Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 70)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்குகப்பானுமவனே.

ப்ராபகன் ஈச்வரனானாலும் ப்ராப்தாவும் ப்ராப்திக்குகப்பானும் இவனன்றோ, ஆனபின்பு இவன்னினைவையிப்படி நேராகத் துடைக்கலாமோ வென்ன அருளிச்செய்கிறார் (ப்ராப்தாவும்) என்று தொடங்கி. அன்றிக்கே, இச்சேதநன்  கையிலுள்ளவற்றில் உபாயத்பகந்தமறத் துடைத்து ஈச்வரனை உபாயமென்று நிஷ்கர்ஷித்தபோதே, ப்ராப்த்ருத்வமும் ப்ராப்தியில் வருமுகப்பும் இவனதன்றிக்கே, உபாய பூதனான ஈச்வரனதேயாய்ப் பலித்து விடுகையாலே (ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானுமவனே) என்று நிகமித்தருளுகிறாராகவுமாம்.

– “ எம்பெருமானை அடைய வைப்பது” என்ற செயலைச் செய்வது (ப்ராபகன்) எம்பெருமானே ஆவான். ஆனாலும் அவனை அடைகின்றவனும் (ப்ராப்தா), அப்படி அடைந்த காரணத்தினால் (ப்ராப்தி = அடைதல்) மகிழ்வதும் எம்பெருமானை அடைந்த சேதனன் அல்லவோ என்று கேள்வி எழலாம். இதற்கு இந்தச் சூர்ணையில் விடை அளிக்கிறார். அல்லது வேறுவிதமாகவும் அவதாரிகையின் பொருள் கொள்ள இயலும். சேதனனிடம் எம்பெருமானை அடைகின்ற செயலுக்கான உபாயம் ஏதும் இல்லை என்று முடிவு செய்யக்கூடும். அந்த நிலையில் அடையும் தன்மை மற்றும் அப்படி அடைவதன் மூலம் ஏற்பட்ட மகிழ்ச்சி ஆகிய இரண்டும் சேதனனுக்கு உடையது அல்ல, அவை உபாயமாக உள்ள ஸர்வேச்வரனுக்கு உள்ள தன்மைகள் என்றாகிறது. எனவே எம்பெருமானே ”ப்ராப்தா, ப்ராபகன், ப்ராப்திக்கு உகப்பவன்” என்றாகிறது.

ப்ராப்தா அவனாகையாவது “ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்” என்கிற ஸ்வதஸ் ஸித்தமான ஸ்வஸ்வாமித்வ ஸம்பந்தமடியாக, உடைமையை ப்ராபிக்குமுடையானைப்போலே இவ்வாத்மாவை ப்ராபிப்பான் தானாயிருக்கை. ப்ராபகன் அவனாகையாவது - தான் இவனை ப்ராபிக்குமிடத்தில் ப்ராப்திக்கு உபாமும், ஸர்வஜ்ஞத்வ ஸர்வசக்தித்வ ஸத்ய ஸங்கல்பத்வாதி குணவிசிஷ்டனாய் நிரங்குச ஸ்வதந்த்ரனான தானாயிருக்கை.  ப்ராப்திக்குகப்பான்  அவனாகையானது - ஸ்வத்தினுடைய லாபத்திலே தத் போக்தாவான ஸ்வாமி ஹ்ருஷ்டனாமாப்போலே, இவனை ப்ராபித்தால் ப்ராபிக்கப் பெற்றோமே! என்று உகப்பானும் இவ்வாத்மாவுக்கு நித்யபோக்தாவான தானாயிருக்கை. இவை மூன்றும் (அவனே) என்கிற அவதாரணத்தாலே – இவற்றிலிவனோடு அந்வயிப்பதொன்றுமில்லை யென்கை. இதில் (ப்ராப்தாவும் ப்ராபகனும் அவனே) என்கையாலே - இவனுக்கு ஸ்வயத்நத்திலே அந்வயமில்லையென்னுமிடமும், (ப்ராப்திக்கு உகப்பானுமவனே)  என்கையாலே ஸ்வப்ரயோஜநத்தில் யெல்னுமிடத்தில் அந்வயமில்லையென் னுமிடமும் ஸித்தமாய்த்து.

எம்பெருமான் ப்ராப்தா(அடைகிறவன்) ஆவது எப்படி? மஹாபாரதம் - ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் - ஸர்வேச்வரனுக்கு உரிய சொத்தாக இருப்பது என்னும் தன்மை ஆத்மாவிடம் உள்ளது, இத்தகைய சொத்தின் எஜமானனாக இருக்கும் தன்மை என்பது ப்ரஹ்மமாகிய நாராயணனிடம் உள்ளது - என்றது காண்க. இப்படியாக இயற்கையாகவே எம்பெருமானின் “உடைமையை உடையவன்” என்ற தொடர்பு காரணமாகத் தனக்கு உரியதை அடைபவன் போன்று ஆத்மாவை அடைபவனாக உள்ளான். எம்பெருமான் ப்ராபகன் (அடைவிப்பவன்) ஆவது எப்படி? எம்பெருமானாகிய தான் ஜீவனை அடைகின்றபோது அடைய வைக்கும் உபாயமும்; அனைத்தும் அறிந்தவன், அனைத்து வலிமையும் கொண்டவன், ஸத்யஸங்கல்பன் போன்ற குணங்களுடன் எந்தவிதமான இடையூறும் இல்லாத பரிபூர்ண சுதந்திரமும் கொண்டவனாக இருத்தல் மூலம் ஆகும். எம்பெருமானே ப்ராப்திக்கு உகப்பவன் என்பது எப்படி? தனக்கு உரிய பொருள் ஒன்றை அடையும்போது, அதாவது ஜீவனை அடையும்போது ”இவனை அடைந்துவிட்டோம்” என்று எம்பெருமான் மகிழ்கிறான். இத்தகைய ஆத்மாவை எப்போதும் அனுபவித்தபடி உள்ளான். இதனால் இவனே ப்ராப்திக்கு உகப்பவன் ஆகிறான். இதனால் மூன்றும், “அவனே” என்று ஏவகாரத்தில் கூறுவதால் இந்த மூன்றுள் இவனுடன் சேர்வது ஏதும் இல்லை என்றார். “ப்ராப்தாவும் ப்ராபகனும் அவனே” என்பதன் மூலம் எம்பெருமானை அடைவதற்கு வேறு உபாயங்களைக் கைக்கொள்ளும் முயற்சி ஜீவனிடம் இல்லை என்பது உணர்த்தப்பட்டது. “ப்ராப்திக்கு உகப்பவன் அவனே” என்பதன் மூலம் ஸர்வேச்வரனின் இன்பத்திற்காக தான் உள்ளானே தவிர, தனக்கு என்று எந்தப் பயனும் கொள்வதில்லை என்பது உணர்த்தப்பட்டது.