Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 66)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

“உன்மனத்தா லென்னினைந் திருந்தாய்” என்கிறபடியே ப்ராப்திக்கு உபாயம் அவன் நினைவு.

இப்படி இவன் பக்கலுள்ளதொன்று முபாயமன்றாகில் இவனுக்கு தத் ப்ராப்த்யுபாயந்தா னேதென்ன வருளிச்செய்கிறார் (உன் மனத்தால்) என்று தொடங்கி.

இவ்விதம் சேதனன் பக்கம் உள்ள எதுவும் சேதனன் அவனை அடையும் உபாயம் அல்ல என்றால், அவனை அடையும் வழி என்ன என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

அதாவது, இத்தலையிலுள்ளதொன்றும் பேற்றுக்குபாய மல்லாமையாலே, ”உன் மனத்தாலென்னினைந்திருந்தாய்” என்று – கை கழிந்தவற்றுக்குமொரு போக்கடி பார்த்திருக்கக் கடவ உன் திருவுள்ளத்தால் நினைத்திருந்ததென்னென்று, ஹிதைஷியான அவன் நினைவே உபாயமென்று ஆழ்வாரநுஸந்தித்தபடியே, அவனை ப்ராபிக்கைக்குபாயம் – ஸர்வஜ்ஞனாய் ஸர்வ சக்தியாய் ப்ராப்தனாய் பரமதயாளுவாய் இருக்கிற அவனுடைய இச்சேதநோஜ் ஜீவநார்த்தமான நினைவென்றபடி.

பெரியதிருமொழி (12-7-1) - உன் மனத்தால் என்னினைந்திருந்தாய் - என்று கூறுவதற்கு ஏற்ப, ”எதனாலும் காப்பாற்ற இயலாது என்று கைவிட்ட நிலையிலும் ஏதேனும் உதவ இயலுமா என்று உனது மனதால் நினைப்பது என்னே குணம்” என்று நமது நலத்தை எண்ணியபடி எம்பெருமான் உள்ளான். நம்மிடம் உள்ள எதுவும் இப்படிப்பட்ட இவனை அடையும் பேறு என்பதற்கான உபாயம் அல்லாத காரணத்தினால், அவனது நினைவு மட்டுமே உபாயம் என்று திருமங்கையாழ்வார் அருளிச்செய்தது போன்று, அவனது நினைவு மட்டுமே அவனை அடைவதற்கான உபாயம் ஆகிறது. அனைத்தும் அறிந்தவனாக, அனைத்து வல்லமையும் கொண்டவனாக, நமக்கு ஸம்பந்தம் உடையவனாக, பரம தயாளுவாக உள்ள அவன் இந்தச் சேதனனைப் பற்றி எண்ணுவதே உய்வதற்கான உபாயம் என்று கொள்க.