Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 76)
இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்
சேஷத்வ விரோதி ஸ்வாதந்த்ர்யம்; தச்சேஷத்வ விரோதி ததிதர சேஷத்வம்.
இவை இதுக்கு விரோதிகளானமையை உபபாதிக்கிறார்மேல் (சேஷத்வ விரோதி) என்று தொடங்கி.
– இவை இரண்டும் அடிமைத்தனத்திற்கு எவ்விதம் விரோதிகளாக உள்ளன என்பதை அருளிச்செய்கிறார்.
(சேஷத்வ விரோதி ஸ்வாதந்த்ர்யம்) என்றது - நானெனக்குரியே னென்றி ருக்குமளவில் ஒரு விஷயத்திலும் சேஷத்வமில்லாமையாலே ஸ்வாதந்த்ர்யம் சேஷத்வத்தை யுதிக்க வொட்டாதென்றபடி. (தச்சேஷத்வ விரோதி ததிதர சேஷத்வம்) என்றது ஸ்வாதந்த்ர்யங் குலைந்து சேஷத்வத்துக் கிசைந்தாலும் பகவத்வ்யதிரிக்த விஷயங்களிலே ஒன்றுக்குத் தன்னை சேஷமென்றிருக்குமது நிருபாதிக சேஷியாக அவன் பக்கல் சேஷத்வத்தைத் தலையெடுக்க வொட்டா தென்றபடி.
– “சேஷத்வ விரோதி ஸ்வாதந்த்ர்யம்” என்றது ஏன்? “நான் எனக்கே உரியவன்” என்று இருக்கும்போது மற்ற எதற்கும் அடிமையாக இல்லை என்றாகிறது; இதனால் “தனக்கு மட்டுமே உரியன்” என்பதன் மூலம் அடிமைத்தனம் தோன்றாமல் இருந்துவிடும் என்பதால் விரோதியாகிறது. “தத்சேஷ” என்றது ஏன்? “எனக்கே உரியன்” என்ற நிலை மாறிப்போய் அடிமைத்தனத்தில் நின்றபோதிலும், எம்பெருமானை விடுத்து மற்றொரு வஸ்துவிற்குத் தான் அடிமை என்ற நிலையில் இருக்கக்கூடும்; இப்படிப்பட்ட நிலையானது, எந்தவிதமான காரணமும் இல்லாமலேயே நமக்கு எஜமானனாக உள்ள எம்பெருமானிடம் அடிமைத்தனம் கொள்வதைத் தடுத்துவிடும்.