Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 80)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
உபாயத்துக்கு, பிராட்டியையும் த்ரௌபதியையும் திருக்கண்ணமங்கை யாண்டானையும் போலேயிருக்கவேணும்; உபேயத்துக்கு, இளையபெருமாளையும் பெரிவுடையாரையும் பிள்ளைதிருநறையூரரையரையும் சிந்தயந்தியையும் போலேயிருக்க வேணும்.
அநந்தரம், அதிகாரி சோதநம் பண்ணுகிறது. உபாயம் உபேயார்த்தமாகையாலும், ”உபேயத்திலுகப்பும்” என்றும், ”பரப்ரயோஜநப்ரவ்ருத்தி ப்ரயத்நபலம் தத்விஷயப்ரீதி சைதந்யபலம்” என்றும் உபேயாதிகாரமும் கீழ் ப்ரஸக்தமாகையாலும், த்வயநிஷ்டனானவதிகாரிக்கு உபயமும் அபேக்ஷிதமாகையாலும், உபாயோபேயாதிகாரங்களில் இச்சேதநனின்னவின்னபடி யிருக்கவேணு மென்னுமத்தை தத்தந்நிஷ்ட்டரை நிதர்சநமாக்கிக்கொண்டருளிச்செய்கிறார் (உபாயத்துக்கு) இத்யாதி வாக்ய த்வயத்தாலே.
– அடுத்து அதிகாரியின் தன்மைகள் எப்படி இருக்கவேண்டும் என்று அருளிச்செய்கிறார். அதாவது, உபாயத்துக்கு ஏற்ற அதிகாரம் பெறவேண்டும் என்றால் எப்படி இருக்கவேண்டும், உபேயத்துக்கு ஏற்ற அதிகாரம் பெறவேண்டும் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதை உரைக்கிறார். இவ்விதம் உபாயம் என்பது உபேயத்தின் பொருட்டே உள்ளபோதிலும், கீழே உள்ள சூர்ணைகள் மூலம் இவற்றுக்கு உரிய அதிகாரம் தனித்தனியாக உரைக்கப்பட்டதால் இவ்விதம் அதிகாரிகளின் தன்மைகளையும் தனித்தனியே அருளிச்செய்கிறார்: சூர்ணை 65 - உபேயத்திலுகப்பும் சூர்ணை 72 - பரப்ரயோஜநப்ரவ்ருத்தி ப்ரயத்நபலம் தத்விஷயப்ரீதி சைதந்யபலம் மேலே உள்ள இரண்டாலும் உபேயத்திற்கு உரிய அதிகாரம் கூறப்பட்டன. மேலும் த்வயத்தில் உபாயம் மற்றும் உபேயம் என்ற இரண்டும் கூறப்பட்டன. எனவே இந்தச் சூர்ணையில் உபாய மற்றும் உபேய அதிகாரங்களில் நின்றவர்களை உவமையாக எடுத்துக்காட்டுகிறார்.
(உபாயத்துக்கு) என்றது, உபாயத்துக்கதிகாரியாம்போதென்றபடி, உபாயாதிகாரத்துக்கென்னவுமாம். அப்படியே (உபேயத்துக்கு) என்றதுவும். (உபாயத்தில்) என்று பாடமானபோது, உபாயவிஷயத்திலென்றபடி, இப்படியே மற்றையதுவும்.
– “உபாயத்துக்கு” என்பதன் மூலம் “உபாயம் மூலம் கிட்டும் பலனைப் பெறுவதற்கான தகுதியைப் பெற்ற ஒருவனாகும்போது” என்பது உணர்த்தப்பட்டது. அல்லது உபாயத்தின் அதிகாரத்திற்கு என்றும் உரைக்கலாம். ”உபேயத்துக்கு” என்பதன் மூலம் “உபாயத்தினால் பெறும் பலனை அடைவதற்கு முன்பாக இருக்கவேண்டிய தகுதி” என்பதாகும். “உபாயத்தில்” என்று சூர்ணையைப் படித்தால் “உபாய விஷயத்தில்” என்று கொள்ளவேண்டும். “உபேயத்தில்” என்று சூர்ணையைப் படித்தால் “உபாய விஷயத்தில்” என்று கொள்ளவேண்டும். (சூர்ணையில் பிராட்டி என்பது சீதையையும், பெரிய உடையார் என்பது ஜடாயுவையும் குறிக்கும்).