Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 77)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

அஹங்காரமாகிற ஆர்ப்பைத் துடைத்தால் ஆத்மாவுக் கழியாதபேர் அடியானென்றிறே.

(இதுதான் வந்தேறியன்று) என்று தொடங்கி உபபாதித்த அர்த்தத்தை முதலிக்கிறார்மேல் (அஹங்காரம்) என்று தொடங்கி.

“இதுதான்” என்று தொடங்கும் சூர்ணை 74 முதல், கடந்த சூர்ணை முடிய உள்ளவற்றின் ஆழ்பொருளை விவரிக்கிறார்.

அஹங்காரந்தான், தேஹாத்மாபிமாநரூபமாயும் ஸ்வாதந்த்ர்யரூபமாயும் இரண்டு வகைப்பட்டிறேயிருப்பது; அதில் இங்கு ஸ்வாதந்த்ர்யத்தைச் சொல்லுகிறது. (ஆர்ப்பு) என்கையாலே அதினுடைய திரோதாயகத்வமும் ஆகந்துகத்வமும் தோற்றுகிறது; அத்தை (துடைக்கையாவது) ஸதாசார்யோபதேசாதிகளாலே ஸவாஸநமாகப் போக்குகை. (ஆத்மாவுக்கழியாத்பேர் அடியான்) என்றது, ஔபதிகமான வர்ணாச்ரமாதிகளாலே வந்து அழிந்துபோம் நாமங்கள் போலன்றிக்கே, யாவதாத்மாநுவர்த்தியான நாமம் தாஸனென்னுமதென்றபடி. (இறே) என்று இவ்வர்த்தத்தில் ப்ரமாணப்ரஸித்தி. ”தாஸபூதாஸ் ஸ்வத:”, “ஆத்மதாஸ்யம்” இத்யாதிகள் இவ்விடத்தில் விவக்ஷிதங்கள். ஆகையால், ஸ்வாதந்த்ர்யாதிகள் ஔபாதிகம், தாஸ்யம் ஸ்வாபாவிகமென்னக் குறையில்லையென்று கருத்து.

அஹங்காரம் என்பது சரீரத்தையே ஆத்மாவாக என்ணுதல், “நான் எனக்கு மட்டுமே உரியன்” என்பதான சுதந்திரமான எண்ணம் என்று இருவிதமாக இருக்கும். இவற்றில் இங்கு அஹங்காரம் என்பதன் மூலம் ஸ்வாதந்த்ர்யம் கூறப்பட்டுள்ளது. ”ஆர்ப்பு” என்பதன் மூலம் இத்தகைய அஹங்காரம் என்பது நன்மையை மறைக்கும் தன்மை மற்றும் இடையில் வந்து சேர்ந்த தன்மை ஆகியவற்றை இயல்பாக உடையது எனப்பட்டது. இதனை “துடைத்தல்” என்றால் சிறந்த ஆசார்யன் உபதேசம் மூலமாக அதன் வாசனையுடன் நீக்குதல் ஆகும். “ஆத்மாவுக்கு” என்பதன் மூலம் உணர்த்தப்பட்டது என்ன? குறிப்பிட்ட சில காரணங்களால் நமக்குப் பல பெயர்கள் ஏற்படும்; ஆனால் ஆத்மா என்பது உள்ளவரையில் அதன் மாறாத பெயர் “தாஸன்” என்பதாகும். இதற்குப் பின்வரும் ப்ரமாணங்கள் உள்ளன: தாஸபூதாஸ் ஸ்வத: – அனைத்து ஆத்மாக்களும் இயல்பாகவே அடிமைத்தனம் கொண்டவை ஆத்மதாஸ்யம் - ஆத்மாவிற்கு அடிமைத்தனம் என்பது இயல்பானது. ஆகவே ஸ்வாதந்த்ர்யம் போன்ற தன்மைகளே இடையில் ஆத்மாவிடம் வந்து சேர்பவை ஆகும், அடிமைத்தனம் என்பது ஆத்மாவிற்கு இயல்பாகவே உள்ளது என்று கருத்து.