Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 74)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

இதுதான் வந்தேறியன்று.

இது ஸ்வரூப நிரூபகமாகில் ஆத்மாவுள்ளவன்றே தொடங்கியுண்டாய்ப் போரவேண்டாவோ, இதுக்கு முன்பின்றிக்கே இப்போதுண்டாகையாலும், லோகத்திலிதுதான் ஔபாதிகமாய் நடக்கக் காண்கையாலும், தாஸ்யமாத்மாவுக்கு வந்தேறியன்றேவென்னவருளிச்செய்கிறார் (இதுதான் வந்தேறிய யன்று) என்று தொடங்கி.

இத்தகைய சேஷத்வம் (அடிமைத்தனம்) என்பது ஆத்மாவின் ஸ்வரூபத்தை நிரூபிப்பதாக உள்ளதாக என்றால், இத்தகைய கைங்கர்யம் என்பது ஆத்மா இருக்கும் போதே தொடங்கியிருக்க வேண்டும் அல்லவோ? இதற்கு முந்தைய காலத்தில் இல்லாமல் இப்போது உள்ளதாலும், இந்த உலகில் ஏதோ ஒரு காரணத்தின் பின்னரே கைங்கர்யம் உண்டாவதாலும், இத்தகைய அடிமைத்தனம் என்பது ஆத்மாவிற்கு இடையில் வந்து சேர்ந்த தன்மையே அல்லவோ? இந்தக் கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

(இதுதான்) என்று ப்ரக்ருதமான தாஸ்யத்தைப் பராமர்சிக்கிறது. (வந்தேறி யாவது) - ஆகந்துகம். (அன்று) என்கையாலே – ஸ்வாபாவிகமென்றபடி. ”ஸ்வோஜ் ஜிவநேச்சா யதி தே ஸ்வ ஸத்தாயாம் ஸ்ப்ருஹா யதி, ஆத்மதாஸ்யம் ஹரேஸ் ஸ்வாம்யம் ஸ்வபாவஞ்ச ஸதா ஸ்மர”, ”நானு முனக்குப் பழவடியேன்” என்னக்கடவதிறே.

– ”இதுதான்” என்னும் பதம், மேலே கூறப்பட்ட அடிமைத்தனத்தை உரைக்கிறது. ”வந்தேறி” என்றால் நடுவில் வந்து சேர்ந்த தன்மை என்பதை உணர்த்துகிறது. “அன்று” என்பதால் அடிமைத்தனம் என்பது “நடுவில் வந்தது அல்ல. இயல்பாகவே உள்ளது” என்று உணர்த்தப்பட்டது. கீழே உள்ள வரிகள் காண்க: ஸ்வோஜ் ஜிவநேச்சா யதி தே ஸ்வ ஸத்தாயாம் ஸ்ப்ருஹா யதி, ஆத்மதாஸ்யம் ஹரேஸ் ஸ்வாம்யம் ஸ்வபாவஞ்ச ஸதா ஸ்மர - உன்னுடைய ஆத்மா பிழைக்கவேண்டும் என்று எண்ணினால், ஆத்மாவானது “இருக்கிறது” என்ற நிலை ஏற்படவேண்டும் என்று விரும்பினால் நீ நினைக்கவேண்டியது இரண்டாகும். அவை: ஆத்மாவிற்கு உள்ள அடிமைத்தன்மை, ஸ்ரீஹரிக்கு உள்ள எஜமானத்தன்மை என்பதாகும். திருப்பல்லாண்டு (11) - நானும் உனக்கு பழவடியேன்