Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 82)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
பிராட்டி ஸ்வசக்தியை விட்டாள்; த்ரௌபதி லஜ்ஜையை விட்டாள்; திருக்கண்ணமங்கையாண்டான் ஸ்வவ்யாபாரத்தை விட்டான்.
ஏவம்பூதரானவர்கள் செய்தவைதன்னையருளிச்செய்கிறார் (பிராட்டி ஸ்வசக்தியை விட்டாள், த்ரௌபதி லஜ்ஜையை விட்டாள்) என்று.
இவர்கள் செய்தது என்ன என்பதை அருளிச்செய்கிறார்.
(ஸ்வசக்தியை விடுகையாவது) – நாயகரானபெருமாள் ரக்ஷிக்குமத்தனையல்லது நம்முடைய சக்தியால் நம்மை ரக்ஷித்துக்கொள்ளுகை நம் பாரதந்த்ர்யத்துக்கு நாசகமென்று ஸ்வசக்தியைக் கொண்டு கார்யம் கொள்ளாதொழிகை “அஸந்தேசாத்து ராமஸ்ய தபஸச் சாநுபாலநாத், ந த்வாம் குர்மி தசக்ரீவ பஸ்ம பஸ்மார்ஹதேஜஸா” என்றாளிறே. (லஞ்ஜையை விடுகையாவது) – துச்சாஸநன் ஸபாமத்யே துகிலையுரிகிறவளவில் லஜ்ஜாவிஷ்டையாய்க் கொண்டு தானொருதலை யிடுக்குகையன்றிக்கே இரண்டுகையும் விடுகை. பேரளவுடையாளாகையாலே பிராட்டிக்கு “பெருமாளே ரக்ஷகர்” என்று விச்வஸித்து ஸ்வசக்தியை விட்டிருக்கலாம், அத்தனையளவின்றிக்கேயிருக்கச்செய்தே, மஹாபத்தசையிலே ”இவ்வளவில் க்ருஷ்ணனே ரக்ஷகன்” என்று மஹாவிச்வாஸம் பண்ணி மஹாஸபாமத்யே இவள் லஜ்ஜையை விட்டதிறே அரிது. (திருக்கண்ணமங்கையாண்டான் ஸ்வவ்யாபாரத்தை விட்டான்) அதாவது, ஸ்வரக்ஷண ஹேதுவான ஸ்வவ்யாபாரங்களை விட்டாளென்றபடி. ஒரு ஸேவகனுடைய நாயை ஒரு ஸேவகனடிக்க, அவன் அது பொறாமல் அடித்தவனோடே எதிர்த்துப் பொருது அவனையுங்கொன்று தானும் குத்திக் கொள்வதாக விருக்கிறபடியைக்கண்டு, ஒரு க்ஷுத்ரசேதநன் தன்னபிமாநத்திலேயொதுங்கினதென்னு மிவ்வளவுக்காகத் தன்னையழியமாறினபடி. கண்டால் பரமசேதநனபிமாநத்திலே யொதுங்கினால் அவனென்படுமோ என்று, ஸ்வரக்ஷண வ்யாபாரங்களையடையவிட்டு அந்த நாயோ பாதியாகத் தம்மையநுஸந்தித்துக் கொண்டு அப்போதே வந்து திருக்கண்ணமங்கையில் பத்தராவி திருவாசலில் கைப்புடையிலே புகுந்து கன்வளர்ந்தாரென்று ப்ரஸித்தமிறே.
“ஸ்வசக்தியை விடுதல்” என்பது என்ன? ”நம்முடைய நாயகனான இராமன் வந்து நம்மைக் காப்பாற்றவேண்டும். இப்படி அல்லாமல் நமது சக்தி மூலம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்தல் என்பது ‘அவனுக்கு மட்டுமே வசப்பட்டிருத்தல்’ என்னும் பாரதந்த்ர்யத்துக்கு இழிவு ஏற்படுத்தும்”, என்று உணர்ந்து, தனது முயற்சியால் தன்னைக் காத்துக்கொள்ள முயலாமல் உள்ளதாகும். இதனை ஸு ந்தரகாண்டத்தில் (22-20) - அஸந்தேசாத்து ராமஸ்ய தபஸச் சாநுபாலநாத், ந த்வாம் குர்மி தசக்ரீவ பஸ்ம பஸ்மார்ஹதேஜஸா – இராமனின் உத்தரவு இல்லாத காரணத்தினாலும், எனது பாரதந்த்ர்யம் என்பதைக் காப்பாற்ற வேண்டியதாலும் உன்னை நான் எனது சக்தியால் எரித்துச் சாம்பல் ஆக்காமல் விட்டுவைத்துள்ளேன்; பத்துத்தலை உள்ள நீ சாம்பல் ஆகத்தக்கவனே – என்றாள். “லஜ்ஞையை விடுதல்” என்பது என்ன? துச்சாதனன் சபையின் நடுவே நின்றபடி வஸ்திரத்தை அவிழ்க்கிறபோது, தனது நிலைக்காக வெட்கம் கொண்டவளாகத் தனது கைகளால் பிடித்துக் கொள்ளாமல் இரண்டு கைகளையும் விட்டபடி நின்ற நிலையாகும். சீதை உயர்ந்த ஞானம் கொண்டவள் என்பதால், தன்னைக் காப்பாற்றுவதற்கு எம்பெருமானுக்கு உரிமையும் கடமையும் உண்டு என்று என்ணியபடி, தனது வலிமையைக் காண்பிக்காமல் இருந்த தன்மை பொதுவானதே ஆகும். அப்படிப்பட்ட துணை தனக்கு துச்சாதனின் சபையில் ஏதும் இல்லை என்று அறிந்திருந்தும், அந்தச் சபையில் தன்னைக் காப்பாற்றுவதற்கு உரியவன் க்ருஷ்ணனே என்று மஹாவிச்வாஸத்துடன் நின்று, தனது நாணத்தை மறந்த நிலையே மிகவும் உயர்ந்த, அரிதான செயலாகும். “திருக்கண்ணமங்கையாண்டான் ஸ்வவ்யாபாரத்தை விட்டான்” என்பது என்ன? இவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் செயல் அனைத்தையும் விட்டார் - என்பதாகும். அவர் ஒரு காட்சியைக் கண்டார் - அதாவது, ஒரு வேலைக்காரனுடைய நாய் ஒன்றை மற்றோரு வேலைக்காரன் அடித்துவிட்டான். இதனால் கோபம் கொண்ட நாயின் சொந்தக்காரனான வேலைக்காரன், அடித்தவனை எதிர்த்துப் போராடி அவனைக் கொன்றான். பின்னர் தனது நாய் இறந்த சோகம் தாளாமல் தானும் குத்திக் கொண்டான். இதனைக் கண்ட திருக்கண்ணமங்கையாண்டான், ”சிறிய மனிதன் தனது நிழலில் ஒதுங்கின அற்பமான நாய்க்காகத் தன்னையே அழித்துக் கொள்ளத் துணிந்தானே! இப்படி உள்ளபோது, எம்பெருமானின் நிழலில் ஒதுங்கிவிட்டால் அவன் நம்மைக் காக்க எத்தனை பொறுப்பு கொள்வான்!!”, என்று வியந்து, தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்ற செயல்கள் அனைத்தையும் கைவிட்டார். அந்த நாய் போன்று தன்னை என்ணியவராக, உடனே ஓடி வந்து திருக்கண்ணமங்கையில் எழுந்தருளியுள்ள பத்தராவிப்பெருமாள் திருவாசலில் உள்ள திண்ணையில் அமர்ந்து, அங்கு உறங்கினார்.