Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 73)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

அஹமர்த்தத்துக்கு ஜ்ஞாநாநந்தங்கள் தடஸ்தமென்னும்படி தாஸ்யமிறே அந்தரங்க நிரூபகம்.

சேஷத்வாதிகளும் ஜ்ஞாத்ருத்வாதிகளும் ஆத்ம தர்மங்களாயிருக்கச் செய்தே, சேஷத்வாதிகளை ப்ரதாநமாக்கி ஜ்ஞாத்ருத்வாதிகளை ததநுகுணமாக யோஜிக்கைக்கு நியாமகமேது? மற்றைப்படி தானானாலோவென்ன வருளிச்செய்கிறார் (அஹமர்த்தத்துக்கு) என்று தொடங்கி.

– சேஷத்வம் போன்ற பலவும், அனைத்தையும் அறிந்து கொள்கின்ற தன்மை போன்ற பலறும் ஆத்மாவின் தர்மங்களாக உள்ளன. இப்படி உள்ளபோது சேஷத்வம் போன்ற பலவற்றை முக்கியம் என்று வைத்து, அறிந்து கொள்ளும் தன்மை போன்றவற்றை அந்த சேஷத்வம் உள்ளிட்டவற்றுக்குத் தகுதியான வைக்கின்ற காரணம் என்ன? அளிக்கின்ற தன்மைகள் போன்றவற்றை முக்கியமாக வைத்து, அதற்கு உறுப்பாக சேஷத்வம் போன்றவற்றை வைத்தால் என்ன என்றும் கேள்விகளுக்கு விடை அருளிச்செய்கிறார்.

(அஹமர்த்தமாவது) ப்ரத்யக்த்வேந அஹம் புத்தி வ்யவஹாரார்ஹமான ஆத்ம வஸ்து; ஜ்ஞாநாநந்தங்களாவன - தத்கதமான ப்ரகாசத்வாநுகூலத்வங்கள்; “ஜ்ஞாநாநந்தமயஸ் த்வாத்மா”, ”ஸ்வரூபமணுமாத்ரம் ஸ்யாத் ஜ்ஞாநாநந்தைக லக்ஷணம்” என்று இவற்றையிட்டிறே வஸ்துவை நிரூபிப்பது. (தடஸ்தமென்னும்படி) என்றது - பஹிரங்க நிரூபகதயா புறவிதழென்னும்படி யென்றபடி. (தாஸ்யமாவது) – சேஷத்வம். இது (அந்தரங்க நிரூபகமாகையாவது) - பகவத் ஸ்வரூபத்துக்கு ப்ரகாரதயா சேஷமாய்க் கொண்டு தன் ஸத்தையாம்படியிருக்கும் வஸ்துவாகையாலே, ப்ரதமம் சேஷத்வத்தை யிட்டு நிரூபித்துக்கொண்டே மற்றுள்ள ஆகாரங்களையிட்டு நிரூபிக்க வேண்டும்படி யிருக்கை. இத்தால் நிரூபகமாகையாவது - வஸ்துவை வஸ்த்வந்தரத்திற் காட்டில் வ்யாவர்த்திப்பிக்குமதாகையாலே, தாஸ்யம் ஈச்வர வ்யாவர்த்தகமாய், ஜ்ஞாநாநந்தங்கள் அசித்வ்யாவர்த்தகங்களாயிருக்கும்; இப்படி நிரூபக த்வயமும் வஸ்துவுக்கு அபேக்ஷிதமாயிருக்கச்செய்தே பகவத் ப்ரகாரதயா லப்த ஸத்தாகமான வஸ்துவுக்கு அசித்திற் காட்டில் உண்டான வாசியை யறிவிக்கிற மாத்ரமான ஜ்ஞாநாநந்தங்கள் புறவிதழாம்படி ப்ரகாரத்வ ப்ரயுக்தமான சேஷத்வமே அந்தரங்க நிரூபகமாயிருக்குமென்றதாய்த்து. (இறே) என்று – இவ்வர்த்தத்தில் ப்ரமாணப்ரஸித்தி. ப்ரதமம் சேஷத்வத்தையிட்டு வஸ்துவை நிரூபித்துக்கொண்டு, பின்னை ஜ்ஞாநாநந்த லக்ஷணமுமாய் ஜ்ஞாந குணகமுமாய் அசித்வ்யாவ்ருத்தமுமாயிருக்குமென்னுமிடத்தை த்ருதீய பதத்தாலே நிரூபிக்கிற ப்ரணவமும், ஸமஸ்த வஸ்துக்களும் ஸர்வேச்வரனுக்கு ப்ரகாரமென்னுமத்தை ப்ரதிபாதிக்கிற நாராயண பதமும், முதலானவை இதில் ப்ரமாணம். ”தாஸ பூதாஸ் ஸ்வதஸ் ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்மந: நாந்யதா லக்ஷணம் தேஷாம் பந்தே மோக்ஷே ததைவச” இத்யாதிகளுமுண்டிறே. ”அடியேனுள்ளான்” என்றாரிறே ஆழ்வார். திருக்கோட்டியூர்நம்பி ஸ்ரீபாதத்திலே ஆறுமாஸம் ஆழ்வான் ஸேவித்து நின்று மஹா நிதியாகப் பெற்ற அர்த்தமிறேயிது. இப்படி சேஷத்வம் அந்தரங்க நிரூபகமாகையாலே நிரூபித ஸ்வரூப விசேஷணங்களான ஜ்ஞாத்ருத்வாதிகளையே ததநு குணமாக யோஜிக்க வேணுமென்று கருத்து.

“அஹம் அர்த்தம்” என்றால் என்ன? தன்னைத்தானே அறியவல்ல தன்மை காரணமாக ”நான் என்ற எண்ணம், நான் என்று கூறவைப்பதற்கும்” உரிய விஷயமாக உள்ள ஆத்ம வஸ்துவாகும். “ஞான ஆநந்தங்கள்” – அந்த ஆத்மாவின் ஞானம் (ப்ரகாசம்) மற்றும் ஆனந்தங்கள் ஆகும். கீழே உள்ள வரிகள் மூலமாக ஆத்மாவை நிரூபிப்பர்: ஜ்ஞாநாநந்தமயஸ் த்வாத்மா – ஞானம் மற்றும் ஆனந்தம் ஆகியவற்றை வடிவமாகக் கொண்ட ஆத்மா ஸ்வரூபமணுமாத்ரம் ஸ்யாத் ஜ்ஞாநாநந்தைக லக்ஷணம் – ஆத்மா அணுபரிணாமமே உள்ளது, அது ஞானம் மற்றும் ஆனந்தமயமானது. ”தடஸ்தம்” - புறத்திலும் நிரூபகமாக உள்ளதால் புறவிதழ் என்னும்படி உள்ள தன்மை. ”தாஸ்யம்” – சேஷத்வம் கூறப்பட்டது. ”அந்தரங்க நிரூபகம்” - எம்பெருமானின் ஸ்வரூபத்திற்குச் சரீரமாக ஆத்மா உள்ளதால், அவனது சேஷமாய் நின்றால் மட்டுமே தனது இருப்பு உள்ளது என்றபடி உள்ளது ஆத்மாவாகும். எனவே முதலில் சேஷத்வத்தைக் கூறி நிரூபித்த பின்னரே மற்ற தன்மைகளைக் கொண்டு நிரூபித்தல் வேண்டும் என்றாகிறது. நிரூபகம் என்றால் ஒரு வஸ்துவை மற்றொரு வஸ்துவைக் காட்டிலும் வேறானது என்று வேறுபடுத்திக் காட்டுதல் ஆகும். ஆகவே சேஷத்வம் என்பது ஆத்மாவை எஜமானனாகிய எம்பெருமானிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது, ஞானம் மற்றும் ஆனந்தம் ஆகியவை ஆத்மாவை அசித் வஸ்துக்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது என்று அறிக. இவ்விதம் மேலே கூறப்பட்ட இரண்டுவிதமான நிரூபகங்களும் ஆத்மாவிற்கு அவசியமானவை ஆகும். ஆனால் எம்பெருமானின் சரீரம் என்னும் தன்மையால் மட்டுமே தான் தரிக்கின்ற நிலையைப் பெற்றது ஆத்மாவாகும். இதனால் அசித் வஸ்துவைக் காட்டிலும் ஆத்மா வேறுபட்டது என்பதை அறிவிக்கின்ற ஞானம் மற்றும் ஆனந்தம் ஆகிய இரண்டும் புறஇதழ் போன்றவையே ஆகும். எம்பெருமானின் சரீரம் என்ற தன்மை காரணமாக உண்டான அடிமைத்தனம் என்பதே அந்தரங்கமாகும் என்று அறிய வேண்டும். “இறே” என்ற பதம் மூலம் இந்தப் பொருளின் ப்ரமாணங்களைக் கூறுகிறார். ஆத்மாவிற்கு சேஷத்வம் என்பதே அந்தரங்கம், ஆனந்தம் மற்றும் ஞானம் ஆகிய இரண்டும் வெளி அளவில் மட்டுமே என்பதற்கான ப்ரமாணம் என்ன? சேஷத்வத்தை முதலில் கூறிவிட்டு, அதன் பின்னர் ஞானம் மற்றும் ஆனந்தம் ஆகியவையாக, ஞானம் என்னும் குணம் உள்ள, அசித் வஸ்துவைக் காட்டிலும் மாறுபட்ட ஆத்மா என்பதை தனது மூன்றாம் எழுத்து மூலமாக நிரூபிக்கின்ற ப்ரணவம்; அனைத்தும் ஸர்வேச்வரனின் சரீரம் என்று கூறுகின்ற நாராயண என்னும் பதம் – ஆகிய இரண்டும் இதற்கு ப்ரமாணங்கள் ஆகும். ஹாரித ஸ்ம்ருதி - தாஸ பூதாஸ் ஸ்வதஸ் ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்மந: நாந்யதா லக்ஷணம் தேஷாம் பந்தே மோக்ஷே ததைவச - பரமபுருஷனாக உள்ள எம்பெருமானுக்கு அனைத்து ஆத்மாக்களும் இயற்கையிலேயே அடிமைகள் ஆகும்; இது போன்று ஆத்மாக்களுக்கு இந்தச் சரீரத்துடன் கட்டுப்பட்ட நிலையிலும் மோக்ஷத்தைக் காட்டிலும் வேறான தன்மை ஏதும் இல்லை - என்பது ப்ரமாணம் ஆகும். திருவாய்மொழி (8-8-2) - அடியேன் உள்ளான் – என்றது. திருக்கோட்டியூர் நம்பியின் திருவடிகளில் கூரத்தாழ்வான் ஆறு மாத காலங்கள் வணங்கி நின்று அடைந்த பொக்கிஷம் இந்தக் கருத்தே ஆகும். ஆகவே சேஷத்வம் என்பது அந்தரங்கமாக உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டதால், இவ்விதம் நிரூபிக்கப்பட்ட ஆத்மாவின் தன்மைகளான ஞானம் கொண்ட தன்மை போன்றவை, இந்தகைய சேஷத்வத்திற்குத் தகுதியானவை என்று உணர வேண்டும்.