Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 72)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

ப்ரப்ரயோஜந ப்ரவ்ருத்தி ப்ரயத்நபலம்: த்த்விஷய ப்ரீதி சைதந்யபலம்.

ஆனால் இப்படி ஸ்வ்யத்ந ஸ்வப்ரயோஜநங்களிலந்வயமற்றிருக்குமாகில், இவனுடைய ப்ரயத்நத்துக்கும் சைதந்யத்துக்கும் ப்ரயோஜநமென்னென்ன வருளிச் செய்கிறார் (ப்ரப்ரயோஜந) இத்யாதி வாக்ய த்யத்தாலே.

ஆனால் இவ்விதம் ஒருவன் தனது முயற்சிகள் மற்றும் பலனில் பற்றுகள் இன்றி இருக்கிறான் என வைப்போம். அப்படி என்றால் இவனது முயற்சி மற்றும் ஞானம் ஆகியவற்றின் பயன் என்ன என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி”, “வழுவிலா வடிமை செய்யவேண்டும்”, “உனக்கே நாமாட் செய்வோம்” என்கிறபடியே பரனுக்கு ப்ரயோஜநமாகப் பண்ணும் கைங்கர்யரூப ப்ரவ்ருத்தி இவனுடைய ப்ரவ்ருத்த்யுத் யோகரூபமான ப்ராயத்நத்துக்கு ப்ரயோஜநம். “நித்யகிங்கர: ப்ரஹர்ஷயிஷ்யாமி” என்கிறபடியே – அத்தலையிலுகப்புக் குறுப்பாகத் தான் பண்ணுகிற கைங்கர்யத்தாலே அத்யந்த ஹ்ருஷ்டனாயிருக்கிற அந்த பரனை விஷயமாகவுடைத்தான ப்ரீதி, இவனுடைய அசித் வ்யாவ்ருத்தி ரூபமான சைதந்யத்துக்கு ப்ரயோஜநமென்கை. “படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே” என்னக்கடவதிறே. இத்தால் - பாரதந்த்ர்ய சேஷத்வங்களாலே பலித்த ஸ்வயத்ந ஸ்வப்ரயோஜந நிவ்ருத்திகளையுடையனான சேதநனுடைய ப்ரயத்ந சைதந்யங்களுக்கு, பாரதந்த்ர்ய சேஷத்வாநுகுணமாக ப்ரயோஜநங்கள் சொல்லிற்றா ய்த்து.

இவனால் ஒரு செயலைச் செய்யமுடியும் என்ற முயற்சிக்கான பலன் என்னவென்றால் கீழே உள்ள வரிகளில் உள்ளது போன்று, எம்பெருமானுக்குச் செய்யும் கைங்கர்யமே ஆகும்: இராமாயணம் அயோத்யாகாண்டம் (31-25) - அஹம் ஸர்வம் கரிஷ்யாமி – நான் உனக்கு அனைத்துவிதமான கைங்கர்யங்களும் செய்வேன் திருவாய்மொழி (3-3-1) - வழுவிலா வடிமை செய்யவேண்டும் திருப்பாவை (29) – உனக்கே நாமாட் செய்வோம் அசித் வஸ்துவான சரீரத்தைக் காட்டிலும் இவனை வேறுபடுத்திக் காண்பிக்கின்ற இவனது ஞானத்திற்கு என்ன பயன் என்றால், ஸ்தோத்ரரத்னம் (46) – நித்யகிங்கர: ப்ரஹர்ஷயிஷ்யாமி – ஆத்மா உள்ளவரையில் செய்யவேண்டியதான கைங்கர்யங்கள் அனைத்தையும் செய்து, அதன் மூலம் உன்னை மகிழச் செய்வேன் - என்பதற்கு ஏற்ப, அவனது மகிழ்வுக்காகத் தான் செய்யும் கைங்கர்யங்கள் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தவனாகிய அந்த எம்பெருமானை விஷயமாகக் கொண்ட ப்ரீதியே ஆகும். பெருமாள்திருமொழி (4-9) - படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே – என்றது காண்க. இப்படியாக இவனது பாரதந்த்ர்யம் மற்றும் சேஷத்வம் ஆகிய இரண்டின் மூலம் “தனது முயற்சிகளில் இருந்து விலகுதல் மற்றும் தனக்கே பயன் என்று கொள்ளாமை” ஆகிய இரண்டும் பலிக்கின்றன. இப்படியாக உள்ள இவனுக்கு இவனது முயற்சி மற்றும் ஞானம் ஆகிய இரண்டிற்கும், இவனது பாரதந்த்ர்யம் மற்றும் சேஷத்வம் என்பதற்கு ஏற்றபடி உள்ள பலன்கள் உரைக்கப்பட்டன.