Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 81)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
பிராட்டிக்கும் த்ரௌபதிக்கும் வாசி, சக்தியும் அசக்தியும்.
– அவர்களைப் போலேயிருக்கவேணுமென்றதின் கருத்தை தர்சிப்பிக்கைக்காக, அவர்கள் தங்கள்படிகளையடைவேயருளிச் செய்கிறார் மேல். அதில் பிராட்டியுடையவும் த்ரௌபதியுடையவும் படிகளையருளிச்செய்கைக்குடலாக ப்ரதமத்திலே உபயர்க்கும் வாசியையருளிச்செய்கிறார் (பிராட்டிக்கும்) என்று தொடங்கி.
– அவர்கள் போன்று இருக்கவேண்டும் என்று கூறுவதன் பொருள் என்ன என்பதை விளக்கும் பொருட்டு அவர்களின் தன்மைகளை அருளிச்செய்கிறார். இவர்களில் சீதை மற்றும் திரௌபதி ஆகிய இவர்களின் தன்மைகளை அருளிச் செய்யும் பொருட்டு தொடங்கி, அதற்கு முன்பாக இவர்களுக்கு உள்ள வேறுபாட்டினை அருளிச்செய்கிறார்.
– அதாவது, “தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்” என்றிருந்த பிராட்டிக்கும் ”ரக்ஷமாம்” என்ற த்ரௌபதிக்கும் தம்மில்வாசி, ”சீதோ பவ” என்று நெருப்பை நீராக்கினாப்போலே ”தக்தோ பவ” என்று விரோதிவர்க்கத்தை பஸ்மமாக்கித் தன்னை ரக்ஷித்துக் கொள்ளவல்ல சக்தியுண்டாகையும், ஸ்வயத்நத்தாலே விரோதிகளைத் தள்ளித் தன்னை நோக்கிக்கொள்ளப் பார்த்தாலும் நோக்கிக்கொள்ளுகைக் கீடான சக்தி தனக்கில்லாமையுமென்கை.
– இராமாயணம் ஸுந்தரகாண்டம் (39-30) – தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் - என்னை இங்கிருந்து அவரே அழைத்துப் போகும் செயல் மட்டுமே அவருக்கு ஏற்றதாக இருக்கும் – என்று சீதை இருந்தாள். மஹாபாரதம் - ரக்ஷமாம் – என்னைக் காப்பாய் – என்று திரௌபதி இருந்தாள். இவர்கள் இருவருக்கும் உள்ள வேறுபாடு என்ன? ஸுந்தரகாண்டம் (53-29) - சீதோ பவ: - குளிர்ந்திருத்தல் வேண்டும் – என்று நெருப்பை நீராக்குவது போன்று, தக்தோ பவ - எரிந்து சாம்பலாக மாறவேண்டும் - என்று விரோதியை எரித்துத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வலிமை பிராட்டிக்கு உண்டு. தன்னுடைய முயற்சியால் தனது விரோதிகளைத் தன் அருகில் வரவிடாமல் தடுத்தும், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயலுதலும் இயலாமல், இதற்குத் தேவையான வலிமை இன்றி திரௌபதி இருந்தாள்.