Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 71)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

ஸ்வயத்த நிவ்ருத்தி பாரதந்த்ர்ய பலம்; ஸ்வப்ரயோஜந நிவ்ருத்தி சேஷத்வ பலம்.

ஆனால் ஜ்ஞாத்ருத்வ கார்யமான கர்த்ருத்த்வ போக்த்ருத்வங்களையுடைய வனாகையாலே ஸ்வயத்ந ஸ்வப்ரயோஜநங்களுக்கு அர்ஹனாயிருக்க, இவை யிரண்டினுடையவும் நிவ்ருத்தி இவனுக்கெவ்வழியாலே வருகிறதென்கிற சங்கையிலே அத்தையருளிச் செய்கிறார் (ஸ்வயத்ந நிவ்ருத்தி) இத்தியாதி வாக்ய த்வயத்தாலே.

– ஆனால் ஜீவன் ஞானமயமாக உள்ளதால் அந்த ஞானத்தின் செயலாகிய காரியத்தைச் செய்பவனாக இருத்தல், அதற்கான பலனை அனுபவிக்கவல்லவனாக இருத்தல் ஆகிய இரண்டும் கைகூடும் அல்லவோ? இப்படி உள்ளபோது, தான் எந்த ஒரு முயற்சியிலும் இறங்குதல், பலனை அடையும் தகுதி பெற்றிருத்தல் ஆகிய இரண்டும் இவனை விட்டு எவ்விதம் நீங்குகிறது என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

அதாவது ஜ்ஞாத்வத்வ நிபந்தநமான கர்த்ருத்வமுண்டாயிருக்கச் செய்தே பகவத் ப்ராப்திக்குத் தானெரு யத்நம் பண்ணாமலிருக்கையாகிற இந்த ஸ்வயத்ந நிவ்ருத்தி, பராதீந ஸ்வரூப ஸ்தித்யாதிமத்தவமாகிற பாரதந்த்ர்யத்தின் கார்யம்; அப்படியே, போக்த்ருத்வமுண்டாயிருக்கச் செய்தே அத்தலையை ரஸிப்பிக்குமதொழிய தனக்கென்ன ஒன்றில் ரஸமின்றிக்கேயிருக்கையாகிற ஸ்வப்ரயோஜன நிவ்ருத்தி, பராதிசயாதாயகத்வமே வடிவாயிருக்கையாகிற சேஷத்வத்தின் கார்யம். இத்தால் - பாரதந்த்ர்ய சேஷத்வங்களிரண்டும் ஆத்மாவுக்கு ஸ்வரூபமாகையாலே, அவ்வாகாரங்களை யறியவே இவையிரண்டும் தன்னடையே வருமென்றதாய்த்து.

– ஞானம் உள்ளதன் காரணமாக கர்த்தாவாக உள்ள தன்மை ஜீவனுக்கு உண்டு. ஆனால் எம்பெருமானை அடைவதற்கான எந்த முயற்சியும் தானே செய்யாமல் இருத்தல் என்று “தனது முயற்சியில் இருந்து விலகுதல்” என்னும் நிலை எவ்விதம் உண்டாகும் என்றால் – எம்பெருமானுக்கு மட்டுமே வசப்பட்டுள்ள ஆத்மாவின் தன்மை, அதன் நிலை, காரியங்கள் செய்தல் மற்றும் செய்யாமை என்பதான பாரதந்த்ரியத்தின் மூலம் உண்டாகும். இது போன்று பயனை அனுபவித்தல் என்பதும் இவனுக்கு இயல்பாக உண்டு. ஆனால், எம்பெருமானை அனுபவிப்பவனாக்குவது அல்லாமல் தனக்கு என்று எந்தவிதமான சுவையும் இன்றி இருத்தல் என்பதான “தனது பயனில் இருந்து விலகுதல்” என்பது எவ்விதம் உண்டாகும் என்றால் – அவனுக்கு மகிழ்வை ஏற்படுத்துதல் என்பதையே வடிவாகக் கொண்ட அடிமைத்தனத்தின் மூலம் உண்டாகும். இதன் மூலம் ஆத்மாவின் இயல்பான தன்மைகளாக ”அவனுக்கு மட்டுமே வசப்படுதல், அவனுக்கு எப்போதும் அடிமையாக இருத்தல்” என்பவை மட்டுமே உள்ளன என்பதை உணர்ந்தால் மேலே கூறப்பட்ட இரண்டு நிலைகளும் தாமாகவே உண்டாகும் என்கிறார்.