழங்குகள் ஆகியவை கானகத்தில் எங்கு உள்ளனவோ அவற்றை நான் அன்றாடம் தேடிக் கொணர்ந்து உனக்கு அளிப்பேன் - என்பதன் மூலம் தன்னுடைய சேஷத்வத்திற்கு ஏற்றபடி கைங்கர்யம் செய்யவேண்டும் என்பதை உணர்த்தினான். அடுத்த அயோத்யாகாண்டம் (31-25) - பவாம்ஸ்து ஸஹ வைதேஹயா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே; அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதச்ச தே – நீ சீதையுடன் மலைகளின் அடிவாரத்தில் விளையாடி மகிழ்வாயாக, உன்னுடைய அடிமையாகிய நான் விழித்துக் கொண்டுள்ளபோதும், உறங்கிக்கொண்டிருக்கும்போதும் அனைத்துவிதமான கைங்கர்யங்களும் செய்வேனாக – என்பதன் மூலம் அடிமைத்தொழில் செய்யும்போது “இந்த இந்த கைங்கர்யம்” என்று இல்லாமல் அனைத்துவிதமான கைங்கர்யங்களும் செய்வதை உணர்த்தினான். அடுத்து பஞ்சவடியில் நின்றபோது இராமன் லக்ஷ்மணனிடம் ,”நல்ல நீர் மற்றும் நல்ல நிழல் கொண்ட இடமாகப் பார்த்து நீயே தங்கும் இடம் அமைப்பாயாக” என்றான். உடனே லக்ஷ்மணன், “நமக்கு இவ்விதம் சுதந்திரம் கொடுத்ததன் மூலம் இராமன் நம்மைக் கைவிட்டானே”, என்று நடுங்கியவனாக நின்றான். உடனே சீதையின் முன்னிலையில் கைகளைக் குவித்தபடி லக்ஷ்மணன் கூறியதை இராமாயணம் ஆரண்யகாண்டம் (15-6,7) - ஏவமுக்தஸ்து ராமேண லக்ஷ்மணஸ் ஸம்யதாஞ்ஜலி:, ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்தமிதம் வசதமப்ரவீத் - இராமனால் இவ்விதமாகக் கூறப்பட்ட லக்ஷ்மணன் தனது கைகளைக் குவித்தபடி சீதையின் முன்பாக இராமனைப் பார்த்து இவ்விதமாக உரைத்தான், “ காகுத்ஸ்தா! நீ எத்தனை காலம் உள்ளாயோ அத்தனை காலம் உனக்கு அடிமையாக நான் இருப்பேன், ஆகவே உனது மனதிற்கு ஏற்ற இடம் எது என்று ஆராய்ந்து, அந்த இடத்தில் பர்ணசாலை அமைப்பாய் என்று என்னைப் பார்த்து நீ நியமிக்கவேண்டும் - என்றது காண்க. இதன் மூலம் கைங்கர்யம் செய்யும்போது அதில் “நான் சுதந்திரமானவன்” என்ற எண்ணம் மேலிடாதபடி, கைங்கர்யங்களை எம்பெருமான் மூலம் ஏவப்பட்டுச் செய்தல் வேண்டும் என்பது உணர்த்தப்பட்டது. “படைவீட்டில்” என்று சூர்ணையில் தொடங்குவதன் பொருள் என்ன? அதன் பின்னர் இராமன் வனவாசம் முடிந்து, மீண்டும் அயோத்தியை அடைந்து முடிசூட்டிக்கொண்டான். அப்போது பரதன் முதலானவர்கள் இராமனுக்குக் கைங்கர்யம் செய்ய முற்பட்டபோது, தானும் அவர்களுக்குச் சமமாக நின்று கைங்கர்யம் செய்வதை லக்ஷ்மணனால் தாங்க இயலவில்லை. கானகத்தில் தன்னுடன் கூடவிருந்த இராமனுக்கு அடிமைத்தொழில் செய்தபோது உதவுவதற்கு யாரும் இல்லாமல் தான் மட்டுமே கைங்கர்யம் செய்து, அதில் பெரும் ஆசையை ஏற்படுத்திக்கொண்டான். தனது உணவைத் தானே செய்து உண்பவன், மற்றவர் செய்த உணவை ஏற்காதது போன்று இவனுக்கு மற்றவர் செய்யும் கைங்கர்யங்கள் ஏற்கவில்லை. இதுவே இங்கு கூறப்பட்டது. இதற்கு ஓர் ஆக்ஷேபம் எழலாம். இந்த நிகழ்ச்சி இராமாயணத்தில் கூறப்படவில்லையே என்று கேட்கலாம். இதற்கு ஒரு சிலர், இராமாயணம் அயோத்யகாண்டம் (12-32) – சத்ரசாமர பாணிஸ்து லக்ஷ்மணோநுஜகாமாஹா – வெண்கொற்றக்குடை மற்றும் சாமரம் ஆகிய இரண்டையும் பிடித்தபடி இராமன் பின் நின்றான் - என்று கூறியது அல்லவோ எனலாம். ஆனால் இது இராமாயணத்தில் எங்கு கூறப்பட்டது என்றால் – கானகம் செல்லும் நிகழ்வுக்கு முன்னர், திருமுடி புனைவதற்காக இராமன் தனது அந்தப்புரத்திலிருந்து புறப்பட்டு, சக்ரவர்த்தியின் சபைக்கு திருத்தேரிலே வந்தபோது, மேலே கூறப்பட்டபடி லக்ஷ்மணன் செய்தான் என்று உள்ளது. ஆக இது அயோத்யா காண்டத்தில் கூறப்பட்டதால் இந்த இடத்தில் பொருத்தம் அற்றது என்று கூறலாம். ஆயினும் இதனை ஏன் இங்கு அருளிச்செய்தார்? இதன் காரணம் பாத்மபுராணத்தில் கூறப்பட்டபடி அருளிச்செய்தார் என்பதாகும். அது என்ன? பாத்மபுராணத்தில் – அத தஸ்மிந் திநே புண்யே சுப லக்நே சுந்விதே, ராகவஸ்யாபிக்ஷேகார்த்தம் மங்களஞ்சக்ரிரே ஜநா: - அதன் பின்னர் அந்தப் பட்டாபிக்ஷேக நல்லநாளில், நல்ல நேரத்தில், நல்ல லக்னத்தில், இராகவனுக்குப் பட்டாபிக்ஷேகம் செய்யும்விதமாக அயோத்தியின் மக்கள் நல்ல செயல்களைச் செய்தபடி இருந்தனர் - என்று தொடக்கப்பட்டு, பின்வரும் பல வரிகள் கூறப்பட்டன: மந்த்ர பூத ஜலைச் சுத்தைர் முநயஸ் ஸம்ச்ரித வ்ரதா: - ஜபந்தோ வைஷ்ணவாந் ஸூக்தாந் சதுர்வேத மயாந் சுபாந் அபிக்ஷேகம் சுபஞ்சக்ரு: காகுத்ஸ்தம் ஜகதாம் பதிம் - தூய்மையான விரதம் பூண்ட பல முனிவர்கள் நான்கு வேதங்கள் ஒலிக்கும்படியாகவும், மங்களகரமாக உள்ளதாயும் இருக்கின்ற விஷ்ணுவின் மந்த்ரங்களை ஜபித்தனர்; தூய்மையான வேதமந்திரங்களால் தூய்மை செய்யப்பட்ட தீர்த்தம் மூலம் உலகம் அனைத்திற்கும் நாயகனான இராமனுக்குத் திருமஞ்சனம் செய்தனர். தஸ்மிந் சுபதமே லக்நே தேவ துந்துபயோ திவி - நிநேது: புஷ்ப வர்ஷாணி வவர் ஷுச்ச ஸமந்தத: - அந்தப் புண்ணிய லக்னத்தில் ஆகாயம் எங்கும் துந்துபி வாத்தியங்கள் முழங்கின; நான்கு திசைகளிலிருந்து மலர்கள் தூவப்பட்டன. திவ்யாம்பரைர் பூஷணைச்ச திவ்யகந் தாநுலேபநை: புஷ்பைர் நாநா விதைர் திவ்யைர் தேவ்யா ஸஹ ரகூத்வஹ: அலங்க்ருதச்ச சுசுபே முநிபிர் வேதபாரகை: - வேதபாராயணம் செய்தபடி உள்ள முனிவர்களுடன் உள்ளவனும்; திவ்யமான வஸ்திரங்கள், திவ்யமான ஆபரணங்கள், நறுமணம் வீசும் சந்தனம், பலவிதமான திவ்யமான மலர்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவனும் ஆகிய இராமன் சீதையுடன் விளங்கினான். சத்ரஞ்ச சாமரம் திவ்யம் த்ருதவாந் லக்ஷ்மணஸ் ததா – பராச்வே பரத சத்ருக்நௌ தாளவ்ருந்தம் விவேஜது: - அந்த நேரத்தில் லக்ஷ்மணன் திவ்யமான வெண்கொற்றக்குடை மற்றும் வெண்சாமரம் ஆகியவற்றைத் தரித்தபடி கைங்கர்யம் செய்தான்; பரதனும் சத்ருக்கனனும் இரண்டு பக்கமும் நின்றபடி விசிறி வீசினர். தர்ப்பணம் ப்ரததௌ ஸ்ரீமாந் ராக்ஷஸேந்த்ரோ விபீஷண: - ததார பூர்ண கலசம் ஸுக்ரீவோ வாநரேச்வர: - செல்வந்தனான விபீஷணன் கண்ணாடியை ஏந்தியபடி நின்றான். வானரங்களின் அரசனான சுக்ரீவன் பூர்ணகும்பம் ஏந்தி அடிமைத்தனம் செய்தான். ஜாம்பவாம்ச்ச மஹாதேஜா புஷ்பமாலாம் மநோஹராம் – வாலிபுத்தரஸ்து தாம்பூலம் ஸகர்ப்பூரம் ததௌ ப்ரியாத் – மிகுந்த தேஜஸ் கொண்ட ஜாம்பவான் மனதிற்கு ஏற்ற மலர்மாலையை வைத்திருந்தான். கற்பூரம் மற்றும் தாம்பூலத்தை வாலியின் புத்திரனான அங்கதன் அன்புடன் அளித்தான். ஹநூமாந் தீபிகாம் திவ்யாம் ஸுஷேணஸ்து த்வஜம் சுபம் – பரிவார்ய மஹாத்மாநம் மந்த்ரிணஸ் ஸமுபாஸிரே - சிறியதிருவடியான அனுமன் தனது கையில் தெய்வீகமான கைப்பந்தம் பிடித்தபடி நின்றான். இப்படியாக இருந்த இராமனைச் சூழ்ந்தபடி நின்ற மந்திரிகள் வணங்கியபடி இருந்தனர். மேலே உள்ளபடி பாத்மபுராணத்தில் உத்தரபாகத்தில் நாற்பத்துஒன்பதாம் அத்தியாயத்தில் கூறப்பட்டது காண்க. இந்தப் பகுதியில் கூறப்பட்ட – சத்ரஞ்ச சாமரம் திவ்யம் த்ருதவாந் - என்பது வெளிப்படும்படியாக அல்லவோ இவர் இங்கு ”திருவெண்கொற்றக்குடையையும் திருவெண்சாமரத்தையும் தரித்து” என்று அருளிச் செய்தார்.