Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 79)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்ய:

உகதார்த்தத்துக்கு ப்ரமாணம் காட்டுகிறார் மேல் (ஏகாந்தீ வ்யபதேஷடவ்ய:) என்று.

– கடந்த சூர்ணையில் கூறப்பட்டதற்கு ஏற்ற ப்ரமாணங்களைக் கூறுகிறார்.

“ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோ நைவ க்ராமகுலாதிபி:, விஷ்ணுநா வ்யபதேஷ்டவ்யஸ் தஸ்ய ஸர்வம் ஸ ஏவ ஹி”. இத்தால் – பகவதேக பரனாயிருக்குமவன் க்ராமகுலாதி ஸம்பந்தங்களையிட்டுச் சொல்லப்படுமவனல்லன், பகவத் ஸம்பந்தத்தையிட்டுச் சொல்லப்படுமவன்; அவனுக்கு அந்த க்ராமகுலாதிகளெல்லாம் பகவானேயென்கிறது. (ப்ராப்தாவும்) இத்யாதி வாக்யத்திலே இச்சேதநனுடைய ஸ்வயத்ந நிவ்ருத்த்யாதிகள் தோற்றினபடியாலே இவற்றுக்கு நிதாநமின்னதென்றும், ஏவம் பூதனுடைய ப்ரயத்ந சைதந்ய ப்ரயோஜநமும் சேஷத்வாதி ப்ராதாந்யஹேது ஆத்ம ஸ்வரூபத்தினுடைய தாஸ்யாந்தரங்க நிரூபகத்வமென்றும் இப்படியிருக்கிறவிது ஸ்வாபாவிகம், ஏதத் விரோதிகள் ஔபாதிகமென்றும், தந்நிவ்ருத்தியிலாத்மாவுக்கு தாஸ்யமே நித்ய நிரூபகமாயிருக்குமென்கையாலே யிவ்வர்த்தத்தை மூதலித்தும், க்ராம குலாதிகளாலிவன் வ்யபதேஷ்டவ்யனல்லனென்றும், உத்தார்த்தத்தில் ப்ரமாணமுஞ் சொல்லுகையாலே, (ஸ்வயத்ந நிவ்ருத்தி) இத்யாதி வாக்யம் தொடங்கியிவ்வளவும் ப்ராஸங்கிகம். ஆக, இப்ப்ரகரணத்தால் ப்ரபத்திக்கு தேசாதிநியமங்களில்லை, விஷய நியமமேயுள்ளதென்னுமிடமும், அவ்விஷயந்தானின்னதென்னுமிடமும் அவ்விஷயத்தி னுடைய வைலக்ஷண்யமும், அதில் ப்ரபத்தி பண்ணுமதிகாரிகளுடைய த்ரைவித்யமும், ப்ரபக்தியையுபாயமாக்கினால் வருமவத்யமும், ப்ரபத்தி தன்னுடைய ஸ்வரூபாதிகளும், ப்ரபத்தவ்யனே உபாயமென்னுமிடமும் ப்ரதிபாதிக்கப்பட்டது.

விஷ்வக்ஸேந ஸம்ஹிதை – ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோ நைவ க்ராமகுலாதிபி:, விஷ்ணுநா வ்யபதேஷ்டவ்யஸ் தஸ்ய ஸர்வம் ஸ ஏவ ஹி – ப்ரபன்னன் ஒருவன் தனது குலம், கிராமம் போன்றவற்றைக் கொண்டு அழைக்கப்படுபவன் அல்லன்; அவன் எம்பெருமானுடைய தொடர்பை மட்டுமே கொண்டு அழைக்கப்படவேண்டியவன் ஆவான்; அவனுக்கு குலம், கிராமம் போன்றவை பகவானே ஆவான் - என்றது. ஆகவே பகவானுக்கு மட்டுமே வசப்பட்டு நிற்கும் ப்ரபன்னன் ஒருவன் கிராமம், குலம் போன்ற அடைமொழிகளால் அழைக்கப்பட வேண்டியவன் அல்லன். அவன் பகவத் ஸம்பதத்தை மட்டுமே கூறி அழைக்கப்பட வேண்டியவன் ஆவான். அந்தக் கிராமம், குலம் போன்ற அனைத்துமாகப் பகவானே உள்ளான். “ஸ்வயத்ந” என்று தொடங்கும் சூர்ணை-71 முதல், இந்தச் சூர்ணை முடிய உள்ள அனைத்தும் ப்ராஸங்கிகம் ஆகும். ஏன்? “ப்ராப்தா” என்று தொடங்கும் சூர்ணை – 70ல்; தனது முயற்சிகள் போன்ற பலவற்றிலிருந்தும் இவன் நீங்கியிருப்பது முதலானவை வெளிப்பட்டதால் கீழே உள்ள பலவும் கூறப்பட்டன: இவற்றுக்கு நிதானம் இன்னது என்றும் இப்படிப்பட்டவனின் முயற்சி மற்றும்அறிவு ஆகியவற்றின் பயன் இத்தகையது என்றும் ஆத்ம ஸ்வரூபத்தின் அடிமைத்தன்மை என்பது அந்தரங்க நிரூபகமாக உள்ள தன்மையால் என்ற காரணத்தினால் அடிமைத்தனம் என்பது முக்கியமாகக் கொள்ளப்பட்டது என்றும் இப்படிப்பட்ட அடிமைத்தனத்துடன் உள்ள தன்மையே ஆத்மாவிற்கு இயல்பானது என்றும், அடிமைத்தனத்திற்கு விரோதிகளாக உள்ள மற்ற தன்மைகள் வந்து அடைந்தவை என்றும் அஹங்காரம் போன்றவை விலகினால் ஆத்மாவிற்கு அடிமைத்தனமே ஸ்வரூபம் என்பது நிரூபகமாகும் என்பதால் மேலே உள்ளதை விளக்கியும் கிராமம், குலம் போன்றவற்றால் இவன் வழங்கப்படத்தக்கவன் அல்லன் என்றும், இவ்விதம் கூற ப்ரமாணம் உண்டு என்றும் பலவிதமாக உரைக்கப்பட்டன. ஆகவே இந்த ப்ரகரணத்தில் கீழே உள்ள பலவும் கூறப்பட்டன: ப்ரபத்திக்கு காலம், தேசம் போன்ற கட்டுப்பாடு இல்லை, விஷய நியமம் மட்டுமே உள்ளது அந்த விஷயம் இன்னது அந்த விஷயத்தின் மேன்மையும் சிறப்பும் இன்னது அந்த விஷயத்தில் ப்ரபத்தி செய்கின்ற அதிகாரியின் மூன்று பிரிவுகள் ப்ரபத்தி செய்கின்ற அதிகாரியின் சிறப்பு ப்ரபத்தியை உபாயம் என்று கொண்டால் ஏற்படும் தோஷம் ப்ரபத்தியின் தன்மைகள் ப்ரபத்திக்கு விஷயமாக உள்ள எம்பெருமானே உபாயம்