Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 69)
இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்
”அந்திம காலத்துக்குத் தஞ்சம், இப்போது தஞ்சமென் என்கிற நினைவு குலைகை” என்று ஜீயரருளிச் செய்வர்.
இவ்வர்த்தத்தினுடைய ஆப்த்யர்த்தமாக நஞ்சீயர் வார்த்தையையருளிச் செய்கிறார் (அந்திம காலத்துக்கு) என்று தொடங்கி.
மேலே கூறப்பட்ட சூர்ணையின் பொருளானது நம்பகத் தன்மை நிறைந்தது என்று உணர்த்தும் விதமாக நஞ்சீயரின் சொற்களை இங்கு அருளிச்செய்கிறார்.
அதாவது நஞ்சீயர், தம்முடைய ஸ்ரீபாதத்திலேயுள்ளாரொரு ஸ்ரீவைஷ்ணவரை நோவறிகைக்காகச் சென்றெழுந்தருளியிருக்கிறவளவிலே, அந்த ஸ்ரீவைஷ்ணவர், “அடியேனுக்கு அந்திம காலத்துக்குத் தஞ்சமாயிருப்பதொன் றருளிச் செய்யவேணும்” என்ன, “அந்திம காலத்துக்குத் தஞ்சம் நமக்கிப்போது தஞ்சமென் என்கிற தன்னுடைய ஸ்வரக்ஷண சிந்தை குலைகை காணும்” என்றருளிச் செய்த வார்த்தை. ஆகையாலே, ஈச்வரன் இவ்வாத்மோஜ்ஜீவநத்துக்குக் குறுப்பாகப் பண்ணும் சிந்தை பலிப்பது இவனுடைய ஸ்வரக்ஷண சிந்தை மாறினாலென்றதாய்த்து.
நஞ்சீயர் தனது சிஷ்யர்களில் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்று அறிந்து, அவரைக் காண்பதற்காகச் சென்றார். அப்போது அந்த சிஷ்யர் அவரிடம், ”அந்திம காலத்தில் எனக்குத் தஞ்சமாகப் பற்றுவதற்கு ஏற்ற ஒன்றை அருளிச்செய்ய வேண்டும்”, என்றார். இதற்கு நஞ்சீயர், ”அந்திம காலத்தில் எனக்குத் தஞ்சம் எது, இப்போது எனக்குத் தஞ்சம் எது என்ற வேறுபாட்டை விலக்குவாயாக. இப்போது உன்னை நீயே காத்துக் கொள்ள இயலும் என்ற சிந்தனை இருக்கின்ற காரணத்தினால் அல்லவோ இப்படி வினவுகிறீர்? இதனை நீக்குவாயாக”, என்றார். ஆக சேதனன் உய்யவேண்டும் என்பதற்கு உறுப்பாக எம்பெருமான் ஜீவனைப் பற்றி எண்ணி இருத்தல் என்பது எப்போது பலன் அளிக்கும் என்றால், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுதல் என்ற எண்ணம் ஜீவனிடம் நீங்கினால் மட்டுமே ஆகும்.